சமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்- அருண் நெடுஞ்செழியன்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தோழர் அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ,கணவனை இழந்த,மகனை இழந்த பெண்களின் மரண ஓலங்கள் நமது நெஞ்சில் இறங்கும்போதெல்லாம் இப்பாடல் நினைவிற்கு வந்துகொண்டே இருந்தது.போலவே,படகோட்டி படத்தில் மீனவனாக அம்மக்கள் துயரத்தை பாடியும் நடித்தும் அம்மக்கள் மனதை வென்றும் அதை தேர்தல் அரசியலில் அறுவடை செய்து ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் ,எதார்த்தத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததும் நினைவிற்கு வந்து போனது.

கரைக்கு அப்பால் இயற்கை பேரிடர்,கரையைத் தாண்டி சமவெளியிலோ வழிந்தோடுகிற துரோகங்கள்.அரசின் தொடர் ஒடுக்குமுறைகள்.படத்தில்,மகனை இழந்த தாய் ஒருவர் கூறுவது போல,எவ்வளவு பெரிய புயலையும் சூறாவளியையும் எதிர்கொள்கிற ஆற்றல் கொண்டவர்கள் எம்மக்கள்,துண்டு மரத்தை பலமணி நேரம் பற்றிக் கொண்டு உயிர் பிழைக்க முயற்சிப்பார்கள்.ஆனால் இரு பகல் இரு இரவு கடந்தும் மீட்பதற்கு எவரும் வராதபோது எவ்வாறு தப்புவது?உங்கள் பிள்ளைகளை உங்களிடம் சேர்ப்பேன் என வாக்கு கொடுத்து சென்ற அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் ஒரு பெண் தானே ?என கேள்வியெழுப்புகிறார்.

ஆனால் அரசு எந்திரம் எதார்த்தத்தில் என்ன செய்தது?படத்தில் ஒருவர் சொல்வதுபோல, கரை தெரிகிற தூரத்தில் மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள்.அதுவும் 30 ஆம் தேதியில் இருந்து தேடுதலை தொடங்குகிறார்கள்.சொந்த முயற்சியில் தப்பித்தவரை தாங்கள் காப்பாற்றியது போல ஜோடிப்பதிலும் ,பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதிலும் அரசு அக்கறை கொள்கிறது.இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!அனைத்து மக்களுக்குமான அரசு என அலங்காரம் செய்துகொண்டு சமூகத்தின் எஜமானனனாக,நமது வரிப்பணத்தில் ஆட்சி செய்பவர்கள் நமக்கானவர்கள் இல்லை என்பதையே முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி கால வரலாறாக உள்ளது.

ஓக்கி புயலில் அரசின் செயல்பாடின்மை என்பது தற்செயலானது,அல்லது நிர்வாக தொழில் நுட்ப குளறுபடியோ அல்ல.மாறாக,எந்த மக்களை காக்க வேண்டும் எந்த மக்களின் நலனுக்காக செயல்படவேண்டும் என்ற தெளிவான ஆளும்வர்க்க கொள்கை முடிவின்படி,மக்கள் கைவிடப்பட்டுள்ளனர்.
இந்த ஆவணப்படுத்தின் ஒவ்வொரு காட்சியும்,ஒவ்வொரு குரலும் இதையே எதிரொலிக்கிறது.இந்த அரசு எங்கே போனது ?என்பதுதான் மக்களின் கேள்வி.போலவே,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை துயரின் வடிகாலாக அதேசமயம் தனது வாழ்நிலை துயருக்கு எதிரான ஆட்சேபனையாக மதத்திடம் அடைக்கலம் தேடிய மக்களின் உணர்வை சர்சுகள் எவ்வாறு அறுவடை செய்கிறது என்பதை இப்படத்தில் தோழர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.மத்திய கால பழமைச்சின்ன அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டிய பழமைவாத பொருட்கள்,சமகாலத்தில் உயிர்ப்போடு உலாவி வருவதும்,ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வை கட்டுப்படுத்துவது நிழ்கால கொடுமையின் உச்சம்.

பெருங்கடல் வேட்டத்து ஆவணப் படம்,ஆன்மாவற்ற ஆளும்வர்க்கப் பண்பை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியுள்ளது.சிவில் சமூகத்தின் பொது புத்தியில் அரசு மீதான மூடபக்தியை ஒழிப்பதில் சமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*