’பெருங்கடல் வேட்டத்து’ – நான்கு ராஜாக்கள்

எனது ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படத்தைப் பார்த்த அனைவருமே வியந்து பாராட்டியது ஒளிப்பதிவையும் அதன் தரத்தையும். எடிட்டிங்கையும்தான். இந்த பாராட்டுக்கள் அத்தனைக்கும் உரியவர்கள் எனக்கு ஒளிப்பதிவு செய்த ஜவஹர், ஜோசப் விஜய், ஜெயக்கொடி, தாசன் ஆகியோர்தான்.

என்ன நினைத்து என்னுடன் இணைந்தார்கள் எனத் தெரியாது. ஆனால் நான் ஷூட்டிங் வடிவத்தை முழுவதுமாக உடைத்து வேறு வடிவங்களில் எடுக்கச் சொன்னேன். அது அவர்களுக்கு சிரமமாக இருந்திருக்கும் காரணம் அவர்கள் திறமைக்குறைவானவர்கள் இல்லை. எக்யூப்மெண்ட்ஸ் பற்றாக்குறை இடையூறாக இருந்தது.

ஜெயக்கொடி

நான் முகநூலில் கேமிராமேன் வேண்டும் என்று கேட்ட போது ஜெயக்கொடி நான் வருகிறேன் என்று அவராக வந்தார். அதற்கு முன்னர் அவரை எனக்கு தெரியாது இரவோடு இரவாக கிளம்பி தூத்தூர் வந்து ராப்பகலாக என்னுடைய துன்புறுத்தல்களைப் பொறுத்துக் கொண்டும் என்னை சகித்துக் கொண்டும் பணி செய்தவர் ஜெயக்கொடி. விளம்பரப்படங்கள், திருமண கவரேஜுகள் , சில குறும்படங்களுக்கு வேலை செய்துள்ள ஜெயக்கொடிக்கு இது புது அனுபவம் என நினைக்கிறேன். பெரிய சவாலாக இருந்தது ஆடியோ ஆவணப்படத்தின் உயிர் நாடியே சத்தங்களை பதிவு செய்வதுதான். அது மிகப்பெரிய சவாலாக எங்களுக்கு இருந்தது போல ஜெயக்கொடிக்கும் இருந்தது.
என்னோடு ஜெயக்கொடி பயணித்த ஒரு நாள் கூட அவர் சலிப்படைந்ததில்லை. சில இடங்களில் குறிப்பாக ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சின்னத்துறை ரெமியாஸ் வீட்டிற்கு போகும் போது அதை லைவாக எடுக்கச் சொன்ன போது ஏதனாலோ அவர் அதை மிஸ் பண்ணி விட்டார். நான் கடுமையாக கோவித்துக் கொண்டேன். பின்னர் வருந்தினார். இதெல்லாம் நான் அவர்களிடம் கற்றுக் கொண்டவை. இப்படத்தின் பெரும்பலான பேட்டிகள், மனித முகங்கள், அவர்களின் வெவ்வேறு பாவனைகளை மிக நுட்பமாக ஒளிப்பதி செய்து அசத்தி இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றவர் ஜெயக்கொடி . ராஜி, நிர்மலாவின் பேட்டிகளை நேர்த்தியாக எடுத்துக் கொடுத்தவர் இவர்தான். அவரோடு நான் பணி செய்ததை பெருமையாகவும் எனக்கு கிடைத்த பரிசாகவும் நினைக்கிறேன் நன்றி ஜெயக்கொடி.

