“தலையைக் கொடுத்தேனும் பெரியார் சிலையைக் காப்போம்”-ஸ்டாலின்!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காது தேவசம் போர்ட் ஏன்?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது அதிமுக கிளப்பி விட்ட வதந்தி!

18-ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதி!

2,000 பேருக்கு ஆண்மை நீக்க தண்டனை : ஜெயலலிதா இருந்திருந்தால்?

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே,

பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதும் தான் சுயமரியாதையையும் அதற்கான சமூக நீதியையும் வலியுறுத்துகின்ற திராவிட இயக்கம்.

சாதி – மதப் பாகுபாடுகளால் மனிதர்களை ஒடுக்குவது மட்டுமின்றி, ஆண் -பெண் என்ற பாலின பேதம் காட்டுவதையும் திராவிட இயக்கம் ஏற்பதில்லை. பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, பெண் விடுதலை வேண்டும் எனப் போராடியும், ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில், சொத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை அவர்களுக்கு வழங்கியும், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் சாதனை புரிந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

அந்த வகையில் தான், சபரிமலை கோவிலில் பெண்களின் வழிபாட்டு உரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த நல்ல முற்போக்கான தீர்ப்பினைக் கொள்கைப் பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் உங்களில் ஒருவனாக – உங்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் தலைவனாக வரவேற்றுள்ளேன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விதைத்த விதை, பேரறிஞர் அண்ணா வளர்த்த நாற்று, தலைவர் கலைஞர் காலமெல்லாம் பாதுகாத்து வளர்த்த மரம் – அதுதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூக நீதியாக விழுது பரப்பி, ஒடுக்கப்படுகின்ற அனைவருக்கும் நிழல் கொடுக்கிறது. வடக்கே அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். தெற்கே தந்தை பெரியார் போராடினார். வள்ளலார், நாராயணகுரு என ஒவ்வொரு மாநிலத்திலும் சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பினர். அவற்றின் ஒட்டுமொத்த விளைவுதான் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிற பாலின சமத்துவம் மிகுந்த தீர்ப்பு.

கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது ஆற்றிய உரையிலேயே, நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அவரவர் நம்பிக்கையும் அதற்கான உரிமைகளும் காக்கப்பட வேண்டும் எனப் போராடுவதே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாறு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதும், பெண்களுக்கு வழிபாட்டு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் அவரவர் நம்பிக்கையைக் காக்கின்ற செயல்பாடுகளே!

அனைத்து மதத்தினரும் அவரவருக்குரிய உரிமைகளைப் பெற்று இணக்கமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமை சக்திகளுடன் கரம் கோர்த்துச் செயல்பட்டு வருகிறது. அதற்கு மாறாக, மதவெறியைத் தூண்டி, கலவர நெருப்பைப் பற்ற வைத்து, அமைதியைக் குலைத்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என நினைக்கின்ற அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் புதிய வகை ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றன.

அனைத்து தமிழர்களாலும் மதம் – சாதி கடந்து போற்றப்படும் தலைவரான தந்தை பெரியாரின் சிலைகளைக் குறி வைத்துத் தாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று சென்னையிலும், திருப்பூர் மாவட்டத்திலும் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த கயவர்கள் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து அறிக்கை வெளியிட்டேன்.

ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்கின்ற காரணத்தால், கயமைத்தனம் ஊக்கம் பெற்று, கடந்த 24ந் தேதி திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள பெரியார் சிலையின் கைத்தடி சேதப்படுத்தப்பட்டது. அதேநாளில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கவரப்பட்டில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்ய நினைத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையையும் சேதப்படுத்தியுள்ளனர் மதவெறி தலைக்கேறிய மூடர்கள்.

மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு என்ற தந்தை பெரியார் அவர்கள் தன்மானத்தை வலியுறுத்தினார். அந்த தன்மானத்தை விட இனமானம் பெரிது என்றார் அவர். இந்த இனம் தலைநிமிர்ந்து வாழ சொல்லடியும், கல்லடியும் ஏற்று ஓயாது உழைத்து, இனத்தின் மானம் காத்தவர். கடலூரில் எந்த இடத்தில் தன் மீது செருப்பு வீசப்பட்டதோ அங்கேயே சில ஆண்டுகள் கழித்து அவருக்கு, அவர் முன்னிலையிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களால் சிலை திறந்து வைக்கப்பட்ட புரட்சி வரலாற்றுக்குச் சொந்தக்காரர். உயிருடன் இருந்தபோதே அவரை ஒன்றும் செய்ய முடியாத செருப்புகளால், வரலாறாய் உயர்ந்து நிற்கும் பெரியாரை என்ன செய்து விட முடியும்?

