கருணாநிதியின் முதல் சட்டமன்ற உரை!

மக்கள் வெள்ளத்தில் கலைஞர் கோபாலபுரம் வந்தார்!

அண்ணா சமாதியில் தம்பிக்கு இடம்:வழக்கு விசாரணைக்கு ஏற்பு!

அண்ணாவின் தம்பிக்கு மெரினாவில் இடமில்லையா?-திமுகவினர் கொந்தளிப்பு!

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம். அந்த முட்டாள்கள் தினத்தில்தான் குளித்தலையில் வென்று முதன் முதலாக தமிழக சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார் மு.கருணாநிதி. 33 வயதில் எம்.எல்.ஏ கருணாநிதியின் அறிவை விஞ்ச இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் ஆளில்லை. தன் எழுத்தாலும் பேச்சாலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய கருணாநிதி  60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்.
எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் மக்களை வென்ற கலைஞரால் இன்று பேச முடியாத நிலை. திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 3-ஆம் தேதி பிறந்தார் கருணாநிதி. தனது பள்ளி பருவத்தில் தமிழின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தவர். அதன்பின் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது 14-வது வயதில் அரசியலுக்கு வந்தார். அதன்பின் தனது மாணவப் பருவத்தில் மாணவ நேசன் என்ற கையெழுத்து பிரதிகள் மூலம் இளைஞர்களை ஒன்று திரட்டினார். அந்த இளைஞர் அணியை தமிழ்நாடு மாணவர் மன்றமாக மாற்றினார். தமிழ்நாட்டில் முதன்முதலாக தோன்றிய திராவிட இயக்க மாணவர் அணி அது. 1938-ல் பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார். அதன்பின்னர். 1944-ல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் தீர்மானத்தை சேலம் மாநாட்டில் கொண்டு வந்தார். இதனை பெரியாரின் தளபதியாக இருந்த அறிஞர் அண்ணா அறிவித்தார். தொடர்ந்து திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வந்த அண்ணாவுடன் பெரியாருக்கு கருத்து மோதல் ஏற்பட்டதால் அறிஞர் அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் என்ற இடத்தில் திராவிட முன்னேற்ற கழகம் என்று புதிய கட்சியை தொடங்கினார். அக்கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்களில் மு.கருணாநிதியும் ஒருவர். திமுக கட்சி தொடங்கப்பட்டதும் 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழி வழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.

