ஈடில்லா படைப்பாளியாம் தலைவர் கலைஞருக்கு எழுத்துலகின் இதய அஞ்சலி!

#KeralaFloods இராணுவம் சாதிக்காததை சாதித்த மீனவ ஹிரோக்கள்!

கவிஞர் மனுஷ்யபுத்திரனை மிரட்டும் இந்துத்துவ குழுக்கள்!

தண்ணீர்ச் சிறை -கவிஞர் சுகுமாறன்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு:நரேந்திர தபோல்கர் கொலையில் குற்றவாளி கைது!

என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும், இலக்கிய உலகத்தின் இரங்கல் குரல் குறித்த பகிர்வு மடல்.

முத்தமிழறிஞர் – எத்திசையும் புகழ் மணக்கும் இன்பத்தமிழை பட்டி தொட்டியெங்கும் தன் ஏற்றமிகு படைப்பாற்றலால் கொண்டு சேர்த்தவர் –“அன்னைத் தமிழுக்கு அணி செய்வதே தன் பணி” என அனுதினமும் அயராது பாடுபட்டவர் – செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தவர் – தமிழுக்காக வாழ்ந்து தமிழாகவே ஆன நம் தலைவர் கலைஞர். அவருக்கு தமிழ் இலக்கிய உலகம் செலுத்திய புகழ் வணக்கம், தமிழ் வளர்த்த மூதூர் மதுரையில் நம் கண்கள் கலங்க, உள்ளம் நெகிழ நிறைவேறியிருக்கிறது.

திருச்சியிலே ஊடகத்துறை வல்லுநர்கள் பங்கேற்ற தலைவர் கலைஞரின் நினைவேந்தலைத் தொடர்ந்து, மாமதுரையில் இலக்கிய ஆளுமைகள் பங்கேற்ற உணர்ச்சிமிகு நிகழ்வு நேற்று (19-8-2018) நடந்தேறியது. சங்கத்தமிழுக்கு உரையெழுதிய தலைவரின் நினைவுகளை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர் தலைநகரில் இலக்கியவாதிகள் பகிர்ந்துகொண்டனர். செவியில் நுழைந்து, சிந்தையில் கலந்து, நினைவெல்லாம் நிறைந்திருக்கும் அந்தப் புகழுரைகளை தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளிடம் பகிர்ந்து கொள்வதை, உங்களில் ஒருவனான நான் எனது கடமையாகக் கருதுகிறேன்.

கவிதை – கட்டுரை – சிறுகதை – புதினம் – நாடகம் – திரைப்படம் எனக் கலைஞர் தொடாத எழுத்துத் துறை ஏதுமில்லை. தொட்ட துறைகள் எதிலும் வெற்றி பெறாமலும் விட்டதில்லை. அத்தகைய தலைவருக்கு எழுத்துலகின் பல்வேறு துறை சார்ந்த சான்றோர் அவரது புகழுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

கலைஞரின் நெஞ்சுக்கு நெருக்கமான கவிஞர் மு.மேத்தா:

உலகத்திலே தன் மூச்சுள்ள அளவும், பேச்சுள்ள அளவும் தமிழுக்காகப் போராடிய ஒரே தலைவர் கலைஞர்தான். நாங்கள் தமிழைப் பேசுகிறோம்… எழுதுகிறோம்… அதனால் எங்களை நீங்கள் இங்கே உட்கார வைத்திருக்கிறீர்கள். மொழி எங்களுக்கு நாற்காலி கொடுத்திருக்கிறது. ஆனால், கலைஞர் ஒருவர்தான் மொழிக்கு சிம்மாசனம் கொடுத்தவர். செம்மொழி என்ற சிம்மாசனத்தைத் தமிழுக்குக் கொடுத்தவர் கலைஞர்.

நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான கலாப்ரியா:

கலைஞர் அவர்கள் முழுவதும் மரபு சாராமல், முழு வசன நடையும் இல்லாமல் ஒரு புதுமையான நடையில் 1944லேயே எழுதினார். அதனை அன்றைய கவிஞர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவரே சொல்லியிருக்கிறார், என் கவிதை யாப்பின்றி போனாலும் போகட்டும். என் நாடு – மொழி – இனம் – மான உணர்வெல்லாம் காப்பின்றிப் போகக்கூடாது என்று. ஆனால், அவருடைய கவிதைகள்தான் கவியரங்கத்திற்கு புதிய ஒரு வடிவத்தைக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

திராவிடக் கொள்கைகளை தமிழ்க் கவிதையில் முழங்கிடும் சுயமரியாதைக் கவிஞர் அறிவுமதி:

திராவிட இயக்கம் என்பது கைநாட்டுப் பேர்வழிகளை கையெழுத்துக்காரர்களாக்கிய வரலாற்று இயக்கம். அய்யா கலைஞர் அவர்கள் தன் வாழ்க்கையின் நீளத்தில் தமிழின் நீளத்தையும், தமிழரின் நீளத்தையும் நமக்கு உழைத்துக் கொடுத்தவர். இப்போது நம்மை கழுகுகள் சூழ்ந்திருக்கிற நேரம். இந்த நேரத்தில் தமிழர்கள் நாம் தி.மு.கழகத்தை அமர வைக்க வேண்டிய இடத்தில் அமர வைக்கவேண்டும்.

புதுமைமிகு இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளியான ச.கந்தசாமி:

கலைஞர் அவர்கள் தனது மேதமையை தமிழ் மூலமாகச் சொல்லியிருக்கிறார். அவர் அளவுக்கு தமிழ்நாட்டில் தமிழுக்கு எந்த முதலமைச்சரும் செய்தது கிடையாது. அந்த வகையில், தமிழ்நாடு கண்ட சிறந்த முதலமைச்சர் என்று சொன்னால் அது அவரேதான். எல்லாப் பணிகளையும் நேர்மையாக செய்யக்கூடியவர். அவர் தமிழர் – திராவிடர் -இந்தியர். எனவே, கலைஞருக்கு “பாரத ரத்னா” பட்டம் அளித்துச் சிறப்பிக்க வேண்டும்.

பெண்ணுரிமை போற்றும் திராவிடப் படைப்பாளி வழக்கறிஞர் அ.அருள்மொழி:

திராவிட இயக்கத்தின் சிந்தனையுடன் இராவணனின் புகழைப் பரப்பும் வகையில் படைப்புகளைத் தந்த, இராவண காவியத்தைப் பரப்பியவர் கலைஞர். காலத்திற்கேற்ற வகையில் தமிழை வளர்த்தவர். மூன்று தமிழோடு நிற்கவில்லை. இன்றைய இளைஞர்கள் கையில் உள்ள அலைபேசியில் தமிழில் அச்சிடுகிறார்களே அதற்கு வித்திட்டு, தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை உருவாக்கி, அறிவியல் தமிழை வளர்த்த பிதாமகன் கலைஞர். அவர் வளர்த்த இன்னொரு தமிழ். சமத்துவத் தமிழ் – ஒற்றுமைத்தமிழ். இந்த இயக்கத்தில் மட்டும்தான் யார் என்ற அடையாளம் தேவையில்லை. தமிழன் என்ற பெயர் மட்டுமே போதுமானது. பிரிக்கின்ற மற்றவையெல்லாம் தூரவைத்து, இணைக்கும் மொழியை மட்டுமே அருகில் வைத்து, ஒற்றுமைத் தமிழை உருவாக்கி, இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.

இலக்கியவெளியில் தனித்துவமான படைப்பாற்றலால் புகழ்பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:

வள்ளுவர் கோட்டம் என்பது கலைஞரின் கனவு. அங்கு நிற்கக்கூடிய அந்தத் தேர், தமிழ்த் தேர். அங்கு செதுக்கப்பட்டிருக்கும் அந்தக் குறள்கள் தமிழனின் பெருமையை சொல்லக் கூடியவை. ஆசை ஆசையாக -ஒவ்வொரு கல்லாகப் பார்த்து அவர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தினைத் திறக்கும்போது அவர் அழைக்கப்படவில்லை. இந்தத் தமிழினம் இப்படியே தன்னை விட்டுவிடுமா என்று அவர் நினைத்தார். இல்லை, அப்படி விட்டுவிடாது என்பதற்கு அடையாளமாக பின்பு, அதே அரங்கில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார். தமிழர்கள் தமிழுக்கு நன்மை செய்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். குமரி முனையில் அவர் வைத்த வள்ளுவர் சிலை உயரமாக நிற்கிறதே, அதைவிட உயரமாக தமிழ் மக்களின் மனதில் கலைஞர் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமாக அரசியல்ரீதியாகவும், இலக்கியம் வாயிலாகவும் தலைவர் கலைஞரை அறிந்த படைப்பாளி வாசந்தி:

