ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார்?

அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி!

மோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம்!

தேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக!

பூச்சட்டி சுமந்த சித்தாராம்யெச்சூரி பிரச்சாரமும் பின்னணியும்!

2014-ல் பிரதமராக மோடி பதவியேற்ற போது உலகமே அவரை திரும்பிப் பார்த்தது. ஒரு தேநீர் விற்பவர் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் என்ற பிம்பமும் அவருக்கு புது இமேஜைக் கொடுத்தது. தேசியக் கட்சிகள் இந்தியாவில் இனி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாது என்ற எண்ணத்தை நொறுக்கிய மோடி மிருக பலத்தோடு பிரதமரானார். மூன்றே ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கில் வரலாறு காணாத அடி விழுந்திருப்பதை பாஜக சமீபத்தில் சந்தித்த தோல்விகள் உறுதி செய்கின்றன என்ற போதிலும், ராகுலை ‘பப்பு’ என்று தொடர்ந்து பதம் பார்த்துக் கொண்டிருந்த பாஜகவினரை நேற்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பதம் பார்த்து பந்தாடி விட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

வென்றது யார் தோற்றது யார்?

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படாமல் அதிமுக உதவியோடு தள்ளிப்போன நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டு வரப்பட்டது. போதுமான பெரும்பான்மை இல்லாத எதிர்க்கட்சிகள் பாஜக ஆட்சியை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அகற்றி விட முடியும் என நம்பவில்லை. கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோறும் என தெரிந்துதான் எதிர்க்கட்சிகள் இதைக் கொண்டு வந்தன. பாஜகவின் வசந்த காலம் வேகமாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மாநில அளவில் கட்சிகளை பாஜகவின் பக்கம் மீண்டும் சேர விடாமல் தடுக்கும் பிரச்சார யுத்திக்காகவே எதிர்க்கட்சிகள் இதை பயன்படுத்திக் கொண்டன. தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜகவை விட ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆந்திராவுக்குள் எதிர்கொண்டாக வேண்டிய நெருக்கடியில்தான் இந்த மசோதாவை கொண்டு வந்தது. தெலுங்குதேசத்தின் இந்த தீர்மானத்தை ஆதரித்தவர்கள் வெறும் 126 பேர்தான். தீர்மானத்தை எதிர்த்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 325 ,சரிபாதி பேரின் ஆதரவு கூட எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. என்ற போதிலும் கூட காங்கிரஸ் அதை பாஜகவின் நான்காண்டுகால ஆட்சியின் திறனாய்வு அமர்வாக மாற்றி விட்டது.
அந்த வகையில் மோடி அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வென்று, விவாதத்தில் தோற்று ராகுல் தாக்குதலில் நிலை குலைந்து விட்டதையே பின்னர் பேசிய பிரதமர் மோடியின் உரை எடுத்துக் காட்டியது.

ராகுலின் உரையும் மோடியின் பதலடியும்?

பாராளுமன்றத்தில் ராகுல் இப்படி ஒரு தாக்குதலை தொடுப்பார் என்பதை பாஜகவினர் எதிர்பார்க்கவில்லை. ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் ஒருவர் கோடிக்கணக்கில் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்று ராகுல் சொன்னது ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, வழக்கமாக மோடியின் மீதான விமர்சனங்களுக்கு மிக துணிச்சலாக எதிர்வினையாற்றும் நிர்மாலா சீத்தாராமனை நிலைகுலைய வைத்தது ராகுல்காந்தியின் தாக்குதல். அவர் மோடியை காப்பாற்றுவதை விட்டு விட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

பணமதிப்பிழப்பு, இந்திய குடிமக்களுக்கு 15 லட்ச ரூபாய் விவகாரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என நான்காண்டுகால மோடி ஆட்சியை அனைத்து பக்கங்களில் இருந்தும் விமர்சித்த ராகுல் காந்தி. அமித்ஷாவின் மகன் விவகாரத்தில் மோடி அமைதி காப்பதாகச் சொல்ல பாஜகவினர் அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்றார்கள். ராகுலின் பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அவையை மதியம் 1-45 வரை ஒத்தி வைத்தார் சுமித்ரா மகாஜன். ஆனால் மீண்டும் அவை கூடிய போது அமித்ஷாவும், மோடியும் தலைவர்கள் ஆனால் அதிகாரத்தை இழக்க அஞ்சுகிறார்கள். அவர்களின் அச்சம் கோபமாக மாறி வருகிறது என்று அடுத்து நடத்தி அட்டாக் இடைவேளைக்கு முன்னர் நடத்தியதை விட மோசமாக இருந்தது.
பெண்கள் வாழத்தகுதியற்ற நாடு இந்தியா என்று ஒரு வணிக இதழ் அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் இது போன்ற செய்திகள் வெளியாவது இதுவே முதல் முறை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி அரசு தவறி விட்டது என்று போட்ட போட்டில் பாஜக உறுப்பினர்கள் பதறிப்போனார்கள்.