1956 மே 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. அதன்பின் நடந்த 1957-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கட்சி முதன்முதலாக பங்கேற்றது. அத்தேர்தலில் மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது. குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவர் எம்.எல்.ஏவாக 1957-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதன்முதலாக பதவியேற்றார். அப்போது இந்த தமிழகம் அறிந்திருக்காது இனி வரப்போகும் தேர்தல்கள் அனைத்திலும் கருணாநிதி என்பவரின் வெற்றி 60 ஆண்டுகளாக தொடரும் என்று. சட்டசபையில் ஆற்றிய தனது முதல் உரை பின்வருமாறு:-
அவைத்தலைவர் அவர்களே, இன்று மேன்மை தங்கிய கவர்னருடைய உரையை பற்றி போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன். கவர்னர் உரையைப்பற்றி இங்கு நண்பர்கள் அபிப்பிராயம் தெரிவித்த நேரத்தில், எதிர்கட்சியினரைப் பற்றி இங்கு பேசப்பட்ட நேரத்தில், குறை கூறுவதையே எதிர்கட்சியினர் தொழிலாக கொண்டு பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. குறைகளை எடுத்துச்சொல்லி நிறைவேற்றுவதற்காகதான் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமே தவிர, செய்திருக்கிற காரியங்களை பன்னிப்பன்னி சொல்லி, அவைகளை பாராட்டுவதற்காக நாம் இங்கு வரவில்லை. அத்தகைய காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற பாராட்டு விழாக்கள் எல்லாம், வெளியிலே அந்த காரியங்களால் பயன்பெறுகிறவர்களால் நடத்தப்படுவது மிகப்பொருத்தமுடையது என்பதை நான் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. குறைகளை எடுத்து சொல்லி சரி செய்து கொள்வதற்காகவே சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோம்.
அந்த காலத்தில் மன்னர்கள், மக்களின் குறைகளை தெரிந்து அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதற்கு இரவு நேரங்களில் நகர்சோதனை என்ற பெயரால் மாறுவேடம் தாங்கி, மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளை எல்லாம் தெரிந்து, கொலுமண்டபத்தில் உட்கார்ந்து அந்த குறைகளை போக்கினார்கள் என்று பழைய கால சரித்திரத்திலிருந்து படித்திருக்கிறோம். இது மன்னர்கள் ஆளும் காலம் அல்ல, மக்கள் ஆளுகின்ற காலம். இந்த காலத்திலும், அதே போல் மந்திரிகள் மாறுவேடம் தாங்கி மக்களின் குறைகளை கண்டு வர வேண்டுமென்று நான் கோரவில்லை. நாடகத்திலே அனுபவம் பெற்ற நாங்கள் ஒருவேளை ஆளும் கட்சியினராக வந்தால் அந்த வேடங்களை போட்டு, மக்களின் குறைகளை கண்டு பிடிக்க முடியும். அந்த அனுபவம் இல்லாத மந்திரிகளை அதை செய்ய வேண்டுமென்று நான் கோர மாட்டேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
எதிர்கட்சி ஒன்று தேவையென்பது, எதை எடுத்தாலும் எதிர்த்து பேசுவதற்காக அல்ல என்பதை இங்கு பேசிய பலர் சுட்டிக்காட்டினார்கள். ஆளுகின்றவர்கள் யாரைத் துணை கொள்ளல் வேண்டுமென்பதை பற்றி வள்ளுவர் தன்னுடைய திருக்குறளில், பெரியாரைத்துணை கோடல் என்ற அதிகாரத்தில், ஆளுகின்றவர்கள் பெரியாரை தங்களுடைய துணைவராக கொள்ள வேண்டுமென்று கூறியிருக்கிறார். எந்த பெரியாரை துணை கொள்ள வேண்டுமென்று கூறினார் என்றால், எதையும் சரி, சரி என்று சொல்லி கண்டிக்காமல் இருக்கின்ற பெரியாரை அல்ல.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரி லானும் கெடும்” என்று வள்ளுவர் குறள் வகுத்திருக்கிறார். சபையிலே ஆளுகின்ற தம்மை இடித்து சொல்லுகின்ற பெரியாரை துணையாக கொள்ளாத மன்னன் பகைவர்கள் இல்லையாயினும் தன்னை தானே கெடுத்து கொள்வான், கெட்டுவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். அந்த முறையிலே இடித்து சொல்வதற்காகவே வந்திருக்கிற பெரியார்களுடைய துணையை ஆளுகின்றவர்கள் பெற வேண்டுமென்று வள்ளுவர் அந்த காலத்திலேயே உணர்ந்து சொன்னார் போலும். கவர்னருடைய உரையைப்பற்றி இங்கு பேசிய பல நண்பர்கள் கன்னியாகுமரியை வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார்.