இதையறியாத சில மூடர்கள் தொடர்ச்சியாகப் பெரியார் சிலைகளை அவமதிப்பு செய்யும் வேலைகளில் இறங்கி, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நினைக்கின்றனர். குறிப்பாக திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை பா.ஜ.க. ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டபோது; அதுபோலவே தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விதைத்த விஷ விதைக்குப் பிறகே, இந்த நச்சுக் கலாச்சாரம் பற்றிப் பரவத் தொடங்கியிருக்கிறது. அந்த ஹெச்.ராஜாவின் நிழலுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கும் தமிழக காவல்துறையின் போக்கினால், தமிழ்நாட்டை வன்முறைக்காடாக மாற்ற மாநில ஆட்சியாளர்கள் மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் தாளத்திற்கேற்ப ஆடும் ஊழலில் புழுத்த அ.தி.மு.க. ஆட்சி, ‘ரிமோட் கண்ட்ரோலில்’ இயங்கும் பொம்மை கார் போல முன்னும் பின்னுமாகப் போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் குட்டிச்சுவரில் போய் முட்டிக்கொள்ளும் என்ற நிலையில், அதற்கு முன்பாகத் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விடுமோ என்ற அச்சம் மக்களின் மனதில் எழுந்துள்ளது.

கமிஷன் – கலெக்ஷன் – கரப்ஷன் என கொள்ளையையே கொள்கையாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. ஆட்சி, மத்திய பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு அது சொல்வதற்கேற்ப, முக்கிய பிரச்சினைகளைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஈழப்பிரச்சினை தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் எதிராக அ.தி.மு.க. நடத்திய கவர்ச்சி நடன –கேலிக்கூத்துப் பொதுக்கூட்டம் அந்த திசை திருப்பலுக்கு ஒரு சான்று.

ராஜபக்சே ஏதோ சொல்லிவிட்டார் என்று எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டம் நடத்திய அருவருப்பான அதிசயத்தை அ.தி.மு.க அரங்கேற்றி முடித்த நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா அமெரிக்காவில் ராஜபக்சேவுக்கு நேரெதிரான மற்றொரு அவதூறு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இலங்கை நாட்டின் அரசியலில் இருவருக்கும் நடக்கும் அதிகாரப் போட்டியில் அவர்கள் உளறிக் கொட்டுவதை இங்கே உள்ள அதிமேதாவித்தனமான அ.தி.மு.க.வினர் தங்கள் எஜமானரான பா.ஜ.க. தலைவர்கள் சொல்லுக்கேற்ப அரசியல் செய்து அதிலாவது ஆதாயம் தேடலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.

பா.ஜ.க.வின் மதவெறி முகத்தையும், அ.தி.மு.க. ஆட்சியின் அடிமைத் தனத்தையும் தமிழக மக்கள் முழுமையாக உணர்ந்துள்ளனர். மக்கள் நலனுக்காகப் போராடுபவர்கள் மீதும் பொதுக்கூட்டங்களில் பேசுகின்றவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, நீதிமன்றத்தையும், காவல்துறையையும் இழிவுபடுத்திப் பேசிய ஹெச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாடே கேட்கிறது.

மனசாட்சி கொண்ட அ.தி.மு.க. தொண்டர்களும் கேட்கிறார்கள். பா.ஜ.க.வின் பின்னணியில் ஹெச்.ராஜாவின் திட்டமிட்ட வன்முறைச் செயல்களின் விளைவுதான், தந்தை பெரியார் சிலைகள் மீது வைக்கப்படும் குறி. அதனைக் கண்டுகொள்ளாமல் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால், தி.மு.கழகம் பொறுத்துக் கொண்டிருக்காது. ஏனெனில், இது பெரியார் மண்; திராவிடக் கோட்டை. இங்கே அமைதியைக் குலைக்கும் வெறியுடன் குரோத வால்கள் ஆடினால் கொள்கை வாள்கள் உயரும். பெரியாரின் இலட்சியப் புகழ் காக்க, எங்கள் தலையைக் கொடுத்தேனும் அவரது சிலையைக் காப்போம்.

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அதனை இன்னும் உரக்க விளக்கிடத்தான் அக்டோபர் 3, 4 ஆகிய இரு நாட்களும் தமிழ்நாடு முழுவதும் 120 இடங்களில் தி.மு.கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமியும் அவரது தலைமையிலான கொள்ளைக் கூட்டமும் செய்யும் தகிடுதத்தங்களையும் அதனால் தமிழ்நாடு அடைகின்ற கடும் பாதிப்பையும் விளக்கிட கழகம் களம் இறங்குகிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை – பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை – தலைவர் கலைஞரின் கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்திட உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்று திரண்டிடுக! என உங்களில் ஒருவனாக, இருகரம் கூப்பி அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்!

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்.

திருவள்ளுவர் ஆண்டு 2049, புரட்டாசி – 14.

30-09-2018.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*