ஜவஹர்

என் நண்பர் என் அம்மா உடல் நலம் குன்றி 2004-ஆம் ஆண்டு நாகர்கோவில் மருத்துவமனையில் இருந்த போது அம்மாவை கவனித்துக் கொள்ள நான் அங்கேயே இருக்கும் படி ஆனது. அப்போது நான் அடிக்கடி டீ குடிக்கச் செல்லும் கடைக்கு அருகில் ஜவஹரின் ஸ்டுடியோ இருந்த பொது எப்படியோ அறிமுகம் ஆகி பேசி நெருங்கிய நண்பர்கள் ஆனோம். இன்றைய தேதியில் எனக்கு நாகர்கோவிலில் உள்ள ஒரே நெருங்கிய நண்பர் அவர்தான். இருவருமே இணைந்து பயணித்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
ஓக்கி ஆவணப்படம் பண்ணுகிறேன் என்ற போது ஜவஹர் அதை நம்பவில்லை. காரணம் இதற்கு முன்னர் கேன்சர் பற்றி ஆவணப்படம் ஒன்றுக்காக அவரை பல நாட்கள் அலைய விட்டு படத்தையும் முடிக்கவில்லை. அவர் எடுத்துக் கொடுத்த புட்டேஜுகளையும் தொலைத்தேன். அதனால் நான் சொன்னதை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் அங்கு சென்றதும் காரை எடுத்து கேமிராவோடு வந்து ஷூட் பண்ண துவங்கி விட்டார்.

நீரோடியில் கர்ப்பிணிப்பெண் ராஜியை சந்தித்த போது அவர் குழந்தை பெற்று அக்குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் வரை அவரை ஃபாலோ பண்ணுங்கள் என்றேன். நானும் சென்றேன் என்றாலும் ராஜியின் வாழ்க்கையை அவர் அழகாக உக்கிரமாக பதிவு செய்தார். மிக முக்கிய கட்டமான குழந்தை பிறப்பை மருத்துவமனையின் ஷூட் பண்ணினது ஜவஹர்தான். இந்த படத்தில் மீனவர்களின் நிலம், மொழி, பண்பாட்டு, வாழ்வியல் சார்ந்த விஷுவல்கள் மிகச்சிறப்பாக பதிவாகியிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும் ஜவஹர்தான். என் திட்டுகளை அவரும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தார். ஜவஹரும், ஸ்னேகாவும் இல்லை என்றால் இந்த ஆவணப்படமே சாத்தியமில்லாமல் போயிருக்கும் சோம்பேறியான என்னை உசுப்பேற்றி உலுக்கி தெருவில் இறக்கி விட்டதில் ஜவஹரின் பங்கு அலாதியானது. என் தனிப்பட்ட வாழ்விலும் சரி ஊடகப்பணியிலும் சரி நான் இணைந்து பயணிக்கிறேன் ஜவஹருடன்.

#
ஜோசப் விஜய்

உங்களுக்கு நான் அறிமுகம் செய்வது ஒரு ஹிரோவை .இந்த வித்தைக்காரரை எனக்கு அறிமுகம் இல்லை. 2014-ஆம் ஆண்டு என நினைக்கிறேன் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் தனது குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற தம்பி அஸ்வின் மடோன் தான் எனக்கு இவரை அறிமுகம் செய்தார். இந்த படத்தின் ட்ரோன் ஷாட்டுகள், ஒரு இடத்தில் ‘மோனே..மோனே’ என்று அழுவாரே ஒரு பெண் அந்த இடத்தில் கேமிரா கடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் ஒரு துயரம் சங்கடம் தேடல் இருக்கும் அதை துல்லியமாக பதிவு செய்தவர் அவர். படப்பிடிப்பில் இருந்தவரை அர்பணிப்போடும் கலைத்திறனோடும் பணி செய்த ஜோ நான் என்ன உணர்வில் என்ன அளவில் சில கடல் ஷாட்டுகள் கேட்டோனோ அதை எனக்கு எடுத்துக் கொடுத்தவர். கடலை சும்மா போகிற போக்கில் எடுக்கலாம். நான் அப்படி கேட்கவில்லை எங்கு எதற்கு பயன்படுத்தக் கேட்கிறென் என்பதை புரிந்து அதற்கேற்ப எடுத்துக் கொடுத்தவர். இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் ஜோசப் விஜயின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அளவிட முடியாதது.