அந்த கன்னியாகுமரியை நாம் தேவிக்குளக்கரையிலோ அல்லது பீர்மேட்டின் மீதோ நின்று கொண்டு வரவேற்காமல், சிதைந்து போன செங்கோட்டையின் மேல் நின்று கொண்டு வரவேற்கிறோம் என்று எண்ணும் போது, தேவிக்குளம் பீர்மேட்டை பெறுவதற்கு வழிவகை காணப்படவில்லை. கவர்னர் உரையில் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அடுத்து, நில சீர்திருத்த சட்டங்களின் பேரால், நியாய வார சட்டங்களின் பேரால் விவசாயிகள் திருப்தியடைந்து சுமூகமான நிலையில் இருக்கிறார்கள் என்று கவர்னர் உரையில் குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடைய குளித்தலை தொகுதியை பொறுத்தவரையிலும் திருச்சி மாவட்டத்திலும் இன்றைய தினம் இந்த நியாய வாரச்சட்டத்தின் காரணமாகவும் சீர்திருத்தச் சட்டத்தின் காரணமாகவும் எழுந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்று அங்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மக்களுக்கு வேதனையை உண்டாக்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதை யாரும் மறந்து விடவில்லை. மறுத்து விடவும் முடியாது. விவசாயிகள் வீடுகளில் தங்களுடைய மனைவி மக்களுடன் வேதனை அடைந்து புழுங்கி கொண்டிருக்கிறார்கள். குமுறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு எடுத்து சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த நியாய வாரச்சட்டம் காரணமாக குளித்தலை தொகுதி நங்கவரம் பகுதியிலும் திம்மாச்சிபுரம் பகுதியிலும் விவசாயிகள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தினம் தினம் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை கண்டும் விவசாயிகள் பகுதியில் எழுப்பப்படும் கூக்குரலை கண்டும் எந்த முறையில் அங்கு நிலைமை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் அங்கு கையேரு வாரம் என்றும் மாட்டு வாரம் என்றும் இரண்டு வித வாரம் இருக்கின்றன. இப்படி இரண்டு விதமான வாரம் இருப்பதன் காரணமாக அவர்களுக்கு இந்த நியாய வாரச்சட்டம் பயன்படக்கூடாது என்று கருதி அதை விவசாயிகள் பயன் அடையாத முறையில் உயர் நீதிமன்றத்துக்கு சென்று அங்கு தீர்ப்பு வாங்கி வந்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பின் காரணமாக விவசாயிகள் நியாய வாரச்சட்டத்தின் பயனை அடைய முடியாமலும், வெளியேற்றத் தடுப்பு சட்டத்தின் பயனை அடைய முடியாமலும் இருக்கிறார்கள். இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த ரீதியில் வழங்கி இருக்கிறது. அதன் காரணமாக மாட்டுவார ஏருக்காரர்கள் என்றால் யார், கையேருக்காரர்கள் என்றால் யார் என்ற பிரச்சினை எழும்பி அதைப்பற்றி விளக்கத்தை கவனிக்கும்போது தான் நிலைமை தெரியவருகிறது. மாடும் தந்து அவர்களுடைய சொந்த உழைப்பை சிந்தி நிலம் உடையவர்களிடத்தில் விதை, உரம், ஏரு இவைகளை பெற்று அப்படி பெறுகிற அந்த பொருள்களுக்காக விளைச்சலில் அவர்கள் தனியாக தானியமாகவோ அல்லது பொருளாகவோ எடுத்துக்கொண்ட பிறகு 60:40 என்று பெற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் இன்றைய தினம் மாட்டு ஏருக்காரர்கள் விவசாயிகள் அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதைப்போலவே கையேருக்காரர்கள் யார் என்றால் அவர்கள் பெரும்பாலும் ஆதி திராவிட வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பழங்குடி மக்கள் என்கின்ற பிற்பட்ட மக்கள் பாட்டாளி மக்கள் அப்படிப்பட்ட வர்க்கத்தினருக்கானத்தான் இந்த நியாய வாரச்சட்டம் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் அவர்களுக்கென்று இந்த நியாய வாரச்சட்டத்தையும் நில வெளியேற்ற தடுப்பு சட்டத்தையும் கொண்டு வந்தாலும் அவர்கள் அவைகளின் பயனை அடைய முடியாமல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. அந்த அடிப்படையிலாவது எந்த அளவிலாவது இந்த நியாய வாரச்சட்டம் அவர்களுக்கு நன்மை வழங்கியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட மாட்டு ஏருக்காரர்களும் கையேருக்காரர்களும் சாகுபடியாளர்கள் அல்ல என்கின்ற தீர்ப்புக்கு இன்று ஆளாகி இருக்கிறார்கள். அதன் மேல் அப்பீல் செய்யப்பட்டு மீண்டும் வழக்கு வரும் ஜுலை மாதம் மூன்றாவது வாரத்தில் எடுத்துக்கொள்ள போவதாக இருக்கிறது. அதற்குள் விவசாயிகளுடைய நிலைமை என்னவென்றால் முத்து முத்தாக வியர்வை சிந்தி மணி மணியாக நெற்குவியலை தந்தவர்கள் களத்துமேட்டிலே காவலர் புடை சூழ அதைக்கொட்டி விட்டு வீட்டிலே வறுமைத்தேள் கொட்டிட வாடிக்கிடக்கிறார்கள். குளித்தலை தொகுதியில் இப்போது நிலவி வருகிற, இப்படிப்பட்ட நிலைமையைப்பற்றி கவர்னர் தன்னுடைய உரையில் குறிப்பிட மறந்தது வருந்தத்தக்க ஒன்று.
