கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்!

சத்யம் கன்ஸ்டரக்‌ஷன்ஸ் இணைய தளத்திற்குச் செல்ல…

“வாடிக்கையாளருக்கு தரமான கட்டுமானத்தை வழங்குவதோடு அவர்களின் நம்பிக்கையை பெறுவதும்தான்” என் வெற்றியின் ரகசியம் எனச் சிரிக்கிறார்  இராஜா குள்ளப்பன்.

சென்னையில் முன்னணி காண்டிராக்டர்களில் ஒருவர். தன் சத்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தை திறம் பட நடத்தும்  இராஜா குள்ளப்பனின்   சொந்த ஊர் வாணியம் பாடி. தொழிலதிபர் என்று தன் வாழ்வை சுருக்கிக் கொள்ளாத சமூக அக்கறையாளர். தமிழார்வலர், இயற்கை விரும்பி என இராஜா குள்ளப்பனுக்கு  பல முகங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ஈ.சி.ஆர் சாலையில் அவரது காரில் பயணித்துக் கொண்டே இந்த உரையாடலை நடத்தினோம்…

“சின்னவயசுலயே நான் பெரிய கனவுகள் வைத்திருந்தேன். அதை நோக்கித்தான் நான் பயணித்தேன், ஆனால், அந்த வெற்றிகள் கொஞ்சம் தாமதமாக வந்ததே தவிற, வராமல் போய் விடவில்லை. என்னோட சொந்த ஊர் வாணியம்பாடி. ஆசியாவில் தோல் தொழிலுக்கு ரொம்பவே புகழ் பெற்ற ஊர். பிழைக்கத் தெரிந்த யாரும் வாணியம்பாடியிலேயே பிழைத்து விடும் அளவுக்கு தொழிலும், பணப்புழக்கமும் அதிகம் உள்ள ஊர். என்னோட அப்பா இராணுவத்தில் இருந்தார்.  அண்ணன், அக்காணு நாங்க ஆறு பேர், அதில் 6-வது ஆளா பிறந்தவரைத்தான் நீங்க பேட்டி எடுத்துட்டிருக்கீங்க. பொதுவாக எங்க வீட்ல அரசாங்க வேலைக்கு போகணும்ங்கிறதுதான் எல்லோரது எண்ணமாகவும்   இருந்தது. யாருக்குமே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.அவங்களோட எல்லை அவ்வளவுதான். என்னையும் “எதுனா ஒரு அரசாங்க வேலைக்கு போ”ணு தான் சொன்னாங்க.ஆனால் எனக்கு அரசு வேலைக்கு போறது பிடிக்கவில்லை. சொந்தமாக தொழில் செய்யணும்…லாபமோ நட்டமோ சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் என்னோட விருப்பமா அப்போ இருந்துச்சு”

