1967க்குப் பிறகு தமிழகம் எப்படி மாறியது?-ஜெ.ஜெயரஞ்சன்

‘சோ.’ ராமசாமி போன்ற அரசியல் விமர்சகர்கள் தமிழக வரலாற்றைப் பேசும்போதெல்லாம் 1967 என்ற பிரிவுக் கோட்டை உருவாக்கி வளர்த்தார்கள். 1967க்கு முன்பு பாலும், தேனும் தமிழகத்தில் ஆறாக ஓடியதாகவும், 1967க்குப் பின் நாடு கெட்டு குட்டிச் சுவர் ஆகிவிட்டதாகவும் திரும்பத் திரும்பக் கூறி அக்கூற்றை பொதுப்புத்தியில் பதிப்பதில் பெரும் வெற்றியைப் பெற்றதான தோற்றத்தை உருவாக்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக இப்போதும் பாஜக முதல் விளிம்பு நிலை கும்பல்கள் வரை 1967க்குப் பின் தமிழகம் சீரழிந்தது எனக் கூறுவது தங்கள் இருப்பை நியாயப்படுத்திக்கொள்ளும் தேவைக்காக பரப்பி வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன? தமிழகம் தொழில் துறையிலும், இன்ன பிற உற்பத்தித் துறைகளிலும் உயர்ந்து செம்மாந்து நடைபோடும் அதேவேளையில் சமூக நலனிலும் முன்னிலை வகிக்கும் தனித்துவத்தை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கூட எடுத்துக்காட்டாக மிளிர்வதைப் பல ஆய்வு அறிஞர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். இவர்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென்னும் அடங்குவார்.

இது எப்படிச் சாத்தியமாயிற்று? எதனால் இது நிகழ்ந்தது? மற்ற மாநிலங்களில் நடைபெறாத ஒன்று, இந்தியாவிலும் நடைபெறாத ஒன்று தமிழகத்தில் எப்படி நடந்தது? இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முதல் தேவை, தமிழகம் முன்னேறியுள்ளது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம். தேங்கிவிட்டது, தேய்ந்துவிட்டது எனக் கோஷம் போடுவோருக்கு இவ்வினா எப்படித் தோன்ற முடியும்? இவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இக்கேள்விக்கான விடையை தற்போது வெளிவந்துள்ள ஒரு புத்தகம் முன்வைக்கிறது. எஸ்.நாராயணன் என்பவர் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். அவர் தமிழகத்திலும், இந்திய அளவிலும் பல நிர்வாகப் பொறுப்புகளை வகித்தவர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.

அவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் “The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu”. இப்புத்தகத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அப்புத்தகத்தின் ஒரு சிறு பகுதி நேற்றைய (ஜூலை 24) ஆங்கில இந்து பத்திரிகையில்நடுப்பக்கத்திற்கு எதிர் பக்கத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கத்தை மின்னம்பலம் வாசகர்களுக்காக வழங்குகிறேன்.

1969ஆம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு மு.கருணாநிதி முதல்வரானார். அமைச்சரவையில் பலரும் கொள்கைவாதிகளாகவும், இந்தி எதிர்ப்பாளர்களாகவும், ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களாகவும் இருந்தனர். பலரும் இளைஞர்களாகவும், படித்தவர்களாகவும் இருந்தனர். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் தங்கள் அரசு முன்பிருந்த அரசுகளை விட சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் காட்ட முனைப்போடு இருந்தனர். 1969க்கும் 1976க்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் இவை அனைத்தின் கலவையால் விளைந்தவையே.

