“அரசியல் ஆளுமையாம் தலைவர் கலைஞருக்கு அனைத்துக் கட்சியினரின் புகழ்மாலை!”

சென்னையின் பூர்வகுடிகள் யார்?

தமிழகத்தில் வறட்சியும் தண்ணீர் பஞ்சமும் ஏற்படும் ஆபத்து !

“முக்கியமான அரசியல் ஆவணப்படம்” -ஏர் மகாராசன்

தோழர் வளர்மதி மருத்துவமனையில் அனுமதி!

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நெகிழ்ச்சிமிக்க நினைவேந்தல் கூட்டம் குறித்த மடல்.மறைந்தார் என்று இயற்கை சொன்னாலும் யாருக்கும் அதை ஏற்கச் சிறிதும் மனம் இடம் தராததால், தமிழரின் வாழ்வெல்லாம் நிறைந்தார் என்பதே தலைவர் கலைஞரின் பெருமையாக அமைந்துள்ளது. நாள்தோறும் அவர் நினைவிடத்திற்கு ஆயிரம் ஆயிரமாய் வரும் அனைத்துத் தரப்பு தமிழ் மக்களின் உள்ளன்புடன் கூடிய அஞ்சலிகளும், ஊர்தோறும் பொதுமக்களுடன் இணைந்து கழகத்தினர் நடத்துகின்ற இரங்கல் கூட்டங்களும் – நினைவேந்தல் ஊர்வலங்களும் ஓய்வறியா அந்த சூரியன் ஒருபோதும் மறையவே இல்லை என்பதைத்தான் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

பன்முகத் திறமை கொண்ட தலைவர் கலைஞர் அவர்களின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நினைவேந்தலை தலைமைக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறோம். பத்திரிகையாளர் கலைஞருக்கு திருச்சியிலும், இலக்கியவாதி கலைஞருக்கு மதுரையிலும், கலைத்துறை வித்தகர் கலைஞருக்கு கோவையிலும் எழுச்சியோடும் – உணர்ச்சியோடும் – உள்ளன்போடும் நடைபெற்ற மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து நேற்று (26-8-218) அன்று நெல்லைச் சீமை பாளையங்கோட்டையிலே தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற, ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பிலான பெருந்திரள் நினைவேந்தல் பொதுக்கூட்டம் பொங்கும் கடலென நடந்தேறியிருக்கிறது.

வீரத்தின் விளைநிலம் நெல்லைச் சீமை. வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராக வாய் வீரமல்ல – வாள் வீரம் காட்டிய வீரபாண்டிய கட்டபொம்மனும் அவர் தம்பி ஊமைத்துரையும் தங்கள் இன்னுயிர் தந்து தாய்நாட்டை – தமிழ்நாடைக் காக்கப் போரிட்ட மண்.

அந்த வீரத்திற்கு தலைவணக்கம் செலுத்தி, அவர்தம் நினைவாக பாஞ்சாலக் குறிச்சி நினைவுக் கோட்டையை உருவாக்கித் தந்தவர் நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்கள். நெல்கட்டும்செவல் பூலித்தேவன் உள்ளிட்ட எண்ணற்ற வீரமறவர்களைத் தந்தது நெல்லைச் சீமை.

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில், சுதேசிக் கப்பல் கம்பெனியை தீரமுடன் நடத்திக்காட்டி, சிறைப்பட்டு, செக்கிழுத்து, கல் உடைத்த தியாகி வ.உ.சி. அவர்களைப் போற்றி, அவர் இழுத்த செக்கினை தியாகத் தழும்புகள் நிறைந்த நினைவுச் சின்னமாக்கியவர் தலைவர் கலைஞர்.

அவருடைய அரசியல் பயணத்தில் நெல்லைச் சீமைக்கு எப்போதுமே தனித்துவமான இடம் உண்டு. ஒன்றிணைந்த நெல்லை மாவட்டத்தின் தூத்துக்குடியில் நடந்த கழக மாநாட்டை கே.வி.கே.சாமி போன்ற திராவிட இயக்க தீரர்களின் துணையுடன் வெற்றிகரமாக நடத்திக் காட்டி, பேரறிஞர் அண்ணாவின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழி காக்கும் போரில், தலைவர் கலைஞர் அவர்கள் தண்டனை பெற்று தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டது நெல்லைச் சீமையில் உள்ள பாளையங்கோட்டை சிறையில்தான். தனது அருமைத் தம்பி சிறைப்பட்டிருப்பதை நேரில் கண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், “என் தம்பி அடைபட்டிருக்கும் இடம் எனக்கு புண்ணிய தலம்’ என்று சொன்னார்.