“ஆரம்பத்துல நிறைய தொழில்கள் செய்தேன். ‘சென்னை எலக்ட்ரிக்ஸ்’ என்ற பெயரில் ஒரு எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி வைத்திருந்தேன். அதன் பின்னர் பிளாஸ்டிக் புஷ்கள் செய்யும் கம்பெனி ஒன்று நடத்தினேன். அப்புறம் லெதர் கார்மெண்ட்ஸ் தொழில் செய்தேன். பின்னர் டெக்ஸ்டைல் கார்மெண்ட்ஸ் தொழில் செய்தேன் 20 மெஷின்கள் போட்டு அதில் 50 பேர் வேலை செய்தார்கள். ஆனால், இது எதுவும் எனக்கு சரி வரவில்லை. ஆனால், வாணியம்பாடியில் கடைசியாக ஒரு தொழில் செய்தேன். நானும் என் நண்பர்  அமீனும்  சேர்ந்து வாணியம்பாடியைச் சுற்றி நிறைய கறிக்கடைகள் இருக்கும். அந்த கடைகளுக்குப் போய் மாட்டு எலும்புகளை வாங்கி கால்சியம் தயாரிக்கிற கம்பெனிக்கு அனுப்பணும் அதுதான் வேலை. ஒரு கிலோ மாட்டு எலும்பு 5 முதல் 10 ரூபாய் வரை விற்பனையாகும். கறிக்கடைகளுக்குப் போய் அந்த எலும்புகளை சேகரித்து லோட் லாறியில் ஏற்றி அதை மைசூரில் இருக்கும் கால்ஷியம் தயாரிக்கும் கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறதுக்காக ரெடி பண்ணினேன். ஆனால் அந்த தொழில் எனக்கு பல அனுபவங்களைக் கொடுத்தது மாட்டு எலும்பை கடை கடையாக சென்று எடுத்து வருவதாலும், அருகில் உள்ள சேரிப்பகுதிகளுக்குச் சென்று மாட்டு எலும்பை எடுத்து வந்ததாலும் ஊரில் என்னை இழிவாகப் பேசினார்கள். ஆனால், அது பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு பிரச்சனை வேறு வடிவத்தில் வந்தது. அந்த இடத்தில் இதே தொழிலை வேறு ஒருவர் செய்து கொண்டிருந்தார். அவர் என்னை போட்டியாளராக கருதினார். எலும்புகள் அவருக்கு கிடைப்பதில் இடஞ்சல் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அவர் நாங்கள் மாட்டு  எலும்புகளை அனுப்ப  சேமித்து வைத்திருந்த குடோனுக்கு அவர் தீ வைத்து விட்டார். நான் சம்பாதித்த மொத்த தொகையையும் இழந்ததோடு. அந்த தொழிலையே செய்ய முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டேன்” என்கிறார்  இராஜா குள்ளப்பன்.

அப்புறம் என்ன ஆச்சு…?

