சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: கொதிக்கும் சமூக வலைத்தளம்!

காது கேளாத, வாய்பேச முடியாத 11 வயது சிறுமி யை கடந்த ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்த 18 பேர் சென்னை அயனாவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 18 பேரையும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வந்த போது வழக்கறிஞர்கள் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர். சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமையும், அதையொட்டி நிகழும் சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.அதன் தொகுப்புகள் இங்கே..!

அமுதா சுரேஷ் (Amudha Suresh)
1. குழந்தைகளிடம் (பள்ளி – கல்லூரி எந்த வயது என்றாலும்) தினமும் பேசுங்கள், உங்களுக்கு அன்றைய தினம் எப்படிக் கழிந்தது, என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பகிர்ந்து அவர்களை அதிகம் பேச வையுங்கள்!

2. குற்றமோ குறையோ தெரிந்தால், மதிப்பெண் குறைவாக வாங்கினால், சக குழந்தைகளிடம் சண்டையிட்டால், “நாயே பேயே, சனியனே, பக்கத்துவீட்டுப் பையனை பாரு, இது அப்பனை போலவே எதுக்கும் உதவாது என்றோ, அம்மாவை போலவே சோம்பேறி” என்றோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஓப்பிட்டோ திட்டவோ, மட்டம் தட்டவோ செய்யாதீர்கள்!

3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமையுண்டு, அதை மேம்படுத்த உதவுங்கள், உங்கள் குழந்தை என்றாலும் அது இன்னுமொரு உயிரே தவிர, மருத்துவராகவோ, கலெக்டராகவோ உங்களுடைய தனிப்பட்ட நிறைவேறாத ஆசைகளையோ அல்லது குப்பைகளையோ சுமக்கும் எந்திரங்கள் அல்ல அவர்கள்

4. குழந்தை பேசினாலும் யார் பேசினாலும் கைபேசியை தள்ளி வைத்துவிட்டு கண்கள் பார்த்து பேசுங்கள், பேசுபவருக்கு மரியாதை தாருங்கள், பிள்ளைகளுக்கும் கற்றுத்தாருங்கள்!

5. ஆட்டோ ஓட்டுநர், வேன் ஓட்டுநனர், பணியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராய் இருந்தாலும், “அந்த மாமா ரொம்ப நல்லவரு” என்று குழந்தைகள் எதிரே யாருக்கும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ சான்றிதழ் தராதீர்கள், ஒருவேளை ஏதோ ஒரு கேடுகெட்டவன் தவறாய் நடக்க, தான் சொன்னால் பெற்றவர் நம்ப மாட்டார்கள் என்றே குழந்தை நம்பும், கெட்டவர்கள் என்று எல்லோரையும் பறைசாற்றும் போது, எல்லோரையும் கண்டு தேவையில்லாமல் மிரளும்! நல்லவர்களோ கெட்டவர்களோ, பெற்றவர்
இல்லாமல், பெண் உறவு இல்லாமல் யாரிடமும் தனித்திருப்பது தவறு என்றும், தலையைத் தவிர, கைகளைத் தவிர எங்கும் யாரும் தொடக்கூடாது என்று சொல்லி வையுங்கள்!

6. எந்த வாகனத்திலும் யாரையும் நம்பி பிள்ளைகளை தனியே அனுப்பாதீர்கள், சில விடலைப்பையன்கள் சிறு குழந்தைகளை பைக்கின் முன்னே உட்கார வைத்து விர்ரென்று சாலையில் பறப்பதும் நிகழ்கிறது, சில ஆட்டோ ஓட்டுநனர்கள் பெண் குழந்தைகளிடம் சில்மிஷம் செய்வதும் நிகழ்கிறது!

7. உங்கள் மதமோ சாதியோ பெண்களை வீட்டில் பூட்டி வைக்குமென்றால், உங்களை திருத்துவதை காலம் செய்யட்டும், ஆனால் உங்கள் பிள்ளைகளை தகப்பனாய், சகோதரனாய் நீங்கள் அழைத்துச்செல்லுங்கள், அதையும் ஒரு “டிரைவர் மாமாவிடம் விடாதீர்கள்!”