போர்க்களமும், போராட்டமும் சுயமரியாதையும், பகுத்தறிவும் உரிமை முழக்கமுமே தலைவர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வு. 95 வயதில் 80 ஆண்டுகளைக் கடந்த பொதுவாழ்வு.

வாழ்நாளெல்லாம் தமிழுக்காக – தமிழ்நாட்டுக்காக – தமிழினத்திற்காக உழைத்த அந்த ஓய்வறியா சூரியனின் பெருமைகளை எடுத்துரைக்க நாட்கள் போதாது, வாரங்களாகும். வாரங்கள் போதாது, மாதங்களாகும். மாதங்களும் கடந்த ஆண்டுகள் தேவை. எனினும், ஒரு சில வார்த்தைகளையாவது தலைவர் குறித்து பகிர்ந்துகொள்வதன் மூலம் இந்தியா போற்றிய அரசியல் ஆளுமையான கலைஞருக்கு தங்களின் புகழ்வணக்கத்தை செலுத்திட முடியும் என்ற தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒரே மேடையில் அவர்கள் ஏறி நின்று, உலகத் தமிழினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் கலைஞர் அவர்களுக்கு நிறைவான நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நெல்லையிலே மிகச்சிறப்பாக நடந்தேறியிருக்கிறது.

அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை வழித் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய மானமிகு ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பிலான இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அருமைச் சகோதரர் சு.திருநாவுக்கரசர், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச் சகோதரி தமிழிசை சவுந்திரராசன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கொள்கை பாசமிக்க அண்ணன் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அன்புத் தோழர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமிக்க ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் அருமைச் சகோதரர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, கொங்கு நாடு மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் சூரியமூர்த்தி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இனமானம் காக்கும் பணியில் தி.மு.கழகத்துடன் இணைந்து நிற்கும் பாசத்திற்குரிய சகோதரர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய சகோதரர் தி.வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் அன்புக்குரிய என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா. சற்குணம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகில இந்திய மூவேந்தர் முன்னிணிக் கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தேவர், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் பாசமிகு அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர், திருப்பூர் அல்தாப், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல்காதர், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எம்.அம்மாவாசி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் அன்புச் சகோதரர் இனிகோ இருதயராஜ் என மிக நீண்ட பட்டியலாக இருந்தாலும் இவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கலைஞர் என்ற ஆளுமை நிலைத்திருக்கின்ற காரணத்தினால், அந்த உள்ளத்தைத் திறந்து காட்டும் வகையில் நெல்லை – பாளை நினைவேந்தல் நிகழ்வில் அவர்களின் உரை அமைந்திருந்ததை எண்ணி எண்ணி இதயம் நெகிழ்ச்சி அடைகிறது.

அரசியல் தளங்களில் இந்தத் தலைவர்கள் பலரும் தலைவர் கலைஞர் அவர்களுடன் உடன்பட்டும் இணைந்திருக்கிறார்கள், முரண்பட்டும் நின்றிருக்கிறார்கள். எந்த நிலையில் இருந்தபோதும், தலைவர் கலைஞர் என்ற பேராளுமையின் தாக்கத்தை உணர்ந்தவர்களாக, அந்த ஆளுமையைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலைக் காண முடியாது என்ற உண்மை நிலையை உணர்ந்தவர்களாக, எல்லாவற்றுக்கும் மேலாக, தலைவர் கலைஞரின் பேரன்புக்கு உரியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் கொள்கை மாறுபாடு கொண்ட கட்சிகள் கூட ஒரே மேடையில் இணைந்து நின்று கலைஞரின் புகழுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர் என்பதற்கான காரணம்.