“வாணியம்பாடிக்கு தொழில் ரீதியாக ஒரு குட்பை சொல்லி விட்டு 2001-ல் சென்னை வந்தேன். அக்கா வீட்டிற்குப் போனேன். சில நாட்களில் என்னோட மாமா பெட்டி படுக்கை எல்லாம் எடுத்து வெளியில் வீசி “போடா உனக்கு வேற வேலையே இல்லை”என்று திட்டி வெளியில் அனுப்பி விட்டார். அது எனக்கு கடினமாகவெல்லாம் இருக்கவில்லை. திருமுல்லைவாயிலில் ஒரு நண்பரோட அறையில் தங்கியிருந்தேன். ஒரு டெக்ஸ்டைல் கார்மெண்ட் நிறுவனத்தில் சூப்பர் வைசர் வேலை. ஆனால், எனக்கு சிவில் காண்டிராக்ட் ஓர்க் எடுத்து செய்ய வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. 6 மாதம்  டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கம்பெனியில்  பர்ச்சேசிங் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டே டிப்ளமோ இன் சிவில் என்ஜினியரிங் படிப்பை முடித்தேன். வேலை பார்த்துக் கொண்டேதான் என்னால் படிக்க முடிந்தது. நான் மூன்று வருடம் பார்த்த வேலையில் கிடைத்த பணத்தை வைத்து 2003-ஆம் ஆண்டு திருமணம் முடித்தேன். கல்யாணம் முடிச்சி மனைவியோடு சென்னைக்கு வந்து நான் வேலை பார்த்த கம்பெனிக்கு போனால். அவர் “நான் உங்களை கூப்பிட்ட பிறகு வேலைக்கு வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டார். எனக்கு தெரியவில்லை. உண்மையாகவே நமக்கு வேலை போயிடுச்சா அல்லது ஒரு வாரம் கழிச்சு வந்தா மீண்டும் வேலை கிடைக்குமாணு ஒரே குழப்பம். மனைவி கிட்ட வேலைக்குப் போகிறேன்ணு சொல்லிக் கொண்டு சும்மா வெளியில் சுற்றி விட்டு வீட்டிற்குப் போவேன். ஒரு இரண்டு மாதம் கையில் இருந்த காசெல்லாம் காலியான பிறகு வீட்டில் நடிக்க முடியவில்லை “இவனுக்கு வேலை இல்லை” என்பதை புரிந்து கொண்ட மனைவி கோபப்படவில்லை. “உனக்கு நல்ல திறமை இருக்கு அதனால நீ விரும்புற சிவில் பீல்ட்ல நீ நிச்சயம் ஜெயிப்ப” என்று உற்சாகப்படுத்தினார். அப்போ இருந்த எல்லா கஷ்டத்திலேயும் என் மனைவி கொடுத்த உற்சாக டானிக்தான் என்னை வெற்றியை நோக்கி நகர்த்தியது. இதை நான் சும்மா சொல்லவில்லை. அவங்க என்னை ரொம்ப பக்குவமாக ரிசீவ் பண்ணிக்கிட்டாங்க. அவங்க கொடுத்த உற்சாகத்திலும், நம்பிக்கையிலும் நான் ‘சத்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்’ என்று ஒரு நிறுவனத்தை துவங்கி விசிட்டிங் கார்ட் அடிச்சு எல்லா நண்பர்கள், தெரிந்தவர்கள்ணு கொடுத்தேன். அப்போ என்கிட்ட சில ஆயிரம் ரூபாய் கூட கையில் இருந்ததில்லை. முதலில் ஒரு வருசம் சின்ன சின்ன வேலைகள் வந்தது. அதாவது, பால் சீலிங்க். டேங்க் லீக்கேஜ் ஆனால் அதிலும் ஓரளவு நல்ல வருமானம் இருந்தது. 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு செலவு செய்யக் கூட  என் கையில் பணமில்லை. அப்போ, சென்னை பெரியமேடு நாராயணச் செட்டி தெருவில் சத்யா ஹோட்டல்ணு ஒண்ணு கட்டினாங்க. நான் அந்த  கட்டுமான வேலையைக் கேட்டு கொட்டேஷன் கொடுத்தேன். வேலை விஷயமாக நான் அங்கே போனப்போ அந்த ஹோட்டல் வேலை துவங்கி நடந்து கொண்டிருந்தது நான் அந்த ஓனரிடம் போய் கேட்டேன் “சார் நான் கொட்டேஷன் கொடுத்தேனே? என்னாச்சு”

அவங்க சொன்னாங்க “நீங்க கொடுத்த கொட்டேஷன் ரேட் ரொம்ப அதிகமாக இருந்ததால வேற ஒரு காண்டிராக்டருக்கு கொடுத்திட்டோம்ணு” சொன்னாங்க. திரும்பி வந்திட்டேன். சில நாட்கள் கழித்து அந்த கட்டிட வேலை எப்படி நடக்குதுணு பார்க்கப் போன போது. அஸ்திவாரம் தோண்டின இடத்தில குளம் மாதிரி தண்ணீர் தேங்கிக் கிடந்தது. ஊற்றுத்தண்ணீர் மாதிரி எங்கிருந்தோ வருகிற தண்ணீர் அதுல தேங்குறதால அவங்களால அஸ்திவாரப்பணியை மேற்கொள்ள முடியவில்லை. அப்போ வந்த ஓனர் “அஸ்திவாரம் போடறதே ரொம்ப சவாலாக இருக்கு இராஜா குள்ளப்பன்  இந்த வேலையை நீங்க எடுத்து பண்ண முடியுமாணு” கேட்டாங்க. உடனே சம்மதிச்ச நான் அந்த வேலையை எடுத்து செஞ்சேன்.