எங்கள் பத்திரிகையின் தமிழ்ப் பிரதியில் கலைஞரைப் பற்றிய கட்டுரை வந்தது. அது அவரைக் கோபப்படுத்தலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமையன்று தமிழ்ப் பிரதி வந்தது. ஞாயிறன்று முரசொலியில் வரும் புதையல் இணைப்பு இதழில் எல்லா பக்கங்களிலும் என்னை கிழி கிழியென்று கிழித்துவிட்டார்கள். நான் அதை எதிர்ப்பார்க்கவில்லை. ஆங்கிலப் பதிப்புக்கு கலைஞரின் பேட்டி ஒன்று தேவைப்பட்டது. கோபாலபுரத்தின் மாடியில் இருக்கிறோம். கட்டுரை பற்றி நேரில் என்ன கேட்பாரோ, என்ன பதில் சொல்வது என்ற படபடப்பில் காபியைக் கூட குடிக்க முடியவில்லை. அவரோ, முரசொலியில் அந்தக் கட்டுரை எனக்குத் தெரியாமலே போட்டுட்டாங்க என்றார். ஒரே வரியில் அவர் என்னை சமாதானப்படுத்திய பாங்கு அசத்தலாக இருந்தது. அதற்கப்புறம் நான் அவருக்கு அடிமை.

இளம் படைப்பாளரும் திருவாரூர் மண்ணின் கவிஞருமான ஹாஜாகனி:

இந்த இனம் செல்லக்கூடிய இலக்கு எது என்பதை சரியாக இயம்பக்கூடிய இலக்கியத்தை கலைஞர் எழுதினார். அவர் காகிதத்தில் எழுதியது, தலைமுறை தலைமுறையாக அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு எழுச்சியைத் தந்தது. அவர் களத்தில் எழுதியவை போராட்ட உணர்வை கூர்மைப்படுத்தின. இவற்றுடன், அவர் போர்க்குணமிக்க தொண்டர்களையும் பகுத்தறிவுக் கொள்கை வழியிலான சிந்தனையாளர்களையும் உருவாக்கியிருக்கிறாரே அது, அவர் சதை வடிவில் எழுதிய கவிதை. காகிதத்தில், களத்தில், சதையில் என மூன்று வகையாகத் தன் படைப்புகளைத் தந்திருப்பவர் கலைஞர்.

இடதுசாரி சிந்தனையுடன் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை தன் படைப்புகள் வாயிலாகத் தருகின்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன்:

குமரி முனையில் வள்ளுவருக்கு சிலை வைப்பது, ஆசியாவிலேயே மிகப்பெரிய பொதுநூலகமாக அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் இவையெல்லாம் அமைக்க வேண்டும் என்ற எண்ணமும் கனவும் ஒரு எழுத்தாளனாக இருந்தால்தான் முடியும். அதை நிறைவேற்றியவர் கலைஞர். தமிழ்ப் படங்களில் நீதிமன்றக் காட்சி என்றால் 600 அடி வைப்பதுதான் மரபு. ஆனால், முதன்முறையாக அந்த மரபை மீறி பராசக்தியில் 2000 அடி வைத்தார் கலைஞர். அந்த நீதிமன்றக் காட்சி அவர் வாழ்வின் கடைசிநாள் வரை நீண்டது. அவர் நினைவிடத்தில், முகம் தெரியாத ஒருவன் காலை 5 மணிக்குப் போய் 3 செய்தித்தாள்களை வாங்கி, அங்கே போய் வைத்துவிட்டு வந்திருக்கிறான். பேனாவுக்கும் பேப்பருக்கும் இடையில் இருந்ததுதான் கலைஞரின் உலகம்.

