இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்

#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்!

ஆதவன் மறைவதில்லை!

கலைஞர் கருணாநிதியின் கல்லறை வாசகம் இது!

இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது

நூறு நூறு ஊர்வலங்களை வழி நடத்திச் சென்ற தலைவனின்

இந்த நீள் பயணத்தை மக்கள் வழி நடத்திச் செல்கிறார்கள்

நீதி கேட்டு பல இலட்சம் மைல்கள் நடந்த தலைவனின்

இறுதிப் பயணம் கோடானுகோடி கண்ணீர் துளிகள்மேல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

ஒரு தலைவனின் முகத்தை கடைசியாகக் காண

ஒரு தலைவனின் கரத்தை கடைசியாகத் தொட இலட்சோப இலட்சம் மக்கள் அலைமோதுகிறார்கள்

தடியடிபடுகிறார்கள் நெரிசலில் மிதிபடுகிறார்கள்

கண்ணுக்குத் தெரியாத ஒரு அழைப்பு அவர்களை ஆட்கொள்கிறது

அவர்களால் அந்தக் கரகரத்த குரலின் அழைப்பை ஒருபோதும் மறுக்க முடிந்ததில்லை

குடிக்கத் தண்ணீர் இல்லை

நிற்க நிழல் இல்லை

யாருக்கும் எந்தப் புகாரும் இல்லை

மக்கள் அலை அலையாக வந்துகொண்டிருக்கிறார்கள்

மீட்க முடியாததை மீட்பதற்காக முழக்கமிடுகிறார்கள்

சொல்ல முடியாததை சொல்தற்காக வாய்விட்டு அழுகிறார்கள்

ஒரு திருநங்கை நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறாள்

கட்டை ஊன்றி நடக்கும் ஒரு மனிதன் கூட்டத்தில் தடுமாறி விழுகிறான்

ஒரு எளிய மனிதனின் மூக்குக் கண்ணாடி தவறி விழுகிறது

அவர்களுக்குத் தெரியும்

அவன் தங்களைப் போன்ற ஒரு எளிய மனிதன்

என்று அவன் தங்களைப்போன்றே அநீதி இழைக்கபட்டவன் என்று

அவன் தங்கள் குருதியிலிருந்து முளைத்து வந்தவன் என்று

அவனே அவர்களுக்கு மகனாக மகனாக இருந்தான் என்று

அவனே அவர்களுக்கு தகப்பனாக இருந்தான் என்று

அவனே அவர்களுக்கு மீட்பனாக இருந்தான் என்று

வரலாற்றின் கொடூரமான விதிகளுக்கு எதிராக அவனே தங்கள் கடைசித் திருப்புச் சீட்டாக இருந்தான் என்று

பரிதவிக்கும் கரகங்ளுக்குத்தான் தெரியும் பறிகொடுத்தல் என்றால் என்னவென்று போராடுகிறவர்களுக்குத்தான் தெரியும்

போர்களத்தில் தங்கள் படைக்கலனை இழப்பது என்றால் என்னவென்று

இதோ தலைவனின் முகத்தில் பட்டுத் தெறிக்கும்

இந்த அந்தியின் சூரியன் ஆயிரம் மடங்கு பிரகாசமுடையதாகிறது

மக்களின் மேல் பொழியும் மழைத்துளிகள் காலத்தின் பாலைவனங்களை ஈரமாக்குகிறது

ஒரு சித்தாந்தம் ஒரு தலைவனின் பெயராக இருந்தது

ஒரு எதிர்க்குரல் ஒரு தலைவனின் உடலாக இருந்தது

ஒரு போராட்டம் ஒரு தலைவனின் வாழ்வாக இருந்தது

 

’அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்?’ என்று கேட்ட அதே தலைவன்தான் ’ராமர் எந்தக் கல்லூரியில் படித்தான்?’ என்றும் கேட்டான்

அவன் கையில் எடுத்த பகுத்தறிவின் வாள் ஒருபோதும் உறைக்குத் திரும்பவில்லை ஒரு துயரமான இசை துயரத்தைச் சொல்லிவிடுமா?

ஒரு துயரமான கண்ணீர் துயரத்தை வென்று முடியுமா?

ஒரு இரங்கற் பா இரங்கும் இதயத்தைக் காட்டிவிடுமா?

அணுவணுவாக நகர்கிறது இறுதி ஊர்வலம்

அது ஒரு நாளும் எங்கும் முடிவடையாத ஊர்வலம் இலட்சியத்தின் கனல் எம் நெஞ்சில் எரிகிறது

நீதிக்கான நெருப்பு எம் கண்களில் படர்கிறது ஒருபோதும் அணையா நெருப்பு

அவன் மூட்டிய நெருப்பிற்கு அவனே எண்ணெயாக இருந்தான்

அவன் வளர்த்த வேள்விக்கு அவனே நெய்யாக இருந்தான்

காலத்தின் நட்சத்திரக் கூட்டங்களுக்குள் ஒரு தலைவனின் முகம் அழிவற்ற நட்சத்திரமாகிக்கொண்டிருக்கிறது

தலைவனை புதைத்த இடத்தில் வனங்கள் உருவாகும்

பறவைகள் கூடுகட்டும்

நூறு நூறு வசந்த காலங்கள் வரும்

எப்போதெல்லாம் இந்த நிலத்தின் மீது ஒடுக்குமுறையின் நிழல் படிகிறதோ

அப்போதெல்லாம் தலைவன் உறங்கும் கடற்கரையில்

ஆழிப்பேரலைகள்

எழும் பிரமாண்டமான கடலில் பிரமாண்டமான

இருள் கவிவதைத் கண்டு வீடு திரும்ப மனமில்லாமல் மனம் பிறழ்ந்து

அங்கேயே நின்றுகொண்டிருக்கிறோம்

8.8.2018 மாலை4.19 மனுஷ்ய புத்திரன்

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*