அரசின் ஆதரவை வழங்குவதில் தந்திரமாகச் செயல்பட்டதுடன் அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் கட்சித் தொண்டர்களையும் பயன்படுத்தினர். நான் அப்போது ஓர் இளம் அரசு அதிகாரி. மக்களின் கோரிக்கைகளை கட்சியின் தொண்டர்கள் முன்னெடுப்பதை நான் கண்டிருக்கிறேன். இது ஒரு மாற்றமாகும். அதற்கு முன்பெல்லாம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களை வளர்ச்சித் திட்டங்கள் குறித்துச் சந்தித்தபோதெல்லாம் அத்தலைவர்கள் அரசு ஊழியர்களுடன்தான் காணப்படுவர். ஆனால், அதன் பின்பு மாவட்டச் செயலாளர் மற்றும் அதன் கீழ்மட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்தனர்.

நீர்ப் பாசனமாகவோ, குடிநீராகவோ, உணவு தானிய விநியோகமாகவோ அல்லது பள்ளிக்கூட செயல்பாடாகவோ இப்பிரச்சினைகள் இருந்தன. அரசின் அலுவலர்களான நாங்கள் அதுவரை இப்பிரச்சினையை முன்வைத்த கீழ்மட்ட அதிகாரிகளையே அறிவோம். புதிதாகக் கட்சியினர் மக்களின் முகவர்களாக இப்பிரச்சினைகளை முன்னெடுப்பதை அப்போது கண்டோம்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்ட பல குழுக்கள் தோன்றின. இக்குழுக்களெல்லாம் ஆளும்கட்சியின் ஆதரவைக் கோரின. துவக்கத்தில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தவர்கள் சிறிது சிறிதாகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று ஆணையிடத் தொடங்கினர். இது வாடிக்கையான ஒன்றாக மாறிப்போனது. மக்களின் கோரிக்கையை வலுவாக முன்வைக்க இது உதவினாலும் பிரச்சினைகளை ஒரு கோணத்தில் மட்டுமே நிர்வாகம் அணுக இம்முறை அனுமதித்தது.

சாதியின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றம்

கட்சியின் அமைப்பிலும் சரி, அரசு வேலைகளிலும் சரி பிற சாதிகளின் பங்களிப்பு கூட வேண்டும் எனக் கவனமாகச் செயல்பட்டனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் நமக்குத் தெளிவாக ஒன்று புலப்படும். 1960க்கும் 1980க்கும் இடையே யாரெல்லாம் அரசுப்பணி பெற்றனர் என்பதில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பெரும் பகுதியிலான ஊழியர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து பணி அமர்த்தப்பட்டனர். பட்டியல் வகுப்பு, பிற்படுத்தப்பட்டோர் பெருமளவில் பணியில் இணைந்ததால் அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவத் தொகுப்பே (Composition) மாறிப் போனது. இந்த ஊழியர்களெல்லாம் கிராமப்புறங்களிலிருந்து வந்ததோடு, கிராமப்புறங்களின் பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர். புதிய அரசின் அக்கறைகளும் இந்த ஊழியர்களின் அக்கறைகளும் ஒன்றாக இருந்தன.

கீழ்மட்ட நிர்வாகத்தில், குறிப்பாகக் காவல் துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் கணிசமான அளவில் பணியில் அமர்ந்தனர். இட ஒதுக்கீட்டின் விளைவாக, முன்னேறிய சாதியினரின் எண்ணிக்கை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் குறைந்து போனது. அதேவேளையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியது. பார்ப்பன அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது (அவர்களின் மக்கள்தொகைக்குத் தகுந்த அளவிற்கு). மக்கள்தொகையில் இருந்த பன்முகத் தன்மைக்கு ஏற்ப அரசு நிர்வாகமும் மாறியது. இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றமாகும்.

1929ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் முன்மொழிந்த அந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மலர்ந்தது. அதே வேளையில் அரசு புதிதாகப் பெற்ற ஊழியர்கள் பெரும்பாலும் பல்வேறு பின்புலத்திலிருந்தும், சிறு நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வந்தனர். அவர்களது எண்ண ஓட்டமும் திராவிடக் கட்சிகளின் எண்ண ஓட்டத்தை ஒத்திருந்தது. நான் அப்போது சென்னையில் மாணவனாக இருந்தேன். எனது சக மாணவர்களும் இந்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள். இத்தகைய ஊழியர்கள் அரசு நிர்வாகத்தில் ஒரு சமூக சமநிலையை உருவாக்கினார்கள். இந்த ஊழியர்கள் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியக் காரணியானார்கள். இப்போதும் திகழ்கிறார்கள்.

