ஒபிஎஸ் தம்பிக்கு தனி விமானம்-மனிதாபிமானமா அதிகாரதுஷ்பிரயோகாமா?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் சுவாக்கோளாறு காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை அப்பல்லோவுக்கு அரசு செலவில் அவர் கொண்டு வரப்பட்டுள்ளது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மூன்று தம்பிகள் ஒரு அண்ணன். நான்கு சகோதரிகள் உண்டு. இதில் இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகனுக்கு கடந்த ஜூன் மாதம் இறுதியில் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. கடுமையான சுவாசக்கோளாறு காரணாமாக மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஓ.பாலமுருகனின் உடல் நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், அவரை மதுரையில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு வர துணை முதல்வர் பன்னீர்செல்வம் முயற்சி எடுத்தார்.
இது அனைத்துமே சத்தமில்லாமல் நடந்து வந்து நிலையில், முதன் முதலாக இதை பொதுவெளியில் போட்டு உடைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். ஊடகச்சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட எடப்பாடியாரிடம் “என்ன காரணத்திற்காக பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார்?” என்று நிருபர்கள் கேள்வி கேட்ட போது, அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி “அவரது தம்பி சிகிச்சைக்காக தனி விமானம் கொடுத்து உதவிய மத்திய அரசுக்கு நன்றி சொல்லச் செல்கிறார்” என்று கூறினார். அப்போதுதான் தமிழக மக்களுக்கு தெரிந்தது துணை முதல்வரின் தம்பி சிகிச்சைக்கு தனி விமானத்தை இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வழங்கியிருக்கிறார் என்று.
ஓ.பாலமுருகன் எந்த அரசுப்பதவியிலும் இல்லாதவர், கட்சி பிரமுகராக இருக்கலாம்.ஆனால் மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர் அல்ல, அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி என்பதாலே ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் தனி விமானம் அனுப்படும் என்றால் இவைகள் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நடந்த உதவியா? அப்படி மனிதாபிமானம் என்றால் எத்தனையோ ஏழைகள் உரிய மருத்துவ சிகிச்சையின்றி இறந்து போகிறார்கள் அவர்களிடம் ஏன் காட்டப்படுவதில்லை இந்த மனிதாபிமானம்.
ஓக்கி புயலில் சிக்கி பல நூறு மீனவர்கள் கடலில் தத்தளித்த போது மீட்பு பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் பல நூறு மீனவர்களின் உயிருக்கு உலை வைத்தது.அப்போது இந்திய கப்பல்படையும் விமானங்களும் 60 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சென்று தேட சட்டத்தில் இடமில்லை என்று சொன்னதாக மீனவர்கள் குற்றம் சுமத்தினார்கள். விதிமுறைகளைக் காரணம் காட்டி மீனவர்களைத் தேடும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சென்னைக்கு கொண்டு வர தனி விமானம் அனுப்பியதில் விதிமுறைகள் மீறப்பட்டனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஒருவர் துணை முதல்வராக இருக்கிறார் என்பதாலேயே எந்த அரசு பதவிகளிலும் இல்லாத ஒருவருக்கு தனி விமானம் அனுப்பப்படுகிறது. இதுதான் நமது டிஜிட்டல் இந்தியாவின் மனிதாபிமானம்.

 

#ஒபிஎஸ்_குடும்பம் #ஓபிஎஸ்_தம்பிக்கு_தனி_விமானம் #ஓ_பாலமுருகன் #பன்னீர்செல்வம்தம்பி_பாலமுருகன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*