”முக்கியமான அரசியல் ஆவணப்படம்” -ஏர் மகாராசன்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம் பெருங்கடல் வேட்டத்து.

தமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்புமாய் விரிந்திருக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வியலே நெய்தல் திணை. இது, மலை, காடு, வயல் போன்ற மற்ற நிலப்பரப்புகளிலிருந்து வேறுபட்டது.

இத்தகையக் கடல்புறத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலை ஓரளவு பழந்தமிழ் இலக்கியங்கள் பேசியிருப்பினும், அப்பேச்சின் நீட்சி தொடரவில்லை. இப்போதுதான் கடல் நிலத்துக் கவுச்சி மணக்கும் வாழ்க்கை எழுத்துகளில் பரவத் தொடங்கியிருக்கிறது.

கடல் நிலத்துத் தமிழர்களின் தற்சார்பு, கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு, மீன்பிடித் தொழில் முறை, கடல் பயணங்கள், வானியல் அறிவு, கூட்டுழைப்பு, மாந்தநேயம், குடும்ப உறவுகள், மீன்பிடிப் படகுகள், கடல் சீற்றங்கள், தற்காலிகப் பிரிவுகள், இதற்கிடையிலான மகிழ்ச்சியும் துன்பமுமான பாடுகள் எனப் பேச வேண்டியவை ஏராளம்.

ஆனாலும், கடல்சார் தமிழர்களின் வலி தோய்ந்த வாழ்வியல் பாடுகள் சமவெளித் தமிழர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டுவதில்லை. குறிப்பாகச் சொல்வதானால், கடல்புறத்து மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய புரிதல், சமவெளி மனிதர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்நிலையில்தான், கடல் நிலத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலைச் சமவெளி மற்றும் மலைவெளித் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தோழர் டி.அருள் எழிலன் அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும் வெளிவந்திருக்கிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ எனும் ஆவணப்படம்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு, ஒக்கிப் புயலால் 194 மீனவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தை அண்டி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மேற்குக் கடலோரத் தமிழர்கள்) இறந்து போனதாக அரசு அறிவித்தது. பல நூறு மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. கொஞ்சம் பேர் மீட்கப்பட்டார்கள்.

கடலே வாழ்வெனக் கிடக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வில் இழப்பும் அழுகையும் தவிப்பும் வலியும் பிரிவும் மாறி மாறி வந்தாலும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டும் கடந்தும்தான் அவர்கள் இன்னும் அந்தக் கடல் மண்ணோடும் கடல் நீரோடும் ஒட்டி உறவாடிக் கிடக்கிறார்கள். இயற்கை தரும் காயங்கள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பியிருக்கும் இந்த அரசு நிர்வாகங்கள் செய்த துரோகத்தின் காயங்களைத்தான் அவர்களால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தவகையில்தான், மீனவத் தமிழர்களுக்கு ஒக்கிப் புயலும் அரசு நிர்வாகங்களின் அலட்சியமும் தந்திருக்கிற காயங்களின் வலியை ஆவணப்படுத்தி இருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

இந்தப் படம், ஒக்கிப் புயலுக்குப் பின்பான மீனவத் தமிழர்களின் மிக முக்கியமான வாழ்வியல் களங்களைப் பதிவு செய்திருக்கிறது.

கடலுக்குள் சென்ற ஆண்களை இழந்து தனிமைப்பட்டிருக்கும் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவுகளை இழந்து தவிக்கும் பெண்கள் அனாதைகளாக்கப்பட்டிருப்பதும், அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக்கப்பட்டிருப்பதுமான அவலங்கள் அவர்களது வாக்குமூலங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்குள் போய் வருகிற ஓர் ஆணை இழந்து, ஒரு பெண் அல்லல் படுகிற வலியே இந்தப் படத்தின் உயிர்.

மீனவக் கிராமங்கள் பெரும்பாலும் கிறித்துவ ஆலயங்களின் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும், அருட்தந்தைகளும் ஆலயங்களும் விதிக்கிற கட்டுப்பாட்டு அறங்களை மீற முடியாதவர்களாய் மீனவர்கள் இருப்பதையும், பங்குத்தந்தைகளும் ஆன்மீகத் தலைவர்களும் அரசு நிர்வாகங்களை மீறியும் எதிர்த்தும் மீனவ மக்களுக்காகச் செயல்பட முடியாத கையறு நிலையில் இருப்பதால், அதனை அரசு நிர்வாகங்கள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்கின்றன என்பதையும் ஒளிச் சாட்சியம் செய்திக்கிறது இப்படம். அருட்தந்தை சர்ச்சில் அவர்களது பேச்சில் உண்மையும் அக்கறையும் கோபமும் நிறைந்திருப்பது படத்தின் இன்னொரு பலம்.

கடலுக்குள் சென்ற மீனவர்கள் ஒக்கிப் புயலில் சிக்கிக் கொண்டதற்கு, இங்குள்ள மத்திய மாநில அரசு நிர்வாகங்களே காரணம். முறையான தெளிவான வானிலை அறிக்கை மீனவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் அரசு நிர்வாகங்களால் எடுக்கப்படவில்லை. கடல் புயலில் சிக்கியவர்களை மீட்பதற்கான எவ்வித முயற்சிகளும் நடைபெறவில்லை. அரசு நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் கண்துடைப்பு நாடகங்களே. அரசு நிர்வாகங்களால் புயலில் சிக்கியவர்களை மீட்க முழு மனதுடன் இறங்கவில்லை. மாறாக, அவர்களை மீட்பதில் அலட்சியப் போக்கையே கடைபிடித்தது என்பன போன்றவற்றை மீனவர்களின் வாக்குமூலங்கள் அம்பலப்படுத்துவதை ஆவணப்படுத்தியிருப்பது இப்படத்தின் அரசியல் பலம்.

