’பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

“உண்மையோ பொய்யோ எதையாவது வைரலாக்குங்கள்” -பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அமித்ஷா!

’பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!
அம்பேத்கர் நூற்றாண்டு விழாவுக்குப் பின்னர் எழுச்சி கொண்ட தலித் அரசியல் பல்வேறு தளங்களில் பெரும் கலகங்களை உருவாக்கியது. இலக்கியம், அரசியல் தளங்களில் எழுச்சி கொண்ட தலித் பண்பாட்டு அரசியல். சினிமாவில் வெகு காலம் சாத்தியப்படவே இல்லை. அந்த வகையில் மாரி செல்வராஜ் முதல் தலித் சினிமாவை தமிழில் எடுத்திருக்கிறார். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து கால் நூற்றாண்டுகள் கடந்த பின்னரே தமிழின் முதல் தலித் சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது. அதை அட்டகாசமான காட்சி மொழியோடு புதிய வாழ்வியலை நமக்குக் காட்டியிருக்கிறார்.
முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் தலித் இளைஞன் உள்ளும், புறமும், அகமுமாக எதிர்கொள்ளும் அவலங்களும், அரசியல் உணர்வுமே படம். முதல் தலைமுறைக் கல்வி பற்றி அரிதினும் அரிதான படைப்புகளே தமிழில் வந்துள்ளன. ஹெப்சிபா ஜேசுதாசனின் மிகச்சிறந்த நாவலான ‘புத்தம் வீடு’ 60-களில் சாத்தியமான பெண் கல்வியைப் பேசுகிறது. மாரி செல்வராஜோ சாதியின் இறுகிய வடிவங்கள் இன்னும் வகுப்பறைகளிலும், பொதுவெளியிலும், பேருந்துகளிலுமாக எப்படி எல்லாம் தொழிற்படுகிறது என்று பரியனை வைத்து வகுப்பெடுத்திருக்கிறார்.
பரியனின் நாயைக் கொன்று விடும் சாதி வெறி திருநெல்வேலி பகுதியில் இருக்கும் சாதியின் கோரத்தை நமக்கு உணர்த்துகிறது. கூத்தில் பெண் வேடம் காட்டி ஆடும் பரியனின் தந்தையை அடிப்படை மனித உணர்வுகளுக்கு அப்பால் நிர்வாணமாக ஓட விடுகிற காட்சியில் நமது கூட்டு மனச்சாட்சியின் மீது ஒரு கல்லை வீசியிருக்கிறார்.
இதுவரையிலான தமிழ் சினிமாக்களில் சாதிப்பெருமிதம், அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியின் பெருமிதம் பேசும் எல்லா படங்களுமே மொக்கையான வெட்டி வீரவசனம் பேசும் படங்கள்தான். அதில் கடுகளவுக்குக் கூட மனித நேயத்தை பார்க்க முடியாது. ஆனால் பரியன் இந்த உலகிற்கு அன்பைச் சொல்கிறார். இது நமது கூட்டு மனச்சாட்சியின் மீது வீசப்பட்டிருக்கும் முதல் கல்.இப்படி ஒரு சினிமாவை யாரும் தயாரிக்க முன்வரமாட்டார்கள் அந்த வகையில் ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருப்பதற்கு அவருக்கு வாழ்த்துக்கள்.
மிகச்சிறந்த இயக்குநராக ஆகியிருக்கும் மாரி செல்வராஜின் பரியை நீங்களும் பாருங்கள்.ஒரு நிமிடம் கூட படம் எங்கும் தொய்வில்லை. சில இடங்களில் டப்பிங் துருத்தி இருந்தாலும் அதை எல்லாம் திரைக்கதையும் காட்சி மொழியும் கடத்திச் சென்று விடுகிறது. நம்மை குதிரையேற வைக்கிறார் வாழ்த்துக்கள்

#Pariyerum_Perumal #பரியேறும்_பெருமாள் #மாரிசெல்வராஜ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*