நெருக்கடிக்கு ஆளாகி இருக்க கூடிய விவசாயிகளுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். உயர் நீதிமன்றம் ஜுலை மாதம் 3-வது வாரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக புதிய ஒரு திருத்த சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதையும் துரிதமாக கொண்டு வர வேண்டும். ஏழைத்தொழிலாளர்களுடைய, ஏழை விவசாயிகளுடைய அவல நிலைமையை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்ள போகிறது என்பதை பற்றி கவர்னர் உரையில் ஒன்றுமே இல்லை என்பதை மிகவும் கவலை கொண்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து உணவு பற்றாக்குறையை நிலையை பற்றியது. கவர்னர் உரையில் உணவு விலை குறையவில்லை என்று குறிப்பிட்டாலும் உணவு விலை அதிகமாகி கொண்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எங்கு பார்த்தாலும் உணவு விலை விஷம் போல் தினம் தினம் ஏறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஆந்திராவிலுள்ள பெருவாரியான உபரி அரிசி தமிழகத்திற்கு பயன்படாமல் வட நாட்டில் சோளப்பஞ்சம் ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் அங்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்குள்ள கோதுமையை கொண்டு வடக்கே சரிக்கட்டுவதற்கு பதிலாக ஆந்திராவிலுள்ள உபரியான அரிசியை தமிழ்நாட்டிற்கு பயன்படாத முறையில் எடுத்துச்சென்றதானது இங்கு விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இதைப்பற்றி கவர்னர் உரையில் எந்த விதமான குறிப்பும் காணப்படவில்லை. இப்படி விலைவாசி உயர்வை தடுக்க எப்படிப்பட்ட வழிவகை செய்யப்படும் என்பதும் சொல்லப்படவில்லை.
உணவு நிலைமையை சமாளிப்பதற்கு சர்க்கார் உணவு பெருக்கத்துக்கு திட்டங்கள் செய்ய வேண்டும். இந்த சர்க்கார் கையில்லாத ஊமையின் நிலைமையில் தான் இருக்கிறார்கள். தங்களுடைய நிலைமை என்ன என்று சொல்ல முடியாமல் ஊமையாக இருந்து சுட்டிக்காட்டுவதற்கும் கையற்ற முறையில் இருந்து கொண்டிருந்தால் உணவுநிலை பற்றாக்குறை இது போன்றே எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய நிலைமைகளிலிருந்து திராவிடம் விடுபட்டு திராவிடம் தனித்து, செழித்து நின்று, வளம்பெற, வாழ, நல்ல முறையில் திட்டங்களை தீட்ட வேண்டும். அதற்கு குறிப்பாக உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் சொல்கிறேன். குடகனார் திட்டம் தேவை என்ற முயற்சி ஒன்று குளித்தலை தொகுதியில் 1952-ம் ஆண்டு முதற்கொண்டே இருந்து வருகிறது. அதைப்பற்றி அடிக்கடி எடுத்து சொல்லப்பட்டு வருகிறது. கனம் முதல்-அமைச்சரிடமும், ரெவினிï அமைச்சரிடமும், மராமத்து அமைச்சரிமும், நிதி அமைச்சரிமும் பல தடவை பல மனுக்கள் மூலமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள பி.டபிள்ï.டி. சூப்பர்வைசர் இந்த திட்டத்தை எடுத்து துரிதமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து சொல்லியிருக்கிறார்.
அழகாபுரி என்கிற இடத்தில் அணை கட்டினால் அதன்மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலத்தை நஞ்சையாக மாற்றக்கூடிய வசதி இருக்கிறது. அதற்கு 12 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது கவனிப்பார் அற்றுக்கிடக்கிறது. இப்படிப்பட்ட நல்ல திட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுவதை பற்றியெல்லாம் கவர்னர் தன்னுடைய உரையில் சிறிதும் குறிப்பிடவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது முதல் உரையில் பேசினார்.