நான் 1965ஆம் ஆண்டில் அரசுப் பணியில் இணைந்தபோது இருந்த அரசு ஊழியர்களின் வர்க்கப் பின்னணி வேறு. இப்போதுள்ள ஊழியர்களின் வர்க்கப் பின்னணி வேறு. இப்போது சமூகத்தின் பல அடுக்குகளிலிருந்தும் ஊழியர்கள் வருகிறார்கள். முன்பு மாவட்ட நிர்வாகத்தின் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் அரசு நிர்வாகம் சார்ந்திருந்தது. அரசின் திட்டங்களை ஆட்சியாளர்கள்தான் செயல்படுத்தினர். இது காலனிய ஆட்சியிலிருந்து தொடர்ந்தது. தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தோர் பலரும் காலனிய நிர்வாகத்தில் பணியைத் தொடங்கியவர்கள். அவர்கள் அதே பாணியையும் நிர்வாக முறையையும் தொடர்ந்தார்கள். எங்களுக்கு முசெளரியில் பயிற்சி அளிக்கப்பட்டபோது மாவட்ட ஆட்சியரின் பணியின் முக்கியத்துவம் குறித்து பலமுறை விளக்கப்பட்டது. மேலிருந்து வரும் திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்தும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு இருந்தது.

தொண்டர்களின் தொண்டு

இந்த நிலை 1967க்குப் பின் தமிழகத்தில் மாறியது. திமுக மக்கள் இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சி. ஆட்சியிலிருக்கும்போது மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டியது அக்கட்சிக்கு இன்றியமையாததாக ஆயிற்று. திமுக ஒரு கட்டுப்பாடு நிறைந்த கட்சி. அதன் மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமையுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர். மாவட்டத்தின் அன்றாட நிர்வாகம் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருடன் விவாதித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற பதவி மேலும் அதிகாரம் பெற்றது.

எஸ்.பி.அம்புரோஸ் போன்ற அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது. பல சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகத்தைக் கையிலெடுக்கத் தலைப்பட்டதை அவர் கண்டார். ஆனால், மாவட்ட அமைச்சர்களும், முதல்வரும் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

1971இல் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்ற பின் நிலைமை மாறத் தொடங்கியது. கட்சித் தொண்டர்களின் செல்வாக்கு கூடியது. மாவட்ட ஆட்சியரும், திமுக மாவட்டச் செயலாளரும் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். பதவிகளை வழங்குவதில் அரசு சலுகை காட்டியது. நிர்வாக ஊழியர்கள் அரசியல் மயமாயினர். மூத்த அதிகாரிகள் ஓய்வு பெற்றனர் அல்லது ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்றபின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியிலும் இது தொடர்ந்தது.

ஆக, தமிழகம் கண்ட வளர்ச்சியின் அடித்தளமாக இருப்பது பெரியார் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதும் இதன் விளைவாக அரசு நிர்வாகம் மக்கள் வயப்பட்டதால் சமூக நலத் திட்டங்களை இந்த அளவிற்கு உருவாக்கிச் செயல்படுத்தி முன்னிலை பெற்றோம் என்பதும் நமக்கு விளங்குகிறது.

நாடு 1967க்குப் பின் சீரழிந்தது என்பது எவ்வளவு பெரிய அடிப்படை ஆதாரமற்ற மோசடி கோஷம் என்பது விளங்குகிறதல்லவா?

கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

மின்னஞ்சல் முகவரிfeedback@minnambalam.com

நன்றி-www.minnambalam.com

#திராவிட_இயக்கம் #திராவிடம் #தந்தை_பெரியார் #கருணாநிதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*