#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை!

எப்படி இருக்கிறார் விஜயகாந்த்!

பாஜக எம்.பி லீலாதர் வகேலா மாடு முட்டி கவலைக்கிடம்!

வெளிநாடுகளுக்கு வெறும் 34 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கும் இந்திய அரசு!

தன் வாழ்நாள் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்த ரெங்கசாமியின் கால்கள்,தனது லட்சிய கனவு நிலத்தை பறிகொடுத்து,அந்நிலைத்திலே நிறுவப்பட்டுள்ள காற்றலைக்கு செகியூரிட்டியாக நாற்காலியில் அமரும்போது அவனது கால்களோடு அவனது ஆன்மாவும் உறைந்துவிடுகிறது.

படம் நெடுகிலும் ரெங்கசாமி நடந்து கொண்டே இருக்கிறான்.தகவல் சொல்லியாக,சுமையேற்றுபவனாக,விவசாயியாக இறுதியில் செகியூரிடியாக அமர்கிற வரையில் அவன் வாழ்நாள் முழுவதும் நடந்துகொண்டே இருக்கிறான்.தமிழகம் எங்கிலும் பல ரங்கசாமிக்களின் கால்கள் கருக்கல் முதல் இரவு வரை நடந்து கொண்டிருப்பதாக தோன்றிற்று.

தன்னை சுற்றியுள்ள சமூக வாழ்நிலமையானது, ரெங்காவின் சொந்த வாழ்க்கையை புழுவை நசுக்குது போல அழுத்தி நசுக்குகிறது.ரெங்காவைப் போலவே அப்பகுதி ஏழை உழைக்கும் மக்கள் யாவரும் வாழ்க்கை நிர்பந்தத்தில் அழுந்திக்கிடக்கிறார்கள்.ஆனாலும் அகப்பட்ட வாழ்க்கைக்குள்ளாக வாழ முயல்கிறார்கள்.சுகம்,துக்கம் யாவையும் அவ்வாறே கடக்கிறார்கள்.மூன்று ஏலக்காய்க்கு முன்நூறு மல்லியெனத் தோட்ட கங்காணியை வம்பிற்கிழுக்கிறபோது,பொதி சுமக்கும் கழுதையை அடித்துவிட்டு பின்பு கொஞ்சிடும்போது,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்கிற போது,ஆலோசனைகளை பகிரும்போது நகர்ப்புற முதலாளித்துவ சமூக வாழ்க்கை அனுபவத்திற்கு நேரதிரான வாழ்வனுபவத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது!

மலைக்கும் அடிவாரத்திற்குமான ஏலக்காய் சுமையேற்றும் ஏழை மக்களுக்கும் நம்பிக்கை பிடிமானமாக ஒரு மரமும்,அதன் கீழ் கொட்டப்படுகிற கற்குவியலும் உள்ளது. அடுத்து சாக்கோ என்கிற கம்யூனிஸ்ட் தோழன் இருக்கிறான்.தோட்ட முதலாளிகள்,உழைக்கும் தொழிலாளிகளை அழுத்தும் போதெல்லாம் வந்து சண்டை போடுகிறான்.நியாயம் பேசுகிறான்.மலை முழுக்க கைப்பை குடை சகிதமாக இவனும் நடந்து கொண்டே இருக்கிறான்.தனது சொந்த திருமண வாழ்க்கை குறித்த ஆர்வமேதும் இல்லாமல் அலைந்து திரிகிறான். தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களுக்கு மலையாளியான நீ போராடுகிறாய் என முதலாளி பேச அவனிடம் எகிறிப் பாய்ந்து சாக்கோ மல்லுக்கட்டுகிறான்.இறுதியில்.தோட்ட முதலாளியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஏழை மக்களுக்கு துரோகமிழைத்த தனது சொந்த கட்சி தலைவனை “நீ படித்த கம்யூனிசம் இதுதானா” என ஆவேசம் பொங்க வெட்டிச் சாய்கிறான்.

படத்தின் துவக்கத்தில் பின்னிரவை மெல்ல விரட்டிவருகிற அதிகாலை சூரிய ஒளியின் பின்புலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டம் நம்மை பரவசம் கொள்ளவைக்கிறது.அதில் எறும்பு ஊறுவது போல அன்றாடம் இந்த மலைமீது ஏறி இறங்குகிற மக்களின் வாழ்க்கை நிலைமை நமது நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவுகிறது.ஒற்றை யானை மிதித்ததால் கணவனையும் சிறுகச் சேர்த்த பணத்தையும் இழந்த கிழவி அந்த மேலையோடு உரையாடி வாழ்கிறாள்.

