சி.பி.எஸ்.இ. தலைவர் மீது நடவடிக்கை தேவை :ஸ்டாலின் கோரிக்கை!

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது” என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, நம்பிக்கை பாழாகி பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் சிதைத்து விட்டது. அதைவிட “ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்” “தொடர்ந்து நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வருவதால் குழப்பம் செய்கிறார்கள்” என்றெல்லாம் ஒட்டுமொத்த தமிழக மாணவ சமுதாயத்தின் மீதும் சி.பி.எஸ்.இ. குற்றம் சாட்டியிருப்பது, மிகுந்த கண்டனத்திற்குரியது மட்டுமல்ல – ஆதிக்க வர்க்கத்தின் ஆணவ மனப்பான்மையும், பிளவுபடுத்தி பேதப்படுத்தும் குணமும் அந்த அமைப்பில் குவிந்து கிடப்பதைக் காட்டுகிறது.

ஆகவே, தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தியது மற்றும் தமிழில் “நீட்” கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளைச் செய்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியது உள்ளிட்ட குற்றங்களைச் செய்த சி.பி.எஸ்.இ. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாண்புமிகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*