அஸ்திவாரம் தோண்டும் போது எங்கேயோ உள்ள உடைப்பு இந்த பள்ளத்துக்குள்ள வருது. அந்த நீர்க்கசிவு எங்க இருந்து வருதுணு கண்டு பிடிக்க முடியாது. ஏண்ணா சுற்றி பெரிய பெரிய கட்டிங்கள். நான் அந்த தண்ணீரை முதலில் ஸ்டாப் பண்ணி அது நாங்க கட்டப்போற ஏரியாவுக்குள் வராமல் பிளாக் பண்ணி அந்த ஏரியாவை முதலில் காய வைத்து அவருக்குக் காட்டி விட்டுத்தான் மீண்டும் அந்த வேலையைச் செய்தேன். அது பெரிய சவாலாக இருந்தது.

அந்த வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தேன். அவங்களுக்கு என்னோட வேலை ரொம்ப  திருப்திகரமாக இருந்ததால. பலரையும் கூட்டி வந்து காட்டினாங்க. என்னையும் அறிமுகப்படுத்தி விட்டாங்க.அந்த வேலையை நான் முடித்ததைப் பார்த்து அந்த தெருவில் உள்ள பலரும் எனக்கு வேலை கொடுத்தாங்க, அங்க ஒருத்தர் மெடிக்கல் ஸ்டோர் வைச்சிருந்தார். இதே மாதிரி நெருக்கடியான ஒரு இடத்தில் கட்டிடம் கட்டணும்ணு சொன்னார். இரண்டு கோடி ரூபாய் புராஜெக்ட் அது அதையும் முடித்துக் கொடுத்தேன்.” என்று தன் வெற்றிப்படிக்கட்டுகளை அடுக்கிய கதையை விவரிக்கிறார் இராஜா குள்ளப்பன்.

“ நான் வாணியம் பாடியில் இருந்து சென்னை வந்த போது வெறுங்கையோட வந்தேன். 2004- தொடங்கி இந்த தொழில் வெற்றியடைந்த ஒரு மனிதனாக வலம் வந்தேன். அடுத்த பத்து ஆண்டுகளில் நான் சுமார் 70 சிவில் காண்டிராக்ட் புராஜெக்டுகளை எடுத்து வெற்றிகரமாக கட்டிக் கொடுத்தேன். அது மேலும் மேலும் எனக்கு வளர்ச்சியை நோக்கிய பாதைகளையும், என் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் திறவு கோலாகவும் இருந்தது. ஆண்டிற்கு ஐந்து ஆறு அக்ரிமெண்ட் போடுவேன் 5 கோடியில் இருந்து 10 கோடி வரை தொழிலின் நிமித்தம் என்னிடம் பணம் புரண்டது.வாணியம்பாடியில் உள்ள எனது நண்பர் ஆசிஃப் என் தொழில் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்.எப்போதும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பராக இப்போது வரை என்னுடன் பயணிக்கிறார்.வேலை, வீடு, பணம் என சிவில் துறையில் நானும் ஒரு முன்னணி காண்டிராக்டராக வலம் வந்தது இப்படித்தான்” என்று சொல்லும் இராஜா குள்ளப்பன் . அனைத்து சிவில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களும் சந்தித்த நெருக்கடியை 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு சந்திக்கிறார்.

“இது நான் மட்டும் சந்தித்த பிரச்சனை அல்ல, இப்போதும் நான் சில புராஜெக்டுகளை செய்து வருகிறேன். நீலாங்கரையில் என்னோட வாடிக்கையாளாருக்காக மூன்று கோடி ரூபாயில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். அதே போல நீலாங்கரையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய புராஜெக்ட் அப்ரூவல் ஆகி அதன் பணிகளை துவங்க இருக்கிறேன்” என்கிறார்.

“நம்பிக்கைதான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் வீடுகள் எப்படி வேண்டும் என விரும்புகிறார்களோ அதை தரமாக செய்து கொடுப்பதோடு அவர்கள் திருப்தியடையும் வகையில் என் பணிகள் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறேன். என்னிடம் வரும் வாடிக்கையாளருக்கும் எனக்குமான உறவு அந்த புராஜெக்டோடு முடிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்த தொழிலில் நான் நீடித்திருக்கவும், வெற்றி பெறவும் வாடிக்கையாளருக்கும் எனக்குமான உறவு மிக முக்கியம் என நினைக்கிறேன்” என்று சொல்லும்  இராஜா குள்ளப்பனிடம்.