ஒவ்வொருமுறையும் நிலம் வாங்க மேற்கொள்கிற ரெங்காவின் லட்சியம் சந்தர்ப்ப சூழ்நிலையால் தடைபடுகிறது.முதல் முறை தடைபட்டபோது, சோர்வுற்ற அமர்ந்த ரெங்காவை,அவனது தாய் தேற்றி மலைக்கு வேலைக்கு போகக் கூறுகிறாள்.திருமணத்திற்குப் பிந்தைய காலத்தில்,நிலம் வாங்க வாய்ப்பு வருகிற சூழலில் குழம்புகிறபோது,மனைவியின் ஊக்கத்தால் நிலத்தை வாங்கத் துணிகிறான்.ஏலக்காய் மூட்டையை கைமாற்றி விட்டு மூலதனத்தை திரட்டுகிற முயற்சியில் எதிர்பாராத விதமாக ,ஏலக்காய் மூட்டை மலை முகட்டில் இருந்து சரிந்து கீழே கொட்ட, ஏலக்காயோடு ரெங்கா,அவனது குடும்பத்தின் வாழ்நாள் லட்சியக் கனவும் தகர்கிறது.

எளிய மக்களிடம் மனிதம் சார்ந்த உறவாக சமூக உறவு நீடிப்பதன் எதார்த்த வடிவமாக மீரான் வருகிறார்.நிலத்திற்கு ரங்கா தர வேண்டிய பணத்தை அவர் தருகிறார்.காட்டைத் திருத்தி கழனியாக்கி எனது வாழ்க்கை உயர்விற்கு பாடுபட உன் தந்தையின் உழைப்பிற்கு சன்மானமாக நிலத்தை வைத்துக் கொள் என இலவசமாக நிலத்தை வாங்க மறுக்கிற ரெங்காவிற்கு சமாதானம் சொல்கிறார்.

மனிதர்களுக்கு இடையிலான சமூக உறவு மனிதநேயத்துடன் சகோதரத்துவத்துடன் உயிர்ப்பாக இயங்குகிற நிலமாக மேற்குதொடர்ச்சி மலை சார் சமூகம் நீடிக்கிறது.இயல்பாக இனப் பாகுபாடும் மதப் பாடுபாடும் கடக்கப்பட்டுவிடுகிறது.
நிலம் கிடைத்த பிற்பாடு மழை புயலில் தக்காளி நாசமாக உரம்,விதை என மீள முயலாத சுழலில் சிக்குகிறான்.இந்த புயலில் கிழவியும் சிக்கி இறக்கிறாள்.இதன் பிறகான காட்சிகளில் இம்மலை மக்களின் வாழ்க்கையில் இருள் கவ்விப் பிடிக்கிறது.ஏழை மக்கள் மென் மேலும் ஏழையாக கடனாளியாக மாறுகிறார்கள்.உரம்,விதை,நிலத் தரகு வேலை பார்த்த லோகு கிடு கிடுவென முன்னேறுகிறான்.உலகமயத்திற்கும் முன்பும் பின்புமான கால பகுதிகளில் மலை மக்களின் சமூகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்,ரெங்காவின் வீழ்ச்சியும் லோகுவின் வளர்ச்சியோடு எதார்த்தமாக உணர்த்தப்படுகிறது.

இதற்கிடையில் சாக்கோவுடன் சேர்ந்த தோட்டத் முதலாளியயையும் பிழைப்புவாத கம்யூனிட் தலைவரையும் கொன்ற வழக்கில் ரங்காவும் சாக்கோவும் சிறை செல்கிறார்கள்.சிறையில் ரங்கா தேம்பி தேம்பி அழுகிறான்.நாட்கள் ஓடுகிறது.ரங்காவின் மனைவி உர,விதைக் கடை வியாபாரியாக வளருகிற லோகுவிடன் கடன் பற்று வைத்து இடுபொருட்களும் விதைகளும் வாங்கி விவசாயம் செய்கிறாள்.கருகிய பயிர்களுக்கு நடுவே மகனுடன் கதியற்று நடக்கிறாள்.

ஐந்தாண்டு சிறைவாசத்திற்கு பிறகு குதிரை பாய்ஞ்சான் மேட்டில்,புதர் மண்டியுள்ள கற்குவியலை கண்டு சலனமற்று அமர்கிறான் ரெங்கா. சிறைவாசத்திற்கு பிறகான காட்சிகளில் ரெங்கசாமி,அவனது மனைவின் கண்கள் குழி விழுந்து கருவளையம் சூழ உயிர்ப்பற்ற ஆன்மாக்களாக வருகிறார்கள்.அடுத்தக் காட்சியில் அவனது வீட்டிற்கு லோகு அழைப்பதாக அவனின் ஆட்கள் ரெங்காவை அழைத்துச் செல்கிறார்கள்.

கடன் அதிகரித்துவிட்டது,நிலத்தை கொடுத்துவிடு என கூறி,முன்திட்டத்தோடு தயாரித்த வைக்கப்பட்டிருந்த பத்திரத்தில் குறுக்கு குறியிட்டுள்ள இடத்தில் கையெழுத்து போட சொல்கிறான் லோகு.மறுப்பேதும் சொல்லாமால் மௌனமாக தலையசைத்து சரியென்று கையெழுத்து போட்டுவிட்டு அமைதியாக நடக்கிறான் ரெங்கசாமி.நிலம் வாங்கியவனிடன் வேலைக்கு பரிந்துரைக்கிறான் லோகு.அடுத்தக் காட்சியில்,புது காவலாளி உடுப்புடன் வீட்டிலிருந்து ரெங்கா வெளி வருகிறான்.

