‘பரியேறும் பெருமாள் ‘ குறைவான காட்சிகள்தான்-மக்களிடம் பெருகும் ஆதரவு!

பரியேறும் பெருமாள்’ கூட்டு மனசாட்சி மீது வீசப்பட்ட முதல் கல்!

தனிமைச்சிறையில் திருமுருகன் :பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்!

மெகுல் சோக்‌ஷி இந்தியா கொண்டு வரப்படுவாரா?

இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பரியேறும் பெருமாள் படத்திற்கு போதுமான திரையரங்கள் இல்லை. இயக்குநர் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம் ‘ படம் சிம்பு, விஜய்சேதுபதி என பெரிய ஸ்டார் வேல்யூவோடு பெரும்பாலான திரையரங்களில் வெளியாகி இருக்கும் நிலையில், எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் கதையை மட்டும் நம்பி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. பலரும் திரைப்படத்தை தங்கள் வசதிக்கேற்ப பார்க்கும் அளவுக்கு திரையரங்கங்கள் இல்லை என்று குறை கூறி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பரியேரும் பெருமாள் திரைப்படத்திற்கு பெரும் ஆதரவு உருவாகி உள்ளது. அந்தவகையில் சில கருத்துக்களின் தொகுப்பு இதோ!
சரண்ராம்
`கொடும்பாலை நிலம். தூரமாய் நிழல்கூட மண்ணில் விழாத பனைமரங்கள். பொட்டல் காட்டின் நடுவே ஒரு சிறிய குட்டை. அதில் சில மனிதர்களும் அவர்கள் பாசமாக வளர்க்கும் நாய்களும் வெக்கையைத் தணிக்க உடலைக் கழுவுகிறார்கள். அப்போது வேறு சில மனிதர்கள் நெஞ்சை நிமிர்த்தியபடி அங்கு வருகிறார்கள். அவர்களைப் பார்த்து இவர்கள் கிளம்பிச்செல்கிறார்கள். புதிதாய் வந்தவர்களில் ஒருவர் அந்தக் குளத்தில் சிறுநீர் கழிக்கிறார்.’ – இது பரியேறும் பெருமாள் படத்தின் ஆரம்பக் காட்சி. மொத்த படத்துக்கான அரசியலை இந்த ஒரு காட்சியிலேயே பேசிவிடுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

நாயாகக்கூட சக மனிதனை மதிக்காத மனிதர்களும், நாயிடத்து மனிதத்தைக் காணும் மனிதர்களும் இந்த சமூகமெனும் ஒரே குட்டையில் ஊறிக்கிடக்கிறார்கள் என்பதை மாரி செல்வராஜ் தன் `பரியேறும் பெருமாள்’ மூலம் `அம்பலப்படுத்தி’ இருக்கிறார். நேர்த்தியான எழுத்தும் இயக்கமும் மாரி செல்வராஜை உச்சிமுகர்ந்து பாராட்ட வைக்கிறது. படத்தைத் தயாரித்த பா.இரஞ்சித்துக்கு அவரின் `மகிழ்ச்சி’ என்ற வார்த்தையைத் தவிர சிறப்பாக வேறு என்ன சொல்லிவிட முடியும்?

தெக்கத்திப்பக்கம் தாமிரபரணியில் தப்பிப் பிழைத்த மனிதர்களின் வலியை எந்தப் பார்வையாளனும் உணர்வதே இந்த சினிமாவின் வெற்றி. நதிக்கரை மாறியிருந்தாலும் அந்த வலியை நானும் உணர்ந்திருக்கிறேன். `ஜோ’ போன்ற இரண்டு தேவதைகளை கல்லூரி காலத்தில் தொலைத்திருக்கிறேன். `நல்லவனா கெட்டவனா… படிச்சிருக்கியா…வேலை பார்க்குறியா?’ என்ற கேள்விகளே அப்போது என் முன் இல்லை. `அழகனா… அழகற்றவனா? கருப்பா சிகப்பா..?’ என்ற கேள்விகளும் என்முன் வைக்கப்படவில்லை. முன் நின்றது ஒற்றைக் கேள்வி… `நீ என்ன சாதி?’!
அந்த தேவதைகளை நிரந்தரமாக பிரிய காரணமாக இருந்ததும் அந்த ஒற்றைக் கேள்வியே. முழுக்க சாதிய மனோபாவத்தோடு அலையும் குகைவாசிகளான மனிதக்கூட்டத்தில் தப்பிப் பிழைக்க கல்வி என்ற ஒன்றே சிறந்த வழி என நினைத்ததும், சாதிப்பெருமை பேசும் கூட்டத்திலிருந்தே சாதியை வெறுக்கும் மனிதர்கள் சிலர் என் வாழ்வில் இணைந்திருப்பதும் தான் அந்தக் கேள்வியின் வலியைக் கரைத்து என்னால் செரிக்க முடிந்தது.

