பெண் திரை: இந்தப் பெண்களின் கதறலுக்கு என்ன பதில்? தமிழ் இந்து

க. நாகப்பன்

“கடலுக்குப் போறது பஸ்ல போற மாதிரி இல்லை. கரைக்கு வந்து அம்மா நான் வந்துட்டேன்னு சொன்னாதான் உண்டு” என்று பெருங்கடலுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் இதழியலாளர் அருள் எழிலன். ஒக்கி புயலில் சிக்கி, கரை திரும்பாமல் இறந்துபோன மீனவர்களின் பின்னணியை உண்மையும் உருக்கமுமாகச் சொல்கிறது இவர் இயக்கியிருக்கும் ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம்.

நீளும் கேள்விகள்

ஆவணப்படம் முழுக்கப் பெண்களின் ஆன்மாவின் வழியே பயணப்படுகிறது. பொறியியல் படிக்கவைத்துத் திருமணம் செய்துவைக்க எண்ணிய 23 வயது மகன் கடலுக்குள் காணாமல் போன கதையைக் கண்ணீருடன் நிர்மலா சொல்லும்போது, நம்மையறியாமல் கண்கள் கசிகின்றன. மகனை இழந்த துயரத்தில் பெருங்குரலெடுத்து அழும் அவரின் குரல் கடலின் ஆர்ப்பரிப்பைவிடப் பெரும் சத்தத்தோடு நம் செவிப்பறைகளில் மோதுகிறது.

“எங்க பிள்ளைங்க எல்லோரும் காப்பாற்றப்படுவாங்கன்னு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நம்பிக்கை கொடுத்தாங்களே. எங்கே எங்கள் பிள்ளைகள்? நாங்கள் தமிழக மக்கள் இல்லையா? எங்கள் மீது ஏன் இத்தனை வெறுப்பு? எத்தனை உயிர் இந்தக் கடல்ல கிடக்குது, இந்த அரசாங்கத்துக்கு மனித உயிர் ஒரு உயிர்னு தோணலையா? விலங்குக்குக் கொடுக்கக்கூடிய மதிப்பை மனித இனத்துக்குக் கொடுக்கத் தோணலையா?

கடலுக்குப் போன எங்க சொந்தங்கள் கரை திரும்பலைன்னாகூட, உள்நாட்டில் வெள்ளத்துல சிக்குன பிற இன மக்களைக் காப்பாத்த பைபர் படகை எடுத்துட்டுப் போனவங்க எங்க மீனவர்கள். எங்களுக்கு மத்தவங்க மேல இருக்கிற மனிதாபிமானம் எங்க மீனவ சொந்தங்கள் மேல ஏன் அரசுக்கு இல்லாமப் போச்சு” என்று விடைதெரிய வேண்டிய கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

பெண்ணே பெரும்துணை

மகன், கணவன், சகோதரன் எனத் தங்கள் வீட்டு ஆண்களை இழந்த பெண்கள் கதறலும் கண்ணீருமாக நினைவின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது ராஜி என்ற பெண் மட்டும் குறுநகையுடன் பேசினார். அந்தக் குறுநகைக்குக் காரணம் கணவன் உயிருடன் இருக்கும்போது பேசியவை என்பதே பெருந்துயராகக் கனக்கிறது.

கருவுற்றிருக்கும் ராஜி அடுத்தும் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று தன் கணவனிடம் சொல்லியிருக்கிறார். அவர் ஆண் குழந்தை வேண்டாமா எனக் கேட்டதற்கு, “ரெண்டாவது குழந்தையும் பெண்ணா இருந்தா நீங்க குடிக்க மாட்டீங்க; பொறுப்பா இருந்துப்பீங்கல்ல” என்று பதில் சொல்லியிருக்கிறார். அதற்குத் தன் கணவர், அப்போதும் மது அருந்துவேன் என்று சொன்னதாகவும் கணவனுடன் நடந்த அந்த உரையாடலை ராஜி தன் நினைவின் அடுக்குகளிலிருந்து மீட்டுக்கொண்டு வருகிறார்.

கடலுக்குள் சென்ற ராஜியின் கணவர் கரை திரும்பவே இல்லை. கணவன் குறித்த நினைவுகளைச் சொல்லும்போதே மகிழ்ச்சியில் குறுநகை உதிர்க்கும் ராஜி, வாழ்நாள் முழுக்கக் கூடவே அவர் இருந்திருந்தால் எப்படி வாழ்ந்திருப்பார் என்ற கேள்வி நம்மை உலுக்கி எடுக்கிறது.

