தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

கமல் -ரஜினி பந்தயத்தில் குதித்தார் விஷால்!

கவுதம் நவ்லகா கைது திணறிய போலீஸ்!

திருமுருகன் காந்தி மற்றும் வளர்மதி ஆகியோர் தொடர்ச்சியாக அரச பயங்கரவாதத்துக்கு இலக்காகி வருகின்றனர். இதன் மூலம் டில்லியின் எடுபிடி அரசு (Satellite State) தான் தன்னுடையது என்பதை எடப்பாடி தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வி முக்கியமானது. மேலே குறிப்பிட்ட இருவர் மட்டுமல்லாது பலர் மீது அடக்குமுறை ஏவப்பட்டாலும் இவர்கள் நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இருவருக்கும் தனித்தனி அமைப்புகள் இருந்தும் அடக்குமுறையை தனிநபர்களாக சந்திப்பது மிகவும் துயரகரமானது. திருமுருகன் காந்திக்கு பெரியார் தி.க உதவிகரமாக இருக்கிறது. மதிமுகவும் ஆதரவாக இருப்பது தெரிகிறது. எனில், இரண்டு கட்சிகளில் ஏதோ ஒன்றின் திட்டத்தை ஏற்று ஏன் இணைந்து பணியாற்றக்கூடாது? அதே போன்று வளர்மதி தீவிர இடசாரி கொள்கை உடையவர் என்று தெரிகிறது. அவரை போன்ற தீவிர இடதுசாரி கொள்கையுடைய பலம் பொருந்திய இடதுசாரி அமைப்பு ஒன்றுடன் ஏன் இணைந்து பேராடக்கூடாது? இந்த கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்படவும் வாய்ப்பு இருப்பதை மறுக்கவில்லை. அதனால் தொடர்புடைய வேறு சில செய்திகளை இணைத்து பார்ப்போம்.

பல சாதிகளாக நாம் பிரிந்து கிடப்பது எப்படி பார்ப்பன அதிகாரம் கோலோச்ச உதவுகிறதோ அது போல பல குழுக்களாக போராடும் சக்திகள் சிதறி கிடப்பது அரச பயங்கரவாதத்துக்கு வாய்ப்பாக இருக்கிறது. திருமுருகன் காந்தியை விடவும் தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர்கள் இங்கிருக்கிறார்கள். ஆனால் திருமுருகன் அல்லது வளர்மதி மூலம் மற்றவர்களுக்கு பீதியூட்ட முனைகிறார்கள் என்பதே உண்மை. மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்ப்பதில் தனிநபர் ஆவர்த்தனங்களுக்கு வரம்புக்குட்பட்ட மதிப்பே உள்ளது. நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் தனிநபர்கள் தான். என்றாலும் தனிநபர் சார்ந்த அறிவுத்துறை பணிக்கு ஒரு தேவையும், ஜனநாயக மதிப்பும் உள்ளது. ஆனால் தனிநபர் ஆக்டிவிஸ்டாக களமிறங்கும் போது எப்படி செயல்படுவது என்ற புரிதல் அவசியம்.

திருமுருகன், வளர்மதி ஆகியோருக்கு அரசை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே உள்ளது. ஒரு எதிர்ப்பின் விளைவுகள் எப்போதுமே அந்த கோரிக்கைக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. டாஸ்மாக்கிற்கு எதிரான கலகத்தை மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு முன்னெடுத்த போது மதுவிலக்கு தொடர்பாக திமுக எடுத்த நிலைப்பாட்டை அது ஆதரித்தது. பின்னாளில் கோவன் கைது செய்யப்பட்ட போது தி மு க வின் கண்டனம் வெளியானது. கலைஞர், ஸ்டாலின், கனிமொழி என அனைவரும் கோவன் கைதை கண்டித்தனர். அது ஊடகக்கவனம் பொருந்திய முக்கியப்பிரச்சினை ஆகியது. திருமுருகன் எத்தனை விவாதங்களில் கலந்து கொண்டிருப்பார். என்றாலும் ஒரு விவாதம் கூட இந்த கைது தொடர்பாக அவை நடத்த முன்வரவில்லை.

ஈழம் தொடர்பான பிரச்சினை வெடித்த போதும் கூட தங்கள் களப்போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு – மக்கள் அதிகாரம் டாஸ்மாக் பிரச்சினையில் நடந்து கொண்டது போல் – கலைஞரின் ஆதரவை வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் தேளின் கொடுக்கை போன்று கலைஞரை கொட்டிக் கொண்டே இருந்தனர், திருமுருகன், நெடுமாறன் மற்றும் சீமான் வகையறா. கலைஞரையே நம்பாதவர்களை எப்படி நம்புவது என்று பின்வாங்கியது டில்லி. புலிகளை இந்தியா ஆதரிக்க மறுத்ததற்கு இருந்த பல காரணங்களுள் முக்கியமான ஒன்று நம்பகமின்மை. கலைஞர் எதிர்ப்பு எனும் குருட்டுப்பார்வையில் புலிகள் மீதான நம்பகமின்மையை டில்லியிடம் திருமுருகன் முதலான தமிழ்த்தேசியர்கள் வளர்த்தனர். விளைவு இன்றைய ஈழ நிலைமை.

காவேரியில் கலைஞர் மரணப்படுக்கையில் விழுந்து கிடந்த போது பெரியாரின் உழைப்பை திமுக திருடியது என்ற பெரிய கண்டுபிடிப்பை திருமுருகன் வெளியிட்டார். ஒரு வலிமையான எதிர்க்கட்சியின் ஆதரவு ஒரு தனி நபருக்கு அரசின் கொடுங்கரம் சூழும் போது எவ்வளவு அவசியம் என்று அவர் அறிந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் நெடுமாறன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒரு நூறு முறையாவது நெடுமாறன் விடுவிக்கப்பட வேண்டும் என்று கலைஞர் கோரிக்கை விடுத்திருப்பார். ஜெருசலேமின் மன்னன் ஹெரோதுவால் கொல்லப்பட நேரும் என்பதை குழந்தை ஏசுவின் பெற்றோரிடம் கூறி எகிப்துவிற்கு தப்பிச்செல்ல அறிவுறுத்தினர் கிழக்கிலிருந்து வந்த மூன்று அறிஞர்கள். அறிவார்ந்த தமிழ்த்தேசிய அறிஞர்களுக்காக தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது.

1 Comment

  1. டெல்லியை நம்புவதோ அல்லது டெல்லியால் நம்ப படுவதோ அல்ல தமிழ் தேசிய அரசியல்

Leave a Reply

Your email address will not be published.


*