`இப்பல்லாம் இங்கே யார் சார் சாதி பார்க்குறா?’ என்ற கேள்வியே அபத்தம் என்பேன். அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்து ஒரு மேல் சாதிப் பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்டவன் மணமுடித்த நிகழ்வை ராமநாதபுரம் ஜில்லாவிலே நான் பார்த்தது இல்லை. ராமநாதபுரத்தில் நிகழ்ந்த பல சாதிமறுப்புத் திருமணங்களை நுணுக்கி ஆராய்ந்தால், ‘ஊருல மதிக்க மாட்டாங்க’, `சாதிக்குனு கட்டுப்பாடு இருக்கு’, ‘சொந்தத்துல மரியாதை இருக்காது’ போன்ற ‘குலப்பெருமை’ வார்த்தைகளையே அவர்களும் பேசிக் கொண்டு இணக்கமாக இல்லாமல் திரிவதைக் காண முடிந்தது அண்மையில்கூட பையன் மேல் சாதியிலும் பெண் தாழ்த்தப்பட்ட சாதியிலும் பிறந்த ஒரு சாதி மறுப்புக் காதல் திருமணத்துக்காக மதுரைக்குப் போயிருந்தேன். பையன் வீட்டில் ‘நல்லது கெட்டதுக்கு இனி வர மாட்டோம். இனி நீங்க யாரோ நாங்க யாரோ’ என்று சொல்லி திருமணத்துக்கு வராமல் ஒதுக்கியதைத்தான் சாதியத்தை ஒழிக்க எடுத்து வைத்த முதல் அடியாகப் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கல்யாணம் மேல்சாதிப் பெண்ணை வீட்டிலேயே தலைமுழுகி அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன். நல்லவேளை பையன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் இல்லை… பல ஆணவக் கொலைகள் இன்றும் நடந்து கொண்டிருக்கும்போது இதுபோன்ற திருமணங்களாவது ஆறுதலாக இருக்கின்றன.

பரியேறும் பெருமாளில் பரியனும் ஜோவும் எப்படி..? அவர்கள் அன்பு கவித்துவமானதா..? பரியனின் தேவதைகள் எப்படிப்பட்டவர்கள் என பேசிக் கொண்டே போகலாம். ஆனால், சில தேவதைகளின் நினைவுகளை கிளற விருப்பமில்லை. அது ஒரு ஆறிய புண். இன்று வெறும் தழும்பு. வலிக்கக்கூட இல்லை. ஆனால், பரியேறும் பெருமாள் பார்த்தபோது தழும்பை மீறி காயம் வலித்தது. மாரி! நீ என்னை அருகிலிருந்து படம் பிடித்து எனக்காக பேசியதைப்போலவே உணர்கிறேன். பரியனின் பல வலிகளை வெவ்வேறு நிலைகளில் உணர்ந்திருக்கிறேன். என் தழும்பைக் கீறிவிட்டு அந்த கருப்பியின் ஆன்மாவெனும் நாக்கால் நக்கிக் கழுவியதைப்போல உன் சினிமாவால் என் ஆன்மாவைக் கழுவியிருக்கிறாய். உனக்கு நன்றியைத் தவிர என்னால் என்ன சொல்ல முடியும் மாரி?

இங்கே புரையோடிப்போயிருக்கும் சாதிய மனோபாவம் மாற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. ஆனால், ‘பரியேறும் பெருமாள்’ ஒரு அடி முன்னோக்கி வைத்திருக்கிறது. சில விஷயங்களை பொட்டில் அடித்து பேசியிருக்கிறது. சமத்துவத்துக்கான உரையாடல்களை நிகழ்த்த அழைப்பு விடுத்திருக்கிறது.

