உங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!

தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா?

அழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா?

#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை!

காதல் -கள்ளக்காதல் இந்த இரு ஸ்லோன்களுடன் தான் தினத்தந்தி , தினமலரின் நியூஸ் ரூம்கள் செய்திகளை உற்பத்தி செய்கின்றன.நீண்ட நாட்களின் பின்னர் காமக்கற்பனைகளை இஷ்டத்திற்கு எழுதிச் செல்ல ஒரு அபிராமி கிடைத்திருக்கிறார்.தமிழ் சமூகமும் கூட இந்த இரண்டே நெறிப்பாடுகளுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த அபிராமி தன் கணவரை விட்டு விட்டு காதலருடன் வெளியேற தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் வைத்துக் கொன்று விட்டு சென்ற இரண்டே நாட்களுக்குள் போலீசில் சிக்கியிருக்கிறார். அவரது காதலரை வைத்தே அவரை கைது செய்து விட்டது போலீஸ்.

சமூக வலைத்தளங்கள் முழுக்க அபிராமியை வசவித்தீர்க்கிறார்கள். “காமம் கண்ணை மறைத்து விட்டது”

“கள்ளக்காதல் வெறி”

“காமவெறியில் பிள்ளைப்பாசம் கூட தெரியவில்லை”

“பெண்ணியம் படித்துத்தான் இந்த கொலைகளை செய்திருக்கிறார்”

இது போன்று ஏராளமாக தாராளமாக எழுதிக் குவிக்கிறார்கள்.

சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கை போல அபிராமிக்கும் ஒரு மூட நம்பிக்கை. ஒன்றல்ல இரண்டு கொலைகளைச் செய்தால் கூட போலீஸ் நம்மை பிடிக்காது. சந்தோசமாக வாழ முடியுமோ இல்லையோ காதலருடன் வாழலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், அந்த மூட நம்பிக்கை 75 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்து விட்டது. புழல் சிறையில் காதலருடன் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஆயுள் முழுக்க சிறையில் இருக்கும் படியான தண்டனையோ, மரண தண்டனையோ கூட விதிக்கப்படலாம். சமூகத்தில் இறுகி வரும் பண்பாட்டு பேரினவாதமும், ஏதாவது ஒன்றில் கூட்டு மனச்சாட்சியை நிறுவ கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாத நீதிமன்றம் தூக்குத்தண்டனை கூட அபிராமிக்கு வழங்கலாம்.

ஆனால், இப்போது இந்த விவகாரம் அபிராமியோடு நிறுத்தப்படுகிறது. தான் கொன்ற இதே குழந்தைகளுடன் அபிராமி கொஞ்சி மகிழும் விடியோக்கள் காணக்கிடைக்கின்றன. பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொல்லும் அபிராமியும் முடிவு அவர் மட்டுமே எடுத்த முடிவா?
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அபிராமியின் வாக்குமூலம் என்று நீங்கள் ஊடகங்களில் படிக்கும் வாக்குமூலங்கள் அபிராமியே ஊடகங்களுக்குக் கொடுப்பவை அல்ல. அது அபிராமியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அபிராமியின் வாக்குமூலம் என்று எழுதப்படுபவை.

உண்மையில் அபிராமி கொடுத்ததாக போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் வாக்கு மூலத்தில் அவரது காதலர் இரு குழந்தைகளையும் கொல்லச் சொன்னதாக வாக்குமூலம் கூறுகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம். குழந்தைகளைக் கொன்ற கொலை காரி என்ற பட்டம் அபிராமிக்குக் கிடைத்து விட்ட நிலையில், இந்த விவகாரத்தை அபிராமியின் கணவருடனோ, அல்லது காதலருடனோ, அபிராமியுடனோ முடித்துக் கொள்கிற விஷயம் அல்ல.
அபிராமிகள் நம் வீட்டுகளிலும் இருக்கக் கூடும், மனச்சாட்சியோடு அன்றாடம் போராடி, கொலைகாரி என்னும் பட்டங்களைச் சுமக்க முடியாதவர்களாக குமைந்து கொண்டு இருக்கக் கூடும். அபிராமியின் இந்த மோசமான கொலைச் செயலும், அபிராமிகளும் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள் என்பதை கண்டறிந்து அதை சரி செய்தால் ஒழிய உங்கள் வீட்டிலும் ஒரு அபிராமிகள் உருவாகும் சாத்தியங்களுடன் தான் நமது சமூகம், குடும்பம் என்னும் அமைப்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அப்பா அம்மா பார்த்த பையனை திருமணம் செய்து, கணவனுக்காக வாழ்ந்து, குழந்தைகள் பிறந்த பின்னர் குழந்தைகளுக்காக வாழ்ந்து, பின்னர் பேரன் பேத்திகளுக்காக வாழ்ந்து அப்படியே முடிந்து போகிறது இந்திய பெண்களின் வாழ்க்கை. ஒரு கைக்குட்டை வாங்க வேண்டும் என்றால் கூட உழைத்து சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தால் கூட கணவனின் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய ஒரு இடத்தில் தான் பெண்ணை நிறுத்தி வைத்திருக்கிறது குடும்பம்.
குடும்பம் என்பது ஜனநாயகமற்ற அமைப்பாக மாறி அதை பண்பாட்டின் பெயராலும், சாதி, மரபு , குடும்ப கவுரவம் என்னும் பெயராலும் நாம் எப்போது அதை முழுமையாக ஏற்று அதன் வாழப் பழகுகிறோமோ அப்போதே பெண்ணின் பாத்திரம் அங்கு குத்துவிளக்கு ஏற்றுவதைத் தவிற வேறு எதுவாகவும் இல்லை.