மாறிவருகிற புதிய சமூகப் பொருளாதார சூழ்நிலைகளை எதிர்த்து போராடி,அயர்ச்சியுற்று,அழுது,அரற்றி இறுதியில் எந்தவித எதிர்ப்பும்,உணர்வும் உயிரும் அற்ற மனிதனாக ரெங்கா வருகிறான்.அவளது மனைவியும்தான்.
வண்டி வந்து அழைத்துச் செல்கிறது.இறங்கி நடக்கிறான்.நடந்து கொண்டே இருக்கிறான்.அவனது ஒவ்வொரு அடியும் நமது மனதை கனம் கொள்ளவைக்கிறது.ரெங்காவின் கால்கள் அவனது லட்சிய நிலத்தின் செக்யூரிட்டி நாற்காலியில் முடிகிறது.அவனது வாழ்க்கை அசைவற்று உறைந்துபோகிறது.கனவை பறிகொடுத்த மனிதனாக வாழ்க்கை பிடிமானமற்று அதனது போக்கில் தன்னை ஒப்புக் கொடுத்தவனாக உறைந்து அமர்கிறான்.

கேமரா மேழும்புகிறது.அவனது நிலத்தில் பிரம்மாண்ட காற்றாலை கம்பத்தின் இறக்கைகள் சுழன்றுகொண்டிருக்கிறது.யாருமற்ற வெளியில் அந்நிலத்தில் தனது கனவைவும் ஆன்மாவையும் புதைத்தவனாக அமர்ந்துகிடக்கிறான்.

ஏழை உழைக்கும் மக்களின் வாழ்க்கையில்,இரு தசாப்த அரசியல் பொருளாதார நிலைமைகள் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றங்கள்,விளைவுகளை பாசாங்கு ஏதுமற்று,நாடகத்தன்மை ஏதுமற்று உள்ளது உள்ளவாறு இந்த படம் வெளிப்படுத்துகிறது.நிலமற்றவர்களின் கதைகள்,துண்டு நிலத்தில் போராடி மடிந்து நொடிந்து கொண்டிருப்பவர்களின் கதைகள் தமிழகம் முழுவதம் விரவிக் கிடக்கிறது.கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழ்வாதாரமின்றி வாழும் வேட்கையில்,ஆந்திர வனத்தில் உயிரை பொருட்படுத்தாது போலி மோதலில் பலியாகிற ஏழை உழைக்கும் மக்கள்,டெல்டாவில் விவசாயம் பொய்த்து,மலேசிய,சிங்கப்பூரில் அடிமை வேலை பார்த்து ஊருக்கு சிறுகச் சிறுக பணம் அனுப்புற உழைக்கும் மக்கள் என தமிழக கிராமங்கள் எங்கும் சூனியமாக,உயிர்ப்பற்றவையாக உள்ளன.
உலகமயத்தின் கோர விளைவால் குதரப்பட்டு சிதைக்கப்பட்டுவருகிற ஏழை எளிய மக்களின் ஒவ்வொரு நாளும் வாழ்வுக்கும் சாவிற்க்குமான போராட்டமாக மாறியுள்ளது.இதை உள்ளது உள்ளவாறு,ஒட்டுமொத்த சமூக நெருக்கடியின் ஒரு சிறு தெறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் உள்ளது.

இம்மலை மக்கள் பண உறவிற்கு முன்பாக மனித உறவால் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.கொடுக்கல் வாங்கல்கள் வாக்கின் பேரில் நடைபெறுகிறன.திருமணங்கள் எளிமையாக முடிக்கப்படுகிறது.முதலாளித்துவ சமூகத்திற்கு முழுவதும் மாறிச் சென்றிடாத அதேநேரம் அதனுடன் போராடி வென்றிட முடியாது சிதைகிற இம்மக்களின் வாழ்க்கை பற்றின கதை தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு வகையில் ஏழை உழைக்கும் மக்களின் வாழ்க்கை துயரத்தை பலருக்கும் கடத்தியுள்ளதோடு,மக்கள் துயரத்திற்கான அரசியல் பொருளாதார காரணத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்வது படத்தின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்றாக உள்ளது.நெருக்கடியான கால சூழலில் பொருத்துமாக வந்துள்ள இப்படத்திற்கு உழைத்த படக்குழுவிற்கும்,இயக்குனர் லெனின் பாரதிக்கும்,ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கும்,இசைஞானி இளையராஜாவிற்கும் தயாரிப்பளார் விஜய் சேதுபதிக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்!

கட்டுரையாளர் குறிப்பு-அருண் நெடுஞ்செழியன்

அரசியல் விமர்சகர், இயற்கை ஆர்வலர், இடதுசாரிப் பார்வையில் சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்கிறவர். பூவுலகின்  நண்பர்கள் குழுவின் அரசியல் இயற்கைப் பணியாளர்.

#Merukuththodarchimalai #மேற்குத்தொடர்ச்சிமலை #லெனின்பாரதி  #விஜய்சேதுபதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*