கடைசியாக, தண்டவாளங்களை அதிகம் காட்டிய பரியேறும் பெருமாள் இளவரசனையும் தண்டவாளங்களுக்கு சம்பந்தமில்லாத சங்கரையும் ஏனோ நினைவுபடுத்திச் செல்கிறது. காதல் கைகூடியிருந்தால் நானும் தசைத் துணுக்குகளாக மில்லினியம் ஆண்டொன்றில் மரித்திருப்பேனோ என்னவோ!
அதனால் மாரிக்கு மட்டுமல்ல… இந்த ஸ்டேட்டஸை டைப் பண்ண வைத்தற்காக என்னை உயிருடன் வாழ ரட்சித்த அந்த இரண்டு தேவதைகளுக்கும் மனதின் ஆழத்திலிருந்து என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.💝❤️🙏🏿
#
முத்துக்கிருஷ்ணன்
பரியேறும் பெருமாள் – படம் அல்ல வாழ்க்கை
தமிழ் சினிமாவின் புதிய அலை இயக்குனர்களில் ஒரு சுனாமியை நிகழ்த்தி சாதனை படைத்திருகிறார் Mari Selvaraj, இன்னும் திரைப்படத்தில் இருந்து மீளமுடியவில்லை, தம்பிக்கு ஆயிரம் முத்தங்கள், படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.விரிவாக எழுத வேண்டும் ஆனால் நீங்கள் எல்லாம் முதலில் குடும்பத்துடன் கிளம்புங்கள் அருகில் இருக்கும் திரையரங்குகள் நோக்கி…ஓம் முத்துமாரியின் முகம் என் இன்றைய இரவை களவாடிவிட்டது….
#
சரவணன் சவடமுத்து
பரியேறும் பெருமாள். இன்றைய புதிய தலைமுறையினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தமிழகத்தின் தலையாயப் பிரச்சினையை மையக் கருத்தாக்கி மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ்..!

ஒடுக்கப்பட்ட சாதியினரை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒடுக்கியே வைத்திருப்பீர்கள் என்ற வினாவையும் எழுப்பியிருக்கிறார் இயக்குநர்..!

கதிர், கயல் ஆனந்தி, கராத்தே வெங்கடேசன், மாரிமுத்து, யோகி பாபு என்று அனைவருமே மிக யதார்த்த நடிப்பில் நம்மை மறக்கச் செய்திருக்கிறார்கள். தமிழுக்கு இன்னும் ஒரு அழகிய திறமையான இளம் இயக்குநர் நமக்குக் கிடைத்திருக்கிறார். Mari Selvaraj பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

அவசியம் பார்க்க வேண்டிய படம்..!
#PariyerumPerumalMovie #PaRanjith #Kathir #KayalAnandhi #MariSelvaraj

#

பாலா வேலூர்

தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருந்த…
தமிழகம் கடந்தும் சர்வதேச அளவில் பல அதிர்வுகளை உருவாக்கியிருந்த
“கற்றது தமிழ் ” படம் குறித்த விமர்சன கூட்டத்தை வேலூரில் ஏற்பாடு செய்திருந்தோம்.
அதைத் தொடர்ந்து இயக்குனர் ராம் அவர்களை சந்திப்பதற்காக சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கு செல்வது வழக்கம்..

அப்படியான ஒருநாளில்..
Tv திரையில் ஓடிக்கொண்டிருந்த பெயர் தெரியாத ஒரு அயல் சினிமா வை
அந்த காட்சிகளை தனது இரு கைகளை யும் கேமரா வாக்கி படத்தில் பயணப்படும் கேமரா வுக்கு இணையாக ஒடிந்த தேகம் கொண்ட, அசல் கருப்பு நிறத்தில் ஒரு உருவம் அந்த படத்திற்குள் மூழ்கி விட்டிருந்தது…

யார் இது என்று திகைப்பில் இருந்த எனக்கு
பாலா இது செல்வம்..என்னோட உதவி இயக்குனர்…என்று ராம் தோழர் அறிமுகப்படுத்தினார்..
கற்றது தமிழ் படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருப்பயை நினைவு கூர்ந்தேன்..

அன்றிலிருந்து செல்வத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்…

உதவி இயக்குனராக..எழுத்தாளராக..இயக்குனராக

இந்த வெற்றி அசாத்தியமானது..

ஒருமுறை “தங்க மீன்கள் ” படத்தின் preview show பார்க்க போனேன்..
அந்த preview show க்கு மே 17 திருமுருகன் காந்தியும் வந்திருந்தார்…அப்போது செல்வம் பற்றி திருமுருகன் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது…

பாலா செல்வத்தின் இந்த உயரம் சாதாரணமானது அல்ல..இயக்குனராக செல்வம் இன்னும் பல உயரங்களை தொடுவார்..

Yes அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது…

படத்தின் கடைசியில் Tiet close up ல் இரண்டு கண்ணாடி டம்ளர்கள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளின் பாகுபாட்டை அதை சமன்படுத்த வேண்டிய தேவையை எந்த வசனமும் இன்றி உணர்த்தியது…
அரங்கிலிருந்து எழுந்த கைத்தட்டல்கள் அதை உணர்த்தியது…

இது போதும் படத்தை பற்றி அனைவரும் பேசி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..

