வீல் சேரோட வந்து எமோஷனல் ப்ளாக் மெயில் பண்றியா?-மனுஷ்ய புத்திரன்

ராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன?

நாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்!

இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்!

#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்!

ஆதவன் மறைவதில்லை!

கலைஞரின் மரணநாளில் அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்மம் குறித்து பத்திரிகையாளர் மணா ஒரு பதிவு எழுதியிருந்தார். கலைஞர் மறைந்த அன்றிரவு எனக்கு நடந்த ஒரு அனுபவத்தை இங்கே சொல்ல விரும்பாவிட்டாலும் சொல்ல விரும்புகிறேன்.

இரவு 2 மணிக்கு மனம் பதைக்க கலைஞரைக்காண கோபாலபுரம் இல்லம் சென்றேன். அப்போதுதான் கோபாலபுரத்திலிருந்து தலைவரின் உடலை சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். உடனே வேகமாக சி.ஐ.டி காலனி சென்றோம். அங்கு கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. போதுமான காவலர்கள் இல்லை. இருந்த காவலர்கள் நிலமையை சமாளிக்க தடுமாறிக்கொண்டிருந்தனர். கவிக்கோ மன்றம் எதிரில் காரை நிறுத்திவிட்டு வீல் சேரிலேயே கனிமொழி இல்லம் சென்றேன். திமுக தொண்டர்கள் பாதுகாப்பாக என்னை அழைத்துச் சென்றனர். தலைவர் உடல் இன்னும் வந்து சேரவில்லை. கேட் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. காவலர்கள் பெரும்பாலானோருக்கு என் முகம் தெரியும் என்பதால் என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்று நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் வீட்டின் முன் ஒரு ஓரமாக நிற்கச் செய்து கதவு திறக்கும்வரை சற்றே காத்திருக்கச் சொன்னார்கள். அதுவரை எல்லாம் ஒழுங்காக போய்கொண்டிருந்தது. அப்போது ஒரு காவல்துறை அதிகாரி அருகில் வந்தார். அவர் பெயர் சாரங்க நாத் என்று பார்த்ததாக நினைவு. என் முகத்தை உற்றுப்பார்த்து என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பது அவர் முகக்குறிப்பில் தெளிவாக தெரிந்தது. உடனே என்னை மோசமாக நடத்த ஆரம்பித்தார். ” நீங்கள் இங்கே நிற்கக் கூடாது” என்றார் கடுமையாக. ” நான் இங்குதான் நிற்பேன் ” என்றேன் சலனமற்ற குரலில். அது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னுடன் நின்றிருந்தவர்களிடம் “என்ன வீல் சேரோட வந்து எமோஷனல் பிளாக் மெயில் பண்றீங்களா?” என்றார். என்னை மட்டுமே குறிவைத்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். என்னை காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கம் தெளிவாக தெரிந்தது. எனக்கு தலைவரைத் தவிர எந்த நினைவும் இல்லாததால் அந்தக் கேள்வி ஒரு மயிராக இருந்தது. உடனே யாரோ ஒரு காவலரை அழைத்து ” இந்த ஆளை வீடியோ பண்ணுங்கப்பா.. எமோஷனல் ப்ளாக் மெயில் பண்றார் என்று ரிப்போர்ட் பண்ணுங்க” என்று கத்தினார். எனக்குள் இருந்த மிருகம் கண் விழித்தது. தலைவருக்காக காத்திருக்கும் இடத்தில் தகறாறு வேண்டாம் என்று பல்லைக் கடித்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. உள்ளே சென்றோம். இரண்டு இளம் பெண் காவலர்கள் தலைவர் வரும்வரை எனக்கு பாதுகாப்பாக என் அருகில் நின்று கொண்டனர். தலைவர் வந்தார். கண்கள் பனிக்க தொட்டு வணங்கினேன். பின்னிரவில் தெருவில் சக்கர நாற்காலியில் நீண்ட தூரம் சாலையில் சென்று காரில் ஏறினேன். அந்த காவல் துறை அதிகாரியின் முகத்தில் வெளிப்பட்ட வெறுப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.

தலைவரையே தள்ளுவண்டி என்று சொல்லி சட்ட சபையிலேயே எள்ளி நகையாடிய அரசில் நான் எம்மாத்திரம்?

இனி மணாவின் பதிவு:

….
கலைஞரின் மரண நாள் : கட்டவிழ்த்து விடப்பட்ட வன்மம்
#
மணா மணா
……
மனம் வலிக்கும்படி கலைஞர் மறைந்த அன்று துவங்கி நேற்று மாலை வரை எத்தனை சம்பவங்கள்?