நமது குடும்பங்களில் பெரும்பாலும் பெண்குழந்தைகளை யாரும் விரும்புவதில்லை. அதிலும் முதல் குழந்தை ஆணாகவும், இரண்டாவது குழந்தை போனால் போகுது பெண்ணாக வேண்டுமென்றால் பிறக்கட்டும் என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களின் விருப்பம். தப்பித் தவறி முதலாவது பெண் குழந்தை பிறந்து விட்டால். அந்த பெண் அவ்வளவுதான். இரு குழந்தைகளும் பெண்ணாக பிறந்தால் அந்த பெண்ணின் கதி அதோ கதிதான்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே எழும் சச்சரவுகளை பேசித் தீர்ப்பதற்கான ஜனநாயக வெளிகளை குடும்பம் மறுக்கிறது. பேசித்தீர்த்தல் என்பது இங்கே ஆணுக்கு அடங்கு பெண் மவுனமாகப் போவதுதான்.

நீண்ட வருடங்களாக அபிராமிக்கும் அவரது கணவருக்கும் இடையில் சச்சரவு இருந்துள்ளது. பல ஆண்டுகால பிரச்சனையில் உழண்ட அபிராமியை இரண்டே மாதத்தில் கரெக்ட் பண்ணி அவர் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் காதலர். இந்த இடத்தில் என்ன தான் இருந்தாலும் தன்னை விட்டு தன் மனைவி அபிராமி செல்ல மாட்டார் என்று கணவர் நம்பியிருப்பார்.
ஆனால், அபிராமி குழந்தைகளைக் கொலை செய்து விட்டு காதலருடன் செல்லும் முடிவை எடுக்கிறார். இதில் அபிராமிக்கு கொல்லும் உரிமை நிச்சயம் இல்லை. அவர் தன் காதலருடன் சென்றிருக்கலாம். குழந்தைகளைக் கொலை செய்து விட்டு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்விக்குத்தான் நாம் “கள்ளக்காதல் அல்லது காம வெறி” என்று பொட்டு வைக்கிறோம்.

அபிராமியின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு முன் கூட்டியே  தெரியவர அபிராமியை வீட்டுச் சிறையில் வைத்ததாகவும், அவர் தன் காதலருக்கு கொடுத்த தகவலின் பேரில்தான் குழந்தைகளை கொன்று விட்டு தப்பி வந்தால்  நாம் இணைந்து வாழலாம் என்ற முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எதன் பேரிலும் அபிராமி நடத்திய ஈவிரக்கமற்ற கொலைகளை  நியாயபப்டுத்த முடியாது. இரக்கமற்ற கொடிய செயலை நாம் நியாயப்படுத்த கிளம்பினால் அது எத்தனை பெரிய ஆபத்து. ஆனாலும், அபிராமிகள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள். இதில் குடும்பத்தின் பங்கு என்ன என்கிற கேள்விகளை நாம் எழுப்பியாக வேண்டும்.

அபிராமிகளை உற்பத்தி செய்வதில் சமூகம், சினிமா, சீரியல், குடும்பம், என பலருடைய பங்கு இதில் இருக்கிறது. இன்னொரு அபிராமி உருவாகாமல் இருக்க நம் குடும்ப அமைப்புகளை ஜனநாயக மாக்குவோம். அதைச் செய்யாதவரை உங்கள் மனைவிகளுக்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!

#அபிராமி #மூன்றாம்கட்டளை-அபிராமி #குடும்ப_அமைப்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*