இருவண்ணக் கரை வேட்டி கட்டி தன் திராவிட அடையாளத்துடன் இலக்கிய உலகில் அழுத்தமான முத்திரை பதித்து வரும் எழுத்தாளர் இமையம்:

தமிழ் ஒரு செம்மொழி. அந்த செம்மொழியைக் கலைஞர் பயன்படுத்தியது மட்டுமல்ல, கடைக்கோடித் தமிழனும் அந்த செம்மொழியின் சிறப்பை உணர்ந்து பேசுகிற ஒரு வல்லமையை உருவாக்கினார். அவர் தன் கொள்கையிலிருந்து 80 ஆண்டுகள் மாறவேயில்லை. சமரசம் செய்து கொண்டதேயில்லை. ஆட்சி நிர்வாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசிடமிருந்து பல அரிய திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், எழுத்தில் ஒரு முறை கூட அவர் சமரசம் செய்து கொண்டதேயில்லை.

முத்தாய்ப்பாகவும், மொத்தக் கூட்டத்தின் விழிகள் நனையும்படியும் அத்தனை படைப்பாளிகளின் உணர்வுகளையும் ஒன்றிணைத்து தனது கவிதாஞ்சலி மூலம் வெளிப்படுத்தினார் வித்தகக் கவிஞர் என முத்தமிழறிஞரால் பட்டம் சூட்டப்பெற்று பாராட்டுகள் பல பெற்ற பாடலாசிரியர் பா.விஜய்:

கலைஞர் நினைவிடத்திற்குச் செல்லும் அறிவாலயத் தோழர்களே

அவர் கல்லறை கால்மாட்டை கண்ணீரால் கழுவாதீர்

எவர் தன் முன் அழுதாலும்

துடைக்க வரும் தலைவர் விரல்

தனக்காக அழும் விழியை

துடைக்காமல் போனதினால்

மரித்தாலும் அவர் விழியில் நீர்

துளிர்த்தாலும் துளிர்த்து விடும்

அதனால் அவர் கல்லறைத் தோட்டத்தைக்

கண்ணீரால் கழுவாதீர்.

எண்ணங்கள் முழுமையும் கலைஞர் எனும் இலக்கியப் பெருங்கடலின் பேரலைகளால் நிறைந்திருந்தது. முன்னர் கடல் கொண்டு தமிழ்ச் சுவடிகளை அழித்த மதுரையில், நேற்று தமிழ்க் கடல் புகுந்து, அழியாத படைப்பிலக்கியங்களைத் தந்த கலைஞரின் பெருமையை உரைத்தது.

செங்கோல் ஏந்தி பல சாதனைத் திட்டங்களால் ஒடுக்கப்பட்ட – ஏழை மக்களின் வாழ்வு உயர பாடுபட்ட தலைவர் கலைஞர் அவர்கள், எழுதுகோலால் தமிழை மேம்படுத்தி புது உயரத்திற்குக் கொண்டு சென்றிருப்பதை இலக்கிய உலகில் சாதனை படைத்தோர் உரக்க உரைத்திருப்பது, தாய் இழந்து கன்றுகளாக – தலைவரை இழந்து தவிக்கும் நம் உள்ளத்திற்கு ஆறுதல் மருந்து தடவியதுபோல இருக்கிறது. அந்த அருமருந்து தந்த இலக்கியப் படைப்பாளிகள் அனைவருக்கும் என் நெஞ்சின் அடியாழத்திலிருந்து நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை மாநகரில் தலைவர் கலைஞரின் புகழ் பாடும் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் என் அன்பினை வெளிப்படுத்துகிறேன்.

தனித்துவம் மிக்க தமிழ்ப் படைப்பாளி தலைவர் கலைஞர் அவர்கள் பற்றி இலக்கிய வல்லுநர்கள் எடுத்துக்காட்டிய சிறப்புகளை உடன்பிறப்புகளான நாம் உணர்ந்து உயர்த்திப் பிடிப்போம். தலைவர் கலைஞர் எனும் தகுதி நிறைந்த பாடத்தை நித்தமும் படிப்போம்; என்றும் அவர் வழி நடப்போம்!

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்.
திருவள்ளுவர் ஆண்டு 2049, ஆவணி – 04.
20-08-2018.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*