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தபோது இதே ராஜாஜி ஹாலில் கூட்டம் அலைமோதியது. ஆனால் பார்க்க வந்த தொண்டர்கள் மீது தடியடி நடக்கவில்லை. பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு எந்த நெரிசலும் நிகழவில்லை.

கடைசி நேரத்தில் நெரிசல் இருந்தபோதும் அது சாமர்த்தியமாகச் சமாளிக்கப்பட்டதை நேரடி அனுபவத்தில் அங்கிருந்த தருணத்தில் உணர்ந்திருக்கிறேன்.

அதற்கு நேர் எதிராக இருந்தது ராஜாஜி அரங்கில் நேற்று ( 8.8. 2018) நேரடியாகப் பார்த்த அனுபவங்கள்.

உடன்பிறப்புகளே என்று அன்புடன் கலைஞரால் அழைக்கப்பட்ட தொண்டர்கள் பட்ட சிரமங்கள் அதிகம். சென்னைக்கு வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்தினார்கள். பெட்ரோல் பங்குகளை மூடினார்கள். காவல்துறையோடு மற்ற சிறப்புப் பிரிவினரையும் சில நிறச் சீருடைகளில் வரவழைத்திருந்தார்கள்.

அதிகாலை துவங்கி ராஜாஜி ஹாலுக்குள் கலைஞரின் உடலைப் பார்க்க யத்தனித்த தொண்டர்கள் பலதரப்பட்ட நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

பொதுமக்கள் நுழைவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வாசலில் காலையிலிருந்தே கூட்டத்தினர் திணறிப் போனார்கள். சிலர் மயக்கமானார்கள். சில தடவைகள் தடியடி நடத்தப்பட்டது. எங்கிருந்தோ தங்கள் தலைவரைக் கடைசி முறை பார்க்க வந்த தொண்டர்கள் மீது கடுமையான வன்மம் கீழிறங்கியதைப் போலிருந்தது.

முக்கியப்பிரமுகர்கள் நுழைவதற்கு வேறொரு வாசல். அதற்கு முன்னாலும் திரளான காவல்.அங்கும் கூட்டம். திரைத்துறையில் அறிமுகமான முகங்கள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன.

தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். கலைஞரின் உதவியாளர் ஒருவரே விவாதத்திற்குப் பிறகே அனுமதிக்கப்பட்டார். இயக்குநர் டி.ராஜேந்தர் கடுமையாகச் சத்தம் போட்டு கத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

பலர் தள்ளிவிடப்பட்டுக் காயம் அடைந்தார்கள். சிலருடைய தலையில் காயம்பட்டு ரத்தம் ஒழுகியது. சிலர் மிதிபட்டார்கள். இதை இருமுறை நேரடியாகப் பார்த்தபோது தொண்டர்கள் மீதும், ஆதரவாளர்கள் மீதும் இவ்வளவு தூரத்திற்கு வன்முறை கட்டவிழ்த்துவிட்டிருக்க வேண்டுமா என்கிற பதற்றம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொற்றியது.

முரட்டுச் சீருடைகளுக்கு முன்னால் ஒரு ஊமையான தி.மு.க. தொண்டர் மீது பாய்ந்த வன்முறை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீச்சுக்குரலில் அவர் அழுத அழுகை சுற்றுப்புறத்தைக் கண்கலங்க வைத்தது.

அடுத்தடுத்து நடந்த தாக்குதலிலும், நெரிசலிலும் சிக்கி ஒரு பெண் உயிரிழந்ததை ஒரு தொலைக்காட்சி மட்டுமே ஒளிபரப்பியது.

பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னணியில் நான்கு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். மரணத்தைப் பார்க்க வந்தவர்கள் மீது வலி நிறைந்த மரணம் திணிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக்காக இப்படிச் செய்தோம் என்று தாக்கியவர்கள் தரப்பில் நியாயப்படுத்தலாம்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மீது பாய்ச்சப்பட்ட அதிகார வன்முறையையும், உயிர்ப்பலிகளையும் எப்படி நியாயப்படுத்த முடியும்? யாருடைய வன்மம் பீறிட்டு இப்படி மக்கள் திரள் மீது சிதறியிருக்கிறது?

நேரில் பார்த்தபோது தாக்குதலுக்கு பயந்து சிதறி நெரிசலில் ஓட முடியாமல் தளர்ந்து நடந்து கொண்டிருந்த வயது முதிர்ந்த தி.மு.க தொண்டர் வீறிட்டு இப்படிக் கத்தியதைச் சுலபமாக மறக்க முடியவில்லை.

‘’ மறுபடியும் எமர்ஜென்சியைக் கண்ணிலே காட்டுறீங்களேய்யா..’’

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*