8. ஒவ்வொரு குழந்தைக்கும் “இரும்புச்சத்து” அவசியம், பல்வேறு சரிவிகித உணவுகள அவசியம், தினம் தினம் விதவிதமாய் “சீரியல்கள்” பார்த்து கண்ணீர் விடுவதற்கு பதில் விதவிதமாய் சமைத்துக்கொடுங்கள்! சமைக்கத் தெரியவில்லை என்றால் கையில் வைத்திருக்கும் கைபேசியில் உலகமே வரும், சமையல் குறிப்பு வராதா?

9. சாலையில் செல்லும்போது, பிள்ளைகளை உங்களது இடதுபக்கமோ அல்லது வாகனம் வராத பக்கமோ கைப்பிடித்து அழைத்துச்செல்லுங்கள். வாகனத்தில் சென்றால் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள்!

10. பொருட்காட்சி, கடற்கரை, கடைவீதி, திருமண விழாக்கள் என்று எங்கே சென்றாலும் (18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் தவிர்த்து) பிள்ளைகளை கும்பலோடு விளையாடட்டும் என்று விட்டுவிட்டு நீங்கள் ஊர்கதைகளில், வேடிக்கைகளில் திளைக்காதீர்கள்! பொது இடங்களில் கழிவறைக்கும் தனியே அனுப்பாதீர்கள்!

1 1. பள்ளிவிட்டு வரும்போது சரியான நேரத்தில் வருகிறார்களா என்று பாருங்கள், உங்களுடைய கேள்விகளும், கண்காணிப்பும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பையும் அரவணைப்பையும் தர வேண்டுமே தவிர, தேவையில்லாத பயத்தையும் உங்கள் மீதான சலிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது!

12. “ஆண்தான் உயர்ந்தவன் என்றும் பெண்பிள்ளை என்றால் அடங்கிப்போக வேண்டும்” என்றும் இருபாலரிடமும் சொல்லி வளர்ப்பதை நிறுத்தி, “மனிதத்தன்மை பற்றியும், அன்பு, அறன், ஒழுக்கம், சமையல், சுத்தம், வீரம், நேர்மை, விவேகம்” இவையெல்லாம் இருவருக்கும் பொது என்றும் சொல்லிலும் செயலிலும் நிலைப்படுத்துங்கள்!

13. பிள்ளைகள் முன்பு பொய் சொல்லி, பிள்ளைகள் முன்பு சண்டையிட்டு, பிள்ளைகள் முன் மரியாதையில்லாத வார்த்தைகளை பேசி, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதாக கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள், நாம் தருவதையே உலகம் நமக்கு திருப்பித்தரும், நாம் செய்வதையே பிள்ளைகளும் கற்கிறார்கள், “பூ மலர பூவின் விதையை விதைக்க வேண்டும்”

14. “மன்னிப்பும், நன்றியும்” நல்ல வார்த்தைகளே, “தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு” என்று அதை தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக உருவகப்படுத்தாமல், தவறு செய்வது மனித இயல்பு, அதை திருத்திக்கொள்வதும், மன்னிப்பும், நன்றியும் மனதிலிருந்து வரும் வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்று சொல்லி வளருங்கள்!

15. லூசுத்தனமான / சைக்கோத்தனமான ஹீரோக்களின் படங்களை பிள்ளைகளுடன் பார்ப்பதை தவிருங்கள், அவர்களையும் பார்க்க அனுமதிக்காதீர்கள்! பேய் படங்களை, ஆக்‌ஷன் படங்களை, அறிவியல் படங்களை பார்க்கும் போது, அது வெறும் படம், பாடமல்ல என்று எடுத்துச்சொல்லுங்கள்! ஆர்வமும் அதற்குரிய விஷய ஞானமும் இருந்தால், அதன் பின்னே உள்ள அறிவியலை, உளவியலை விளக்குங்கள்!

16. வளர்ந்த பிள்ளைகளிடம் “நோ” என்பது கெட்ட வார்த்தையல்ல, “நோ” விற்கு மாற்றாக ஒரு “எஸ்” வேறு இடத்திலோ வேறு வாய்ப்பாகவோ, அது கல்வி என்றாலும் காதல் என்றாலும் இருக்கும் என்று தெளிவுப்படுத்துங்கள்!