கடல்சார் மனிதர்களின் கடலியல் மற்றும் வானியல் அறிவை அரசு நிர்வாகங்கள் எவ்வாறெல்லாம் அலட்சியப்படுத்துகின்றன என்கிற மீனவர்களின் வேதனையையும் ஆற்றாமையோடு படம் பதிவு செய்திருக்கிறது.

இந்த அரசு நிர்வாகங்கள் தம்மை முழுவதுமாகக் கைவிட்டு விட்டதாகவே மீனவர்கள் உணர்வதைக் காட்சி மொழிக்குள் கொண்டு வந்திருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

ஒக்கிப் புயலில் சிக்குண்டவர்களை மீட்பதில் அரசு நிர்வாகங்கள் அலட்சியத்தைக் காட்டியதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது படம்.

இன்றைய உலகமயச் சூழலில் காடுகள், வயல்கள், மலைகள், கடல் என அத்தனை நிலப்பரப்பும் வளங்களும் பெரு வணிக நிறுவனங்களாலும் நாடுகளாலும் சுரண்டலுக்கு உள்ளாக்கும் வகையில் இங்குள்ள அரசுகளால் தாரை வார்க்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் சாகர் மாலா என்கிற திட்டம்.

அதாவது, கடல்சார் தொல்குடி மீனவத் தமிழர்களைக் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றவும் அந்நியப்படுத்தவுமான முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒக்கிப் புயல் போன்ற கடல் சீற்றப் பாதிப்புகளுக்கு மீனவர்கள் உள்ளாகும் போது, அவர்களைக் காப்பாற்றுவதில் அலட்சியமும் பாராமுகமும் காட்டப்படும் போது, அவர்களாகவே கடல் புறத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். மீனவர்கள் மீதான இந்த அலட்சியம் என்பது, அவர்களுக்கான அச்சுறுத்தல்தான். மீனவத் தமிழர்களைப் பாரா முகத்தாலும் அலட்சியத்தாலும் அரசு நிர்வாகங்கள் வஞ்சித்து வருகின்றன; இரண்டாம் தரக் குடிமக்களைப் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள்; அரசுகள் அவர்களை முழுமையாகக் கை கழுவி விட்டன என்பதைக் காட்சி மொழியால் விவரித்துச் சொல்வதே இப்படத்தின் உள்ளீடான அரசியல்.

இழப்பும் இரங்கலும் நிறைந்திருக்கும் மீனவ வாழ்க்கைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே தான் இருக்கின்றன.

ஒக்கிப் புயலில் தனது கணவரை இழந்த இராசி அவர்களைக் குறித்த ஆவணப் பகுதிகள் வேறொன்றைப் பதிவு செய்கிறது. ஆண்களை இழந்த பெண்களின் கண்ணீரும் கவலைகளுமே நிரம்பி இருந்தாலும், ஆண்களை இழந்து அனாதை ஆகி இருப்பதைப் பேசினாலும், இராசியின் பேச்சும் கவலை மறைத்த வெள்ளந்தியான முகமும் பெண்ணின் நம்பிக்கைப் பாடுகளைப் பேசுகின்றன. கணவரை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழுதலின் நம்பிக்கையைப் பெண் பிள்ளைகள் தருவதாகப் பெண் பகிர்ந்திருப்பது வாழ்க்கையின் மீதான மீனவத் தமிழர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்படி, மீனவத் தமிழர்களின் வாழ்வியலைப் பேச நிறைய இருக்கிறது. உங்களது காதுகளையும் கண்களையும் கொஞ்சம் திறவுங்கள் என்பதான வேண்டுகோளோடு மீனவத் தமிழர்களின் வலியைப் பேசி படம் நிறைவடைகிறது.

மீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்

மீனவத் தமிழர்களின் வலி மொழியைக் காட்சி மொழியாக்கியுள்ள தோழர்கள் அருள் எழிலன், ஜோ, ஜவகர், ஜெயக்கொடி மற்றும் படக்குழுவினருக்குப் பாராட்டும் அன்பும் வாழ்த்தும். இது போன்று நிறைய படைப்புகள் வெளிவரட்டும்.

பெருங்கடல் வேட்டத்து:
கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்.

தேனியில் திரையிடல் நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் நன்றி.

கட்டுரையாளர் குறிப்பு :ஏர் மகாராசன்

ஏர் மகாராசன்
ஏர் மகாராசன்

முனைவர் பண்பாட்டியல் ஆய்வாளர் , மதுரை சொந்த ஊர், கீழிருந்து எழுகின்ற வரலாறு, பெண் மொழி இயங்கியல், மொழியில் நிமிரும் வரலாறு, ஏறு தழுவுதல் வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும், சொல் நிலம் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர் . கொஞ்ச காலத்திற்கு முன்பு ஏர் என்னும் இதழை நடத்தி வந்தவர்.

#ockhi_cyclone_documentary #ockhi_documentary #cyclone_documenrary #Fisherman_Documentry #மீனவர்_ஆவணப்படம் #ஓக்கி_ஆவணம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*