தமிழ்நாட்டில் கொள்கையே இல்லாத கட்சிகளும் உண்டு. அவர்கள் குறித்து நாம் அக்கறை செலுத்த வேண்டியதில்லை. கொள்கை அளவில் நமக்கு உறவாகவும், எதிராகவும் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைத்தும் எதிர்கொண்டும் நின்றதில் தலைவர் கலைஞர் அவர்களின் அரசியல் மாண்பு போற்றுதலுக்குரியது. அதனால்தான், மாறுபட்ட கொள்கை கொண்டவர்களும் அந்த மாண்பை நெல்லை மேடையில் பாராட்டினார்கள்.

தன் இறுதி மூச்சு அடங்கியபிறகும் மானமிகு சுயமரியாதைக்காரராகவே விளங்கிய தலைவர் கலைஞர் அவர்கள், கடைசி வரை சமூக நீதிக்காகப் பாடுபட்டு வெற்றி கண்டது, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாத்தது, பெண்களுக்கு சமூக – பொருளாதார விடுதலையை உருவாக்கியது, ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தபோதெல்லாம் நெருக்கடி சூழல்களை எதிர்த்து நின்றது, மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தது மட்டுமின்றி, சென்னையை இந்தியாவின் அரசியல் தலைநகரம் போல மாற்றிக்காட்டி டெல்லி அரசியலை சுழல வைத்தது, தமிழுக்கும் தமிழருக்கும் ஆற்றிய தொண்டு, தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய புரட்சிகரமான சட்டங்கள் – திட்டங்கள் எனப் பட்டியலிடுவதற்கு ஒரு கடிதம் போதாது என்கிற அளவிற்குத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றியுள்ள பணியினை அனைத்துக் கட்சித் தலைவர்களும் உளப்பூர்வமாக எடுத்துரைத்து, அந்த மாபெரும் தலைவருக்கு “பாரத ரத்னா “ பட்டம் வழங்க வேண்டும் என்பதையும், அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், எந்நாளும் அவர் புகழ் போற்றப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கலைஞர் ஒரு சகாப்தம். அரசியல் ஆளுமைமிக்க அந்த சகாப்தம் பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் நெல்லையிலே நினைவுரை வழங்கி புகழ்மாலை சூட்டியுள்ள நிலையில், வருகிற 30ந் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையிலே அகில இந்திய அரசியல் தலைவர்கள் புகழ் வணக்கம் செலுத்தவிருக்கிறார்கள்.

எல்லையில்லா புகழ் மழையாய் நெல்லையில் பொழிந்த தலைவர்களின் உரைகளும், சென்னையில் நிகழவிருக்கும் நினைவேந்தலில் வெளிப்படவுள்ள முழக்கங்களும் தலைவர் கலைஞர் அவர்களால் திராவிட இயக்கம் பெற்ற வெற்றியின் அடையாளம். தமிழ்நாடு பெற்ற நாகரிக உயர்வின் வெளிப்பாடு. இந்திய நாட்டிற்கு வழிகாட்டிய ஜனநாயக விளக்கு.

இந்த உரைகளையெல்லாம் சிறு புத்தகங்களாக வெளியிடுவதுடன், நவீன தொழில்நுட்பமான சமூக வலைத்தளத்திலும், இணையத்திலும் இவற்றை சிறுசிறு பகுதிகளாகப் பதிவேற்றி, கழகத் தொண்டர்களிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதற்கான பணியை உங்களில் ஒருவனான நான் கவனத்துடன் செயல்படுத்துவேன்.

வான் உள்ள அளவும், நீர் உள்ள அளவும், நிலம் உள்ள அளவும், அதில் தமிழ் உள்ள அளவும், கடைசித் தமிழன் உள்ள அளவும் நிலைத்து நிற்கும் கலைஞரின் புகழைப் பாடுவோம். பெரியார் – அண்ணா வழியில் அவர் மேற்கொண்ட இலட்சியப் பயணத்தை அவர் விட்ட இடத்திலே இருந்து தொடருவோம். ஆயிரம் காலத்துப் பயிரான திராவிட இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் தலைவர் கலைஞர் அவர்களின் மீது ஆணையிட்டுக் காப்போம்!. வெற்றியை நோக்கி விரைந்திடுவோம்!
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்.
திருவள்ளுவர் ஆண்டு 2049, ஆவணி – 11.
27-08-2018.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*