நான் அதையெல்லாம் பெருமகிழ்வுடன் ரசிப்பதையே விரும்புகிறேன்…

மாரி செல்வராஜ் எனக்கு இன்னும் அதே செல்வம் தான்..

#

#கொற்றவை

மனிதத்தை கொன்று புதைக்கக் கூடிய வல்லமையை மனிதர்கள் (இந்தியர்கள்) கடவுளுக்கும் சாதிக்கும் கொடுத்திருக்கிறார்கள்.

“பரியேறும் பெருமாள் ஒன்றும் புதிய கதையல்ல” இந்தப் பேச்சு வராமலிருக்கப் போவதில்லை. சாதியும் புதிதல்ல. அது பல்லாயிர வருட சீக்கு. அந்த மன நோய் இருக்கும் வரை அதுபற்றிய பேச்சு அவசியமே. அது பேசப்படும் விதம்தான் ஒன்று, நம்மை அசைத்துப் பார்க்கும் அல்லது கடந்து போக செய்யும்.

பரியேறும் பெருமாள் வழியாக மாரி செல்வராஜ் முன்வைக்கும் சாதிய சமூக அவலங்களை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. கருப்பியை பரிகொடுப்பது தொடங்கி தாழ்த்தப்பட்ட சாதியில் பிறக்கும் ஒருவரின் உடமைக்கும் உடலுக்கும் காதலுக்கும் நேர்வதென்னவென்று பாருங்கள் என்கிறார்.

நான் யார் என்னும் கேள்வியை பரியேறும் பெருமாள் முன் வைப்பதாக விளம்பரங்கள் கண்டோம். உண்மையில் “நீங்கள் யார்” என்று தெரிகிறதா என்னும் கேள்வியைத் தான் பரியன் எழுப்புகிறான்.

செய்திகளாக படித்து கடந்து செல்லும் சாதிய அவலங்களை, கொலைகளை, துன்புறுத்தல்களை ஒரு கதையாக சொல்லும் போது அது செய்தி என்பதைக் காட்டிலும் உரையாடலாகி நம் மனசாட்சியை தட்டியெழுப்புகிறது. காட்சி ஊடகத்திற்கு அத்தகைய வல்லமை உண்டு. ஆனால் இந்த ஊடகமானது ஆளும் வர்க்கத்தினரின் சதுரங்க வேட்டைக் களமாகிப் போனது.

சகதிக்குள் வீழ்ந்த அந்த தேரினை இழுத்து சரியான பாதையில் கொண்டு செல்ல அவ்வப்போது சில தேரோட்டிகள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள், அத்தகைய தேரோட்டிகளின் எண்ணிக்கை தற்போது கூடி வருகிறதென்பது முன்னெப்போதையும் விட மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை ஆளும் வர்க்கத்தின் கைகளில் இருந்த சினிமா இப்போது மெல்ல மெல்ல இடது சிந்தனையாளார்களின், அதிலும் குறிப்பாக இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சமூக மாற்றத்திற்காக கலையை ஊடகமாக பயன்படுத்த விழையும் உண்மையான கலைஞர்களின் (பட்டியல் நீளமானது) ஆடுகளமாக மாறி வருகிறது.

தமிழ் திரையுலகில், இதற்கு முன்பு ஆங்காங்கே நல்ல படம் என்று தனி நபர் முயற்சியாக இருந்த ஒன்று தற்போது தோழர் பா. இரஞ்சித்தின் வரவால் ஓர் இயக்கமாக மாறி வருகிறது.

ஒடுக்குமுறையை ஆளும் வர்க்க கருனையாளர் ஒருவர் பேசுவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. முந்தையது கதை, பிந்தையது அரசியல். கதையை கடந்து செல்லலாம், அரசியல் உங்களை உள்ளிழுக்கும்.

பரியேறும் பெருமாளும் அவ்வாறே. கண்டும் காணாமலும் போகும் ஒடுக்குமுறைகளை முன்வைத்து நம்முன் உரையாடுகிறார் மாரி. அந்த உரையாடல் தொனி எதிர் தரப்பில் இருப்போரையும் ஒரு நிமிடம் அசைத்துப் பார்க்கும்.

திரைப்படங்களில் எத்தனையோ விதமான காதல்கள் சொல்லப்பட்டிருந்தாலும் ஜோ-பரியனின் அன்பு மாறுபட்டது, அலாதியானது. அந்த அன்பிற்காக பரியன் கொடுக்க விழைவது பேரன்பு. ஆனால் இந்த சமூகத்திற்கு எல்லாமே கருப்பு வெள்ளை தானே.

