‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி எழுத்தாளர் சந்திரா!

ஓகிப்புயல் பாதிப்பால் 194 மீனவர்கள் உயிரிழந்தார்கள் என்பது செய்தி. அவர்கள் வெறுமனே இயற்கை சீற்றத்தால் மட்டும் உயிரிழக்கவில்லை பாடாவதியான கார்ப்ரேட் மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தால், அவர்களின் திமிர்தனத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. அந்த உண்மையை தன் ”பெருங்கடல் வேட்டத்து” ஆவணப்படத்தின் மூலமாக வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார் அருள் எழிலன். Arul Ezhilan

அருள் எழிலனை பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அறிவேன். எப்போதும் அதிகாரத்துக்கு எதிராக மக்களின் பக்கம் நிற்கும் பத்திரிக்கையாளன். இந்த வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடியில் யாரும் கார்ப்ரேட்டுகளின் சதிக்கு உடமையாகிப்போவது இயல்பானதுதான். ஆனால் எழிலன் எப்போதும் தன்னுடைய அறத்திலிருந்து வீழாதவர். அவரின் அந்த அறம்தான் இப்படம்.

நம் மக்கள் நம் சொந்த அரசினாலேயே எத்தகைய வீழ்ச்சியை அடைகிறார்கள், வாழ்வை இழக்கிறார்கள் என்பதை “பெருங்கடல் வேட்டத்து” ஆவணப்படம் மூலம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த படத்தில் அரசியல்வாதிகள்,இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் அரசின் படுகொலைத்தன்மையை பட்டியலிட்டுப் பேசவில்லை. பாதிக்கப்பட்ட மக்களே நேரடியாக பல கேள்விகளைக் கேட்டு, அரசின் அராஜகத்தை வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கிறார்கள். அதுதான் இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு.
இந்தப் படத்தை பார்க்கும்போது அரசு எவ்வளவு கேவலமாக பொய்யாக செயல்பட்டிருக்கிறது என்று விளங்குகிறது.

மக்கள் கேட்ட கேள்விகள்:

நவம்பர் 28 ம் தேதியே ஓகீப்புயல் வரப்போகிறது என்ற தகவல் அரசுக்கு தெரியும் ஆனால் 29 இரவுதான் அரசு அதை வெளியிட்டிருக்கிறது. விசயம் தெரிந்தவுடனே ஹெலிகாப்டர் மூலமாக கடலுக்குள் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை கரைக்கு திரும்பச் சொல்லியிருக்கலாம். ஆனால் அரசு அதைச் செய்யாமல் 29 ஆம் தேதி மெதுவாகச் செய்தியை வெளியிடுகிறது. வருசத்திற்கு 60 ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் கன்னியாகுமரி பகுதியில் எத்தனை மீனவர்கள் கடலுக்குள் சென்றிருக்கிறார்கள், அவர்கள் கடலுக்குள் எவ்வளவு தூரத்திற்கு உள்ளே சென்றிருக்கிறார்கள் என்பதை அரசால் தெரிந்து கொள்ள முடியாதா?

மீனவர்கள் திரும்பவில்லை செத்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தகவல் வந்தபின் மீட்பு பணி என்று வந்தவர்கள், மீனவர்களின் வேண்டுதல்படி ஒவ்வொரு மீட்புக்குழுவோடு ஒரு மீனவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் மீனவர்கள் சொன்ன யோசனையைக் கேட்காமல், கடலில் மூன்று நான்கு நாட்கள் உயிரைப் பிடித்து தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை காப்பாற்றாமல் சாகவிட்டிருக்கிறார்கள். இதற்கு யோகிப்புயல் காரணமா? இல்லை அரசு காரணமா? ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மீட்புக்குழுவினர் கடலுக்குள் செல்ல முடியாது என்று மறுக்க, உடன் சென்ற மீனவர்கள் ”அவர்கள் இன்னும் கிழக்குப்பகுதியில்தான் மீன்பிடிக்குபோவார்கள் அப்பகுத்திக்குச் செல்லலாம்” என்றழைக்க மீட்புகுழு மறுத்திருக்கிறது. உண்மையில் அந்தப் பகுதியில்தான் ஏராளமான , ஆழ்கடலுக்குள் சென்றிருந்த மீனவர்கள் போராட முடியாமல் மூன்று நான்கு நாள்களுக்குப் பிறகு இறந்திருக்கிறார்கள். இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு அரசுதானே பொறுப்பு.

இதைப்போல தூத்துக்குடியிலிருந்து, மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்பகுதி புவியியல்படி தூரமாக இருக்கும். எனவே தூத்துக்குடியிலிருந்து கப்பலை அனுப்புவதற்கு பதில் மும்பை, கோவா பகுதியிலிருந்து கப்பலை அனுப்பி மீனவர்களை மீட்கலாம் என மீனவர்கள் சொன்னதையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராம் எள்ளலோடு மறுத்துவிட்டார். அதனாலும் காலதாமதமாகி உயிரிழந்தவர்கள் அதிகம்பேர். அப்போ உண்மையில் ஓகிப்புயல் மரணங்கள் அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைதானே!

இந்த ஆவணப்படத்தில் தோன்றும் மாண்டுபோன மீனவர் வீட்டுப் பெண்களின் கதறலைக்காணும்போது மத்திய அரசையும் மாநில அரசையும் சபிக்காமல் இருக்க முடியவில்லை. வீட்டில் இருந்த நான்கைந்து ஆண்களையும் இழந்த குடும்பத்தின் பெண்களின் துன்பந்தான் சொல்லிமாளாது. அப்பாவின் முகத்தை பார்க்காமல், இனி எப்போதும் பார்க்கவே போகாத பிறந்திருக்கும் குழந்தைக்குத்தான் இந்த அரசு என்ன பதில் சொல்லும்.

மீண்டும் மீண்டும் இது ஒரு தனிப்பட்ட பகுதி மக்களின் பிரச்னை என்றிருக்கும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, இந்த மாதிரியான ஆவணப்படங்கள்தான் பிரச்னையின் உண்மைத்தன்மையை எடுத்துச் சொல்லும் கண்ணாடியாக இருக்கும். நமக்கும் இதே மாதிரியான துன்பத்தை, கொடுமையை இந்த மத்திய மாநில அரசுகள் தயங்காமல் செய்யும் என்பதை மற்ற பகுதி மக்களும் புரிந்துகொள்வார்கள்.

இந்த ஆவணப்படம் இன்னும் சில மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறது. மக்கள் தங்களைத்தாங்களே அரசியல்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. மீனவ மக்கள் கத்தோலிக்க திருச்சபை சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருக்காமல் தங்களுக்கு நிகழும் அநீதியை, தங்கள் உரிமையை திருச்சபை செய்யட்டும் என்றில்லாமல் தாங்களே முன்னின்று அரசிடம் கேட்க வேண்டும். அதேபோல் கல்வியை மற்ற வசதிவாய்ப்புகளை பெற்றுத்தந்த திருச்சபை இம்மக்கள் தங்களைத்தாங்களே அரசியல்படுத்திக்கொள்வதற்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனேனில் இம்மக்கள் இந்த அரசைவிட திருச்சபைகளேயே அதிகம் நம்பி இருந்தார்கள். இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதை இயக்குனர் அருள் எழிலன் மிகத்தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஆவணப்படம்தானே என்ற மெத்தனம் இல்லாமல் ஒளிப்பதிவில் மிகக்கவனமாக மிகச் சிறப்பாக திரைப்பட ஒளிப்பதிவுக்கான கூறுகளோடு பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. கடலின் ஆழத்தை புரிந்துகொள்ளும்படி ஒளிப்பதிவு இருக்கிறது. அதேபோல் எடிட்டிங்கும் மிகச் சிறப்பாக அமைக்கப்படிருக்கிறது. பத்திரிக்கையாளர் இயக்குனர் அருள் எழிலனுக்கு அன்பானவாழ்த்துகள். உங்களின் இந்த அரசியல் அறம் தொடரட்டும் நண்பா.

கட்டுரையாளர் குறிப்பு:- சந்திரா

இதழியலாளர், திரைப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர் .

.#fisherman_documentary #ockhi_cyclone_documentary #ockhi_documentary #cyclone_documenrary #ஓக்கிபுயல்_ஆவணப்படம் #ஓகிஆவணப்படம் #அருள்_எழிலன் #arulezhilan_documentary #kanyakumari_fisherman #குமரி_மீனவர்கள் #பெருங்கடல்வேட்டத்து #perungadal_vettaththu #tamilnadu_documentary

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*