ஸ்டெர்லைட் பற்றி மார்ச் மாதம் சோஃபியா எழுதிய கட்டுரை!

தோழர் ஓவியா தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்!

தெறிக்க விட்ட ஷோபியா: பாஜக பணிந்தது எப்படி?

சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!

சோபியாவுக்கு பெருகும் ஆதரவு :டிரெண்டிங் ஆகும் பாஜக ஒழிக!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை தடை செய்ய தூத்துக்குடி மக்கள் கோரிக்கை

சனிக்கிழமை மாலை கடற்கரை நகரமானத் தூத்துக்குடியில் நகர மக்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து திரளான மக்கள் வீதிக்கு வந்துத் தாமிர ஆலை விரிவாக்கதிற்கு எதிராகக் கூடினர். முன்னதாக நகர் முழுவதும் பல்வேறு ஸ்தாபனங்கள் கடை அடைப்பிற்கு விடுத்த அழைப்பிற்குப் பெருவாரியான மக்கள் ஒத்துழைத்தனர். கடைகளும் வியாபாரத் தலங்களும் நாள் முழுவதும் அடைக்கப்பட்டன. மீனவ சமுதாயத்தினர், சிறு பேருந்து ஓட்டுனர்கள், உப