பெருங்கடல் வேட்டத்து உறங்க விடவில்லை! -ஹேமந்த் வைகுந்த்

எதையும் மறந்துவிடுபவர்கள் நாம். அதிலும் துயர சம்பவங்களை எப்போது மறப்போம் என்று காத்துக்கொண்டிருப்பவர்கள்.

திணை வகைகளாக பிரிந்திருக்கும் நமக்கு, ஒரு நிலத்தவரின் துன்பங்கள் புரிவதில்லை. என் தட்டில் மீன் இருக்கிறது அதற்கான காசு உனக்கு கொடுத்துவிட்டேன். இது தான் மீனவர்களுக்கும் நமக்கும் இருக்கிற உறவு. அதைத் தாண்டி அவர்கள் வாழ்வு, போராட்டம், வேதனை எதுவும் தெரியாது தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. விவசாயிகளைப் போல.

ஒரு அநீதியை உலகிற்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்காகவே இயக்குநர் அருள் எழிலனுக்கு அழுத்தமான கை குலுக்கல்கள்.சாதாரணமாக ஆவணப்படம் என்றாலே சலிப்பை தரக்கூடியவை என்ற பொதுக்கருத்துக்கு மாறாக திருப்பங்கள் பல நிறைந்த திரைக்கதை போல உருவாக்கியிருக்கிறார்கள். எடிட்டிங் அற்புதம். கேமராவின் ஃபிரேம் மற்றும் மூவ்மென்ட்ஸ் என எதிலும் ‌அந்த நேர்த்தி தெரிகிறது.

வருடதிற்கு 60,000 கோடி ஈட்டித் தருபவர்களை காக்க திட்டம் அல்ல ஒரு துளி எண்ணம் கூட அரசுக்கு இல்லை என்பது தான் கோபத்தை தூண்டுகிறது.புயலில் மாட்டிக்கொண்ட மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசு மற்றும் அதிகாரிகள், கடற்படை காட்டிய அலட்சியமும் அதை மறைக்க அவர்கள் காட்டும் முனைப்பும், இதோ இந்த ஆவணப்படத்தை திரையிட அவர்கள் போடும் தடைகள் வரை அத்தனையும் அருவெறுப்பை தருகிறது.

நார்த் ஸ்டார் மூலம் கரையடையக் கூடிய வழியை அறிந்திருப்பது முதற்கொண்டு விண்ணில் இருக்கும் அத்தனை நட்சத்திர கூட்டங்களை (கான்ஸ்டிலேஷன்) கண்டறிவது வரை அவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் மீனவர்கள். அவர்கள் இயற்கையை கண்டு அஞ்சவில்லை நம்முடைய அரசாங்கத்தை கண்டே அஞ்சுகிறார்கள்.கடல் எங்களை வஞ்சிக்காது. அலைகள் எங்களை கொல்லாது. தினமும் அது தான் எங்களை காக்கிறது. இந்தக் கொலைகள்! ஆம் கொலைகள் மனித அலட்சியம்.

இறந்த கணவனை பற்றி பேசும் போது கூட அதில் அவரைப் பற்றி பேசுவதாலேயே அவ்வளவு சந்தோஷப்படும் அந்த பெண், கணவருடன் வாழ்ந்திருந்தல் எவ்வளவு காதல் நிரம்பிய வாழ்வோடு இருந்திருப்பார்! அதை இயக்குநரும் உறுதிப்படுத்தினார். படத்தின் நீளம் கருதி அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டதாகவும், அந்தப் பெண் தன் கணவருக்கும் தனக்குமான உறவைப் பற்றி சொன்ன சம்பவங்களை வைத்து இன்னொரு செம்மீனே எடுக்கலாம் என்று.

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எடுக்கும்பொழுது ஸ்பீல்பெர்க் படப்பிடிப்பிற்கு இடையே அடிக்கடி அழுதுவிட்டு வருவாராம். இந்த இடத்தில் தானே அத்தனை கோரங்களும் நிகழ்ந்தது என்று. இந்த படக்குழுவினரும் அழுதிருக்கிறார்கள். ரத்தமும் சதையுமாக மனிதர்கள் நேரில் தங்கள் வேதனையை வெடித்துப் பகிரும்போது யாரால் நொறுங்காமல் இருக்கமுடியும்.மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கபட்டவர்களாகவே வைத்திருக்க பல்வேறு அரசுகள் பல காலமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. அவர்களுக்கென்று அவர்கள் பிரச்சனைகளை சொல்ல எந்த நிலையிலையும் ஒரு மீனவ பிரதிநிதி வரவிடாமல் கவனமாகவே இருந்திருக்கிறார்கள்.

அரசாள்பவர்கள் இதையெல்லாம் ஒரு பெரும் ஆயுதத்தை நம்பியே செய்கிறார்கள். அது நம் மறதி!

வழக்கம் போல நாம் இதை மறக்கவே விரும்புவோம் என அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நமக்கு ஒரு திரைப்படமோ, பிக் பாஸோ போதும் அந்த வேலையைச் செய்ய. ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டு இந்த துரோகத்தை நியாபகம் வைத்துக்கொள்வோம். அது மட்டும் தான் கடலில் கலந்த அந்த 194 ஆன்மாக்களுக்கு நாம் செய்யும் ஒரே நியாயம்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*