ரியல் எஸ்டேட், சிவில் துறை இப்போது சந்திக்கும் நெருக்கடியிலிருந்து மீளுமா இதை எப்படி எதிர்கொள்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

“நான் பிளாட் புரமோட்டர் கிடையாது. தனித் தனி வீடுகளையும், பங்களாக்களையும் கட்டிக்கொடுக்கும் காண்டிராக்டர் நான். உங்களுக்கான கனவு இல்லங்களை நீங்கள் விரும்பும் படி தரத்துடன் கட்டிக்கொடுப்பேன். மற்றபடி ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்பிற்கு பல காரணங்கள். கைட் லைன் வேல்யூ அதிகமானதும், நிலங்களின்

விலை எக்குத்தப்பாக எகிறியதும் இந்த பின்னடைவுக்கு காரணம் என்றாலும் கூட, மிக முக்கியமாக ரியல் எஸ்டேட் தொழில் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நன்றாக இருந்ததால். பெரிய பெரிய நிறுவனங்கள் தேவைக்கு அதிகமான வீடுகளை கட்டிக் குவித்து விட்டார்கள். மக்களின் வாங்கும் திறனை விட கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமாக பெருகி விட்டதால் வீடுகள் விற்பனையாகாமல் தேங்கி விட்டது. எங்களைப் போன்ற காண்டிராக்டர்கள் தேவையறிந்து தொழில் செய்தோம். சிலர் விற்று விடும் என்ற கற்பனையில் ரியல் எஸ்டேட் தொழிலுக்குள் குதித்தார்கள். என் தொழிலில் சின்ன தேக்கம் உருவானதே தவிற நான் தேங்கிப் போய் விடவில்லை. என் தொழிலில் நம்பிக்கையையும், தரத்தையும் நான் வாடிக்கையாளர்களுடனான என் அடிப்படை தொழில் அறமாக வைத்திருப்பதால் இந்த சோதனைகள் எனக்கு பெரிதாக இல்லை.என் பயணம் தொடரும்” என்கிறார் இராஜா குள்ளப்பன்.

#rajakullappan #satyam_constructions

3 Comments

  1. எங்களின் இதய ராஜா, வாணியம்பாடியின் வாச ரோஜா, இது இடம் மாறி பதியனிட்டு பூக்களை தளிர்த்தாலும் அவற்றின் வாசமானது வாணியம்பாடிவரையிலும் வந்து அதனையும் தாண்டி பயணிக்கிறது. சாதி்க்க முடியாதவன் சாதனையாளர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்னும்பழமொழி இன்றும் நடைமுறையில் சொல்லப்பட்டுவரும் பழமொழியாகும். இதே பழமொழிக்கு எனது ராஜாவின் இனிய நண்பர் ஒருவர் உள்ளார். நான் பெயரை சொல்ல விரும்பவில்லை. இருப்பினும் எனது நண்பர் ராஜாவின் வளர்ச்சியின் சூட்சுமத்தை என்னால் உணரமுடிந்தது. எனது சமகால பயணியாக இருக்கும் ராஜா மென்மேலும் வளர்ந்து சிகர சாதனைகளைத்தொட்டு வாழ்வாங்கு வாழ வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.அவரது நிறுவனமும் ஏழை எளிய மக்களுக்கு தரமான கட்டுமானங்களை வழங்கி அவர்களையும் வாழ்க்கைத்தரம் உயர்த்த வல்ல இறைவன் வழிகாட்டுவானாக.. என்றென்றும் ஆ.வேதாசலம், வாணியம்பாடி.9597740934

Leave a Reply

Your email address will not be published.


*