அடுத்தவரின் அன்பை கண்காணிப்பதும், அதன் மீது அதிகாரம் செலுத்துவதும், அதை வீழ்த்த நினைப்பதும் எத்தனை பெரிய வன்முறை. ஒடுக்கப்பட்டோர் என்ன செய்து பிழைக்க வேண்டும் என்று தொடங்கிய ஆளும் வர்க்க சாதிய அதிகாரமானது, அவர்கள் எம்மொழியில் கல்வி கற்க வேண்டும், யார் யாரோடு பழக வேண்டும், எங்கு புழங்க வேண்டும், எந்த குவளையில் பருக வேண்டும் என்று அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு அசைவின் மீதும் எப்படி அதிகாரம் செலுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள வகை செய்கிறார் மாரி செல்வராஜ்.

இவ்வளவு வலிகளை அனுபவிக்கும் மனிதர்களின் வாழ்வில் தான் எத்தனை கொண்டாட்டங்கள் நிலவுகின்றன. நாம் அறியாத வாழ்வியல், முற்றிலும் புதிதான கதாப்பாத்திரங்கள், திருப்பங்கள், மனிதர்கள் என பல புதுமைகளை பரியேறும் பெருமாளில் காண முடியும். அத்தனை நெகிழ்ச்சி. அத்தனை நம்பிக்கை.

பொழுது போக்கின் பெயரால் மலினங்களை ரசனையாக ஊட்டி வளர்ப்பதோ, பொய்மையான ஒரு மகிழ்ச்சியை திரையில் நிகழ்த்திக் காட்டுவதோ அல்ல கலை. சமூக நீதியற்ற சமூகத்தில் அறியாமையில் மூழ்கியிருப்போரிடையெ அறிவொளி ஏற்றி நிஜ வாழ்வில் அம்மகிழ்ச்சியை அனைவருக்கும் உறுதி செய்ய உரையாடல் நிகழ்த்துவதே கலை.

இடதுசாரி சிந்தனையாளர்களின் பெருக்கத்தால் தற்போது தமிழ் சினிமாவும் மலினங்களிலிருந்து விடுபட்டு நல் திசையில் பயணிக்கும் என்கிற நம்பிக்கை துளிர் விடுகிறது. ஆனால் இது நீடித்திருக்கவும், பொருளாதார ரீதியாக வெற்றிபெறவும் ஒரு கூட்டியக்கமாக மாற வேண்டும். Pa. Ranjith & Neelam Productions போல் இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் தோன்ற வேண்டும். பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்கக் கூடிய உத்திகளை வகுத்து ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து சமூக நீதி பேசும் கலைஞர்கள் உய்த்திருக்கவும், வெற்றி பெறவும் வழிவகை செய்ய வேண்டும்.

மக்களின் ரசனையை வளர்த்தெடுத்துவிட்டால் பின்னர் உலக அரங்கில் தமிழ் சினிமா ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும். இது சாத்தியமே.

அதேவேளை, வணிகச் சந்தையில் ஆங்காங்கே சில திரைக் கலைஞர்கள் இத்தகைய துணிவான முயற்சிகளை மேற்கொள்கையில் எந்த வித முன் முடிவுகளுமின்றி திரைக்கு சென்று பார்த்து ஊக்குவிப்பது மக்களின் கடமை. ஏனென்றால் அவர்கள் நமக்காக பேசுகிறார்கள்.

மக்களே, உங்களுக்கான பொழுதுபோக்கு எது என்று யாரோ தீர்மானிக்க இனியும் அனுமதிக்காதீர்கள். பொழுதை போக்குமளவுக்கு உழைப்புச் சுரண்டலில் வாழும் முதலாளித்துவ மேட்டுக்குடி வர்க்கத்திற்கு மட்டுமே நேரமும், தினவும் இருக்கிறது. உழைக்கும் வர்க்கமாகிய நமக்கோ அடிமைத் தளைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கான கடமை காத்திருக்கிறது. அதற்கு நாம் நம்மைச் சுற்றி நடப்பது என்ன, நம்மைப் போன்ற சக மனிதர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் அவசியமும் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்நிலை துயருக்கும் பொறுப்பேற்று, துயர் துடைப்தற்கு கை கோர்ப்போம் வாருங்கள். அப்போது தான் நாம் மனிதர்கள்.

பரியேறும் பெருமாள் உங்களுக்குள் இருக்கும் மனிதத்தை அன்போடு உங்களுக்கு திறந்து காட்டுவான்.. திரை சென்று கண்டுஅன்போடு புன்னகையுங்கள் சக மனிதனைக் கண்டு…. வா… ரயில் விடப் போகலாம் என்று தானே அழைக்கிறார்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*