அதன் பிறகு நடந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் கருணாநிதி என்பவரின் வெற்றி எழுதி வைக்கப்பட்டதாகவே இருந்தது. 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக மிக தீவிரமாக முன்னெடுத்து சென்றது. அப்போராட்டத்தில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலி 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் வீரியமாக வெளிப்பட்டது. அந்த பொது தேர்தலில் 138 இடங்களை கைப்பற்றி திமுக அண்ணா தலைமையில் தமிழகத்தில் முதன்முறையாக ஆட்சியமைத்தது. அந்த அமைச்சரவையில் கருணாநிதி பொது பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1969-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுக என்ற மாபெரும் கொள்கை கொண்ட இயக்கம் கருணாநிதி தலைமையின் கீழ் செயல்பட துவங்கியது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு இவ்வளவு பெரிய இயக்கம் வேறு யார் தலைமையின் கீழ் சென்றிருந்தாலும் நிச்சயம் இத்தனை வருடங்களுக்கு பயணித்திருக்காது. கருணாநிதி திமுக என்ற கட்சியை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தனது தமிழாலும், பேச்சாலும், எழுத்தாலும், தனது தீவிரமான அரசியலினாலும் கொண்டு சென்றார். கருணாநிதிக்கும்எ, ம்.ஜி.ஆருக்கும் கருத்து வேறுபாடு வந்து எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆர் அலை தமிழகம் முழுவதும் பெரும் அளவில் எழுந்து திமுக என்ற கட்சிக்கு விழுந்த ஓட்டுகளை அடித்து சென்றாலும் கருணாநிதி என்ற ஒரு பெரும் தலைவருக்கு விழுந்த ஓட்டுகளை அடித்து செல்லமுடியவில்லை. சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, முதலமைச்சராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் சரி அவரது பேச்சும், அவரது புள்ளிவிவரமும் பிறருக்கு ஒரு வித ஆச்சரியத்தையும், கிலியையும் ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தது. ஒரு முறை எம்.ஜி.ஆர் ஆட்சியில் கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயம் அது. அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட காலம். பல்கேரியா பால்டிகா கப்பல் ஊழல் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எழுந்த அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் இதெல்லாம் எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் க.ராசாராம் ரகசியம் வெளியே போகாமல் காப்பது அரசாங்கத்தின் கடமை என்று கூறினார். அப்போது எழுந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூறிய வார்த்தைகள் இவை, ‘ஓர் உண்மையை வெளிக்கொண்டுவர ஆதாரங்களைச் சொல்வது அரசுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இந்த ஆதாரங்களை முன்கூட்டியே கொடுத்திருந்தால் பதில் தர வாய்ப்பாக அமைந்திருக்கும். ஒரு எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கருணாநிதி சிறந்த உதாரணம்’. கருணாநிதியின் இந்த ஆதார பேச்சால் பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதே நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. தனக்கு பிடித்த சட்டமன்ற பேச்சுகளிலேயெ இந்த பேச்சுதான் தனக்கு பிடிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். திருச்செந்தூர் கோவில் அதிகாரி சுப்பிரமணியன் பிள்ளை கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது ஏன் என்றும், வைரவேல் களவாடப்பட்டதை கண்டித்தும் கருணாநிதி ஒரு முறை திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்டார். அதைப்பற்றி அவையில் ஆளுங்கட்சி உறுப்பினர் பேசுகையில் கருணாநிதியை பார்க்க பிடிக்காமல் முருகனே ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார் என்றார். உடனே எழுந்த கருணாநிதி திருச்செந்தூரில் வேல்தான் காணாமல் போனது என்று நினைத்தேன் ஆனால் முருகனும் காணாமல் போய்விட்டார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது என்றார். இவையெல்லாம் கருணாநிதி சட்டசபையில் பேசிய பேச்சுக்களுக்கு சிறு உதாரணங்கள்.

இப்போதைய நிலை

ஜெயலலிதா 2011- ல் முதல்வரான பின்னர் கருணாநிதி  தமிழக சட்டசபையினுள் வண்டியில் செல்ல  இடவசதி இல்லை என்று சட்டமன்றத்துக்குள் நுழையாமல் இருந்தார். ஜெயலலிதா மரணமடைவதற்கு சில நாட்கள் முன்பே உடல் சுகவீனம் அடைந்தவர் காவேரி மருத்துவமனையில் மீண்டும் ஜூலை 27 அனுமதிக்கப்பட்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை காலமானார்.

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news    #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை பாயும் :ஓபிஎஸ் எச்சரிக்கை

2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு!

திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்?

சுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*