‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி கவிஞர் கனிமொழி ஜி !

பெருங்கடல் வேட்டத்து தொடர்பான பதிவுகள் முழுவதையும் வாசிக்க!

பாண்டிச்சேரியில் நேற்று மாலை அருள் எழிலனின் ஒக்கி புயலின் விளைவுகளைப் பற்றிய பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படம் திரையிடப்பட்டது.. நிறைந்த அரங்கத்தின் மௌனத்தில் ஒரு மணி நேர படம் பேரனுபவம்..

மோனே என்ற மகனை இழந்த தாயின் கதறல் நெஞ்சை அறுக்கிறது. கணவனை இழந்த இளம் பெண் கணவனின் மரணத்துக்குப் பின் பிறந்த தன் இரண்டாவது பெண்சிசுவை ஏந்தி தன் கணவனோடு நடந்த உரையாடலை புன்னகையோடு சொல்கிறாள்.. அடியற்ற பள்ளத்தை நோக்கி இறங்கும் அவள் நம்பிகை நமக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
.
புயலில் சிக்கி உயிரோடு மீண்டு வந்த மீனவ இளைஞர்களின் அனுபவங்கள் அவர்களின் குரலில் கேட்க நடுக்கமாக இருக்கிறது.
தேசத்தின் அந்நிய செலாவணியில் பெரும்பங்கை வகிக்கும் மீன் பிடித்தொழிலுக்கு மீனவனுக்கு என்ன செய்திருக்கிறது இந்த அரசாங்கம்… என்ற அந்த இளைஞனின் கேள்வி நெருப்பாக எறியப்படுகிறது..
கடல் மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒற்றை வருமான வழியும் அடைக்கப்பட்டு மிகுந்த கடன் சுமையுடன் தள்ளாடும் துணையை இழந்த இளம் மனைவிகளின் கண்ணீரில் மங்கிப் போயிருக்கிறது அவர்கள் வாழ்வு …
.
மீனவர்களின் விளக்கங்கள் மறுபுறம் பார்க்கவியலாத நாணயத்தின் அரசாங்க முகம் அத்தனை எள்ளலாய் குரூரமாக இருக்கிறது. குளத்துக்குள் தவறிவிழுந்த பிள்ளையை கிணற்றுக்குள் தேடுவதாய் உள்ளது மத்திய அமைச்சரின் அறிக்கை.
எளிய மக்களாக அறியப்படும் மீனவ மக்களின் கடல் குறித்த அறிவு, வானவியல் ஆலோசனைகள் கேட்க வியப்பாக இருக்கிறது. அரசாங்கத்தை நோக்கிய அந்த இளைஞர்களின் கேள்விகள் வெறும் உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல.. . செறிவான தகவல்களுடன் அவ்வளவு கூர்மை..
.
மதத்தின் கட்டமைப்பில் குட்டி அரசாங்கமாக செயல்பட்டு வரும் திருச்சபைகள் உண்மையில் அந்த மக்களை சமாதானப்படுத்தவும், அவர்களின் எழுச்சியை நீர்க்கச் செய்யவும் தான் இருக்கிறது என்ற திருச்சபைத் தந்தையின் கூற்று இன்னொரு வலி…
.
சமவெளி மக்களுக்குக் காட்டப்பட்ட ஒக்கிப் புயல் அதன் அழிவு நிராதரவான மீனவனின் நிலை எல்லாம் அரசாங்கத்தால் எளிமைப்படுத்தப்பட்ட பதட்டமற்ற சித்திரம்.
.
ஆவணப்படம் வெறும் உணர்ச்சிவசப்பட்ட வெறும் அழுகையை மட்டும் காட்டாமல் ஒக்கிப் புயலின் வலிமை.. சிக்கிக் கொண்ட மீனவர்களின் மரணங்கள் உயிர்ப்போராட்டங்கள்….அரசாங்கத்தின் மெத்தனம்.. அலட்சிய அறிக் கைகள் அவற்றோடு அவர்களின் அழுகையும் படமாக்கப்பட்டிருக்கின்றன..
.
.

வலிய வல்லு◌ாறின் பார்வையில் கடலும் அதன் குடியிருப்புகளும் நீலமாய் தளும்புகிறது.. பின் வாசல் கதவைத் திறந்தால் செவ்வக வடிவில் புரளும் பெருங்கடல். பிறந்த குழந்தையின் மென்பஞ்சுப் பாதங்களில் இடப்பட்ட மைப் பொட்டை கொஞ்சிகொண்டிருக்கும் கேமரா என நுட்பமான கலைப்பார்வை அருள் எழிலனின் தொழில்முறை நேர்த்தியையும் பாராட்டாமல் இருக்க இயலவில்லை…
.

திரையிடலை ஏற்பாடு செய்திருந்த அணங்கு பதிப்பகம் கவிஞர் மாலதி மைத்ரிக்கு நன்றியும், எழிலுக்கு பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்..

கட்டுரையாளர் குறிப்பு:-

ஜி.கனிமொழி

தமிழில் கவனிக்கப்படும் நவீன தமிழ் கவிஞர்.மழை நடந்தோடிய நெகிழ்நிலம்,கோடை நகர்ந்த கதை என இரு கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*