அவரது உரை முடியும் முன்னரே உலக அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் ராகுல் இரண்டாம் இடத்திற்கு வந்தார். உரையை முடித்த ராகுல் யாரும் எதிர்பாராத வண்ணம் பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரை இறுக்க அணைத்துக் கொண்டார். இதை மோடியே எதிர்பார்க்கவில்லை பின்னர் சுதாரித்துக் கொண்ட மோடி ராகுலின் தோளில் தட்டிக் கொடுத்தார்.
ராகுலின் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பேச்சுக்கு பல மணி நேரம் பதிலளித்த பிரதமர் மோடி தன் நான்காண்டுகால சாதனை இதுதான் என்று உறுதியாக ஒன்றைக் கூட சொல்லவில்லை. கடன் கொடுத்திருக்கிறோம். உரிமை கொடுத்திருக்கிறோம் என்று மட்டும் சொன்னார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதை விட சிறந்த உரைகளை காங்கிரஸ் தலைவர்களான நேருவும், இந்திராகாந்தியும் கூட ஆற்றியிருக்கிறார்கள் என்றாலும். ராகுல் நிகழ்த்திய உரை மோடி என்னும் பிம்பத்தின் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக். அவரை அமர வைத்து நேருக்கு நேர் ராகுல் தொடுத்த தாக்குதல் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் புதியது அல்ல என்றாலும் ‘பப்பு’ என்று ராகுலை கிண்டல் செய்து வந்த பாஜகவினருக்கு விழுந்த பலமான அடி.

இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது பாஜக என்ற கேள்விக்கு அவர்கள் ராகுல் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரலாம். அதற்கு அவர்கள் காரணமாகச் சொல்வது கட்டிப்பிடித்ததையும், கடைசியாக கண்ணடித்ததையும் அவை நாகரீகத்திற்கு முரணாணது என்று சொல்லலாம். எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை அணைத்தது நாகரீகம் மீறிய செயல் என்றால் அதை நாடாளுமன்றம் ஏற்கலாம். ஆனால் அது ராகுலுக்கு மக்கள் மன்றத்தில் மகாத்தான மரியாதையை மக்களிடம் உருவாக்கும். ஒரு வேளை “ராகுல் பிரதமரைப் பார்த்து கண் சிமிட்டினார்” என்றால் அந்த பெருமை பிரியா வாரியாருக்குத்தான் போகும்.

அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் யாரோடு கூட்டணி சேர்வார்கள் என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை. பெரும்பாலன மாநிலக் கட்சிகள் பாஜகவில் இருந்து விலகி விட்டன. அனைவரும் விலகி வெளியேறும் போது அதிமுக பாஜகவோடு போய் இணைகிறது. பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து பாஜகவை வெளிப்படையாக ஆதரித்திருக்கிறது அதிமுக. பாஜக கூட்டணியில் அதிமுக வெளிப்படையாக இணைந்து விட்டது.


பல கட்சிகள் பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என நினைக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் இணைவதில் தயக்கம் காட்டுகின்றன கட்சிகள். தெலுங்கு தேசமே காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கையுடன் தான் அணுகி வருகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கட்சியை கவனமாக கையாள்வது போல்தான் பல கட்சிகள் கையாள்கிறது. ராகுலின் இன்றைய பேச்சு மக்களுக்கு மட்டுமல்ல மாநிலக் கட்சிகளுக்கும் சொன்ன செய்தி ஒன்றுதான்.. “நான் தலைமை ஏற்க தயார் வாருங்கள் இணைவோம்” என்பதுதான் அது.

டி.அருள் எழிலன்.

 

#Ragul_hug_modi #ragul_vs_modi #ராகுல்_மோடி #மோடியைஅணைத்தராகுல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*