எல்லாப் பெண்களுக்கும் பெண் பிள்ளைகள்தாம் பாதுகாப்பு. எல்லாப் பெண்ணும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஜி சொல்கிறார். அது போகிற போக்கில் சொல்லப்படும் வார்த்தைகளாகத் தெரியவில்லை. சமூக, பண்பாட்டுத் தளங்களில் ஆய்வாளர்கள் சொல்ல வேண்டியதை அனுபவத்தின் அடிப்படையில் நின்று ராஜி சொல்வதாகவே தோன்றுகிறது.

மீனவர் உயிருக்கு மதிப்பில்லையா?

இப்படி ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆண்களையும் இழந்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் பெண்கள், கடன் சுமையில் தத்தளிக்கும் குடும்பம், இழப்புகளை மட்டுமே சந்திக்கும் குடும்பம் என்று ஒக்கி புயலில் 194 மீனவர்கள் காணாமல் போன பிறகு அவர்கள் குடும்பங்கள் பரிதவிக்கும் நிலையை யதார்த்தமாகப் பதிவுசெய்கிறது, ‘பெருங்கடல் வேட்டத்து’.

இந்தியப் பொருளாதாரத்துக்காக ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய்வரை வருவாய் ஈட்டித்தரும் மீனவர்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை. ஆண்டுக்கு 40% பட்ஜெட் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டாலும் பேரிடரை எதிர்கொள்ளும் வலிமை மத்திய அரசுக்கு இல்லை. மீனவர்களுக்கு இருக்கும் கடல் குறித்த புரிதல் கடற்படைக்கோ அரசுக்கோ அமைச்சர்களுக்கோ இல்லை என்பதை இந்த ஆவணப்படம் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல அழுத்தமாகச் சொல்கிறது.

தேவாலயங்கள் கைவிட்ட கையறு நிலையையும் கண்ணீருடன் பதிவு செய்துள்ளதோடு நிற்காமல் ஆன்மிகப் பணி, சமூகப் பணியைச் செய்யும் கத்தோலிக்கத் திருச்சபை மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஏன் விரைவாக இறங்கவில்லை என்ற விமர்சனத்தையும் காட்டமாக முன்வைக்கிறது.

தாய்வழிச் சமூகத்தின் குமுறல்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படத்தில் இருவிதமான உத்திகளை இயக்குநர் அருள் எழிலன் கையாண்டிருக்கிறார். ஒன்று புயல், பேரிடர் குறித்த துறைசார் நிபுணர்களின் கருத்துகள், பேட்டிகள் இடம்பெறவில்லை. இதை வேண்டுமென்றே இயக்குநர் தவிர்த்திருக்கலாம். மற்றொன்று பெண்களை மையமாகக் கொண்டு அவர்களின் கண்களின் வழியே பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறார்.

சமவெளி சமூகத்தைக் காட்டிலும் கடற்கரைச் சமூகத்தில் பெண்களே தலைமையேற்று வழிநடத்துவார்கள். ஆண்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழில் செய்வார்கள். தாய்வழிச் சமூகத்தின் நீட்சி கடற்புரத்தில் மட்டும் நிலவிவரும் சூழலில் அவர்களின் பார்வையில் இழப்பையும் வலியையும் பதிவுசெய்திருப்பது பொருத்தமானது; நியாயமானதும்கூட.

டி. அருள் எழிலன்

நிபுணர்களின் கருத்தைக் கேட்காததன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளக் குமுறலை உணர முடிகிறது. அதேநேரம் அரசை நோக்கி மீனவ மக்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர்களே பதில் சொல்வதன் மூலம் அரசுக்கும் அதன் சொந்த குடிமக்களுக்கும் இடையிலான சொல்லாடலாக அது மாறிப்போகிறது. மக்களுக்கும் அரசுக்கும் இடையில் வலுவான அமைப்பாக, ஒழுங்குபடுத்தப்பட்ட அலகாக இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள் மீனவ மக்களின் உரிமை சார்ந்ததாக அமைந்துள்ளன.

சமீபத்தில் தாய்லாந்தில் தாம் லுவாங் குகைக்குச் சென்ற கால்பந்து அணியைச் சார்ந்த 12 சிறுவர்களும் அவர்களது துணைப் பயிற்சியாளரும் திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குகையிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்கள் குகையிலேயே நாள்கணக்கில் சிக்கித் தவித்த நிலையில் அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டதையும் ஒக்கி புயலில் நம் அரசுகளின் செயல்படாத் தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.

நன்றி   தமிழ் இந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*