17. இவ்வளவும் படித்து, பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சுமையென்று கருதினால் இணையுடன் காமத்தை வெறும் வடிகாலாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு நிறுத்திவிடுங்கள், உயிரை கொண்டு வந்து வதைக்காதீர்கள்!

18. எத்தனை செய்தும், பிள்ளைகளுக்கு வன்கொடுமை நிகழ்ந்துவிட்டால், அதை “விபத்தென்று” கருதி, “விபத்தென்று” அவர்களுக்கு தெளிவுப்படுத்தி, இன்னமும் “தன்னம்பிக்கையுடன்” வாழ்க்கையை எதிர்நோக்க ஒரு நல்ல தோழமையாய் வழிகாட்டுங்கள்!
#
கமலினி பன்னீர்செல்வம் (Kamali Panneerselvam)
3 hrs ·
பாலியல் வக்கிரம் ஆக்டோபஸ் போல குழந்தைகளை சுற்றி வளைக்கிறது. பனிரெண்டு வயது குழந்தையிடம் கிட்டத்தட்ட 20 வயது முதல் 70 வயது வரையான ஆண்கள் அத்து மீறி இருக்கிறர்கள். அந்த குழந்தையின் மனம் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கும். இனி எந்த வயது ஆணை அவள் நம்புவாள். இத்தகைய செயல்களில் ஈடுபட்ட ஆண்கள் வீட்டு பெண்களும் இதே போல வேறு ஆணால் பாலியல் வக்கிரத்துக்கு இரையானால் இவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்.. தெரியவில்லை..

இன்னும் எத்தனை குழந்தைகளை இந்த பாலியல் வக்கிரத்திற்கு இரையாக்கப்போகிறோம்.
பெண்கள் மட்டுமல்ல குழந்தைகளும் வாழ தகுதியற்ற நாடு பட்டியலில் இந்தியா இடம் பிடித்து வருகிறது. .

குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது மட்டுமே தீர்வாக முடியாது.. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன தீர்வு என்று யோசிக்க வேண்டிய அவசர நிலையில் இருக்கிறோம். அரசு சிந்திக்குமா?
#
ஜக்கி சேகர் (Jackie Sekar)
அந்த 17 பேர்ல ஒருத்தனுக்கு கூட ஐயோ பாவம்ன்னு தோனலை பாத்தியா ? அதான்டா ரொம்ப வலிக்குது…..

#
கனிமொழி (Kanimozhi MV
பாலியல் வறட்சி
பாலியல் அறிவின்மை
குழந்தைகளுக்கு குட் டச் பாட் டச் பற்றி சொல்லாத பெற்றோர் , பள்ளி
குழந்தைகளின் சிறு மாற்றத்தைக் கூட உணரமுடியாத பெற்றோர் , ஆசிரியர்கள்.
சமூக கட்டமைப்பு
பெண்ணை எதிர்த்து பேசாமல் பழக்குவது
குடும்ப வன்முறையை தட்டிக்கேட்டால் குடும்பத்துக்கு உதவாது என பாடம் சொல்லுதல்
ஆணுறுப்பை அறுத்தால் குற்றங்கள் மறைந்து விடும் என கோபத்தால் கூறிவிட்டு நகர்தல்
சிறு பெண் குழந்தை என்றாலும் எனை கட்டிக்கிறாயா என்பதில் உள்ள வன்மத்தை, ஆதிக்கத்தை கண்டும் காணாமல் நகைச்சுவை எனச் சொல்லிப்போகும் மனப்பாங்கு
எத்துனை காரணங்களை சுட்டிக்காட்டினாலும் இந்தச் சமூகம் திருந்தப்போவதும் இல்லை
அந்தக் குழந்தையின் மன உணர்வுகள் சிதைந்தது பற்றி கவலை கொள்ளப் போவதும் இல்லை!
#
மாலதி மைத்ரி
வாய்ப்பு கிடைக்காதவரை எவனும் உத்தமன் தான். மனிதன் மகத்தான இழி பிறவி.
#
யெஸ். பாலபாரதி
மாற்றுத்திறனாளி குழந்தைக்காக குற்றவாளிகள் சார்பில் வழக்குறைஞர்கள் யாரும் ஆஜராகமாட்டோம் என அறிவித்துள்ள வழக்கறிஞர் சங்கத்தினருக்கு நன்றியும் பாராட்டுக்களும்!
#
கவிதா சொர்ணவல்லி is feeling angry.
குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே.

என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு காரணத்தினாலேயே, அவனுக்கு unneccesary touch-கள் பற்றி மூன்று வயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அதையும் மீறி யாராவது தொட முயன்றால், கையில் அழுத்தமாக கடித்து வைக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.

யாராவது அவனிடம் தேவையில்லாமல் நடந்துகொள்கிறார்களா ? என்பதை தினமும், பிரண்ட்லியாகவாது கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். இதெல்லாம், அவனுக்கான பாதுகாப்பை அவனே உறுதி செய்யும்வரை, நான் / நாங்கள் அவனுக்கு செய்து கொடுக்க வேண்டிய ஆதாரமான கடமைகள் என்றே உறுதியாக நம்புகிறேன்.

ஆண் குழந்தைக்கே இத்தனை கரிசனம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் , அதைப் பெற்றெடுத்த கண்றாவிக்காவது, கூடுதல் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு / கடமை & கட்டாயம். வேறு வழியே இல்லை.

சமூகம், செக்சுவல் பெர்வர்ட்நெஸ், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இதையெல்லாம் பேசுவது அவசியம் என்றாலும், அது இரண்டாம்பட்சமே.

இன்றைய இளம் பெற்றோர்கள் (பெண் & ஆண் இருவருமேதான்), குழந்தை வளர்ப்பை எப்படி பாரமாக கருதுகிறார்கள் என்பதையும், குழந்தை வளர்ப்பிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள் என்பதையும் பற்றி நாம் முதன்மையாக பேச வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு மனநிலை இருந்தால், குழந்தை பெற்று தெருவில் விடாதீர்கள் என்று கன்சர்னாக சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

& எத்தனை இசங்கள் பேசினாலும், பெண் குழந்தைகளை இங்கு சற்று அதிகப்படியான கவனத்துடன் (அட்லீஸ்ட் அவர்களுக்கான பாதுகாப்பை அவர்களே உறுதி செய்யும் வரை) பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளவாது செய்யுங்கள். அதைப் பேசுங்கள்.

(அயனாவரத்தில் 12 வயது குழந்தை 17(20?!) பேரால் ஏழு மாதமாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை பற்றிய இன்றைய நிகழ்ச்சியில், தொலைபேசிய, அந்த குறிப்பிட்ட அபார்ட்மென்ட்டில் உள்ள ஒருவர், அந்த குழந்தையின் அம்மா எப்படி – இந்த சமூகத்தின் கேவலமான Exhibhition Culture-க்கு ஆளாகி இருந்தார், வேனில் இருந்து இறங்குகிற குழந்தையை அழைத்து செல்வதற்கு கூட யாரும் வர மாட்டார்கள் என்று கூறியதை, என்னால் நிராகரிக்க முடியவில்லை)

பிகு: இதில் எல்லாம் “குழந்தை வளர்ப்பது அம்மாவின் பொறுப்பு மட்டும்தானா ? அப்பாவின் பொறுப்பு இல்லையா” என்று வெட்டி நியாயம் பேசாதீர்கள். பெண் குழந்தையின் பீகேவியரல் சேஞ்ஜஸ்யை ஒரு அப்பாவை விட, அம்மாவால்தான் சட்டென்று புரிந்து கொள்ள முடியும். அவ்வளவுதான்.
#
கவிதா சொர்ணவல்லி is feeling angry.
நானூறு கொலை, நாப்பது ரேப், கஞ்சா கடத்தல்ன்னு திரியுரவனுக்கு , கோடியில பணத்தை வாங்கிட்டு போய் பல்ல காமிச்சுட்டு வாதாடுவானுங்க. மீடியா மொத்தமும் ஒரு வழக்கை கையில எடுக்குதுன்னு தெரிஞ்சா, உடனே டிஆர்பி தேத்த “நாங்க வாதாட மாட்டோம்”ன்னு சீன போடுவானுங்க. #$#@#$ படிச்ச படிப்புக்கு மட்டும் வேல பாருங்கடா. என்னவோ ஹாலிவுட்ல மெக்கானிக் படத்துல நடிக்கிறோம்ன்னு நினைப்புல திரியாதீங்க !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*