தாசன்

எனக்கு இவரை தெரியுமே தவிற பெரிதாக பழக்கமில்லை. சின்னச் சின்ன விடியோகளை கட் பண்ணி போடச் சொன்னால் போடுவார். இந்த ஆவணப்படத்தை நான் முதல் முதலாக எடிட் பண்ண துவங்கியது எடிட்டர் ராஜேஷுடன் தான். அவருக்கும் எனக்கும் முன் கூட்டியே ஆவணப்படம் செய்த அனுபவம் உண்டு. விகடனுக்காக தானே புயல் பாதிப்பு பற்றிய ஆவணப்படத்தை செய்து கொடுத்தோம். வேறு சில விளம்பரப்படங்களையும் விகடனுக்காக செய்தோம். ஒரே மாதிரியான ரசனையும், சிந்தனையோட்டமும் எனக்கும் ராஜேஷுக்கும் இருந்தது. துரதிருஷ்டமாக அவரால் இந்த படத்தில் வேலை செய்ய முடியாமல் போக. வேறு சில எடிட்டர்களை அணுகினேன் அவர்களோ பெரிய இடத்தில் இருந்து கொண்டு என்னை அலைய விட்டார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை. மிகவும் கவலையடைந்து சோர்வுற்ற நான் தாசனை பிடித்து “நான் ஒரு பில்ம் பண்றேன் எடிட் பண்றீங்களா? என்றவுடன் அவருக்கு அதை நம்பவே முடியவில்லை. நான் அருகில் இருந்து சொல்வதை நீங்கள் உங்களுக்கு தெரிந்த மொழியில் செதுக்கினால் போதும் என்றேன். முதலில் இரண்டரை மணி நெரம் இதை எடிட் பண்ணி ஒரு மணி நேரத்தில் நிறுத்தினோம். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் எப்படி வர வேண்டும் என்று நான் அருகில் அமர்ந்து சொல்லச் சொல்ல தாசன் இப்படத்திற்கு உயிர் கொடுத்தார். இந்த படத்தில் நான் பல நாட்கள் பல மணி நேரம் ஒருவருக்காக காத்திருந்தேன் என்றால் அது தாசனுக்காக மட்டுமே. இந்த படத்தின் உணர்வும் அமைதியும் அழுகையும் ஆவேசமும் தாசன் உருவாக்கியது. கேமிராமேன்கள் மூவரும் தங்களை சுய விமர்சனம் செய்து பார்க்க தோன்றினால் தாசனிடம் பேசலாம்.

இறுதியாக,

திரைப்படம் என்றாலும், ஆவணப்படம் என்றாலும் அது பலருடைய கூட்டு முயற்சியில் உருவாவதுதான், படத்தின் வெற்றியை பராட்டுகளை இயக்குநர் மட்டும் எடுத்துச் செல்வது மிக மோசமான சுரண்டல். அந்த வகையில் பெருங்கடல் வேட்டத்து கவனம் பெற உழைத்தவர்கள். படத்தை முடிக்க நிதி கொடுத்த நண்பர்கள் பலர் என இந்த கவனத்தை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இந்த படத்தில் வேலை செய்த இந்த நால்வருமே தங்கள் பணியில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். ஒரு காட்சியை எங்கே எடுத்து எங்கே முடிக்கிறோம். என்பதோடு எடுத்த காட்சிகள் முழுமை அடைந்திருக்கிறதா என்பதை பல முறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். படத்தில் பயணிக்கிறவர்கள் ,முக்கியமாக ஆடியோ ஆமாம் ஒரு படத்தின் ஆன்மாவும், ஜீவனும் அதுதான். எடிட்டிங்கில் கூட புதிய சாத்தியங்கள் என்ன இருக்கிறது என்பதை தாசன் இன்னும் அறிந்து கொள்ளல் வேண்டும். காரணம் நான் கற்றுக் கொள்வதை நிறுத்திக் கொள்ளவில்லை.இந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் இதனுடைய அரசியல் பாதை என்ன? என்பதில் நான் திடமாகவும், தெளிவாகவும் சில முடிவுகளை எடுத்தேன். மக்கள், மதம், அரசு இந்த மூவருக்கும் இடையில் நான் ஒருவனாக விலகி நின்றேன். என்னை இந்த படத்தில் நான் உள் எங்கும் உள் நுழைக்காமல் விலகி நடந்தேன். அது பெரும் வரவேற்பைப் பெற காரணம் இந்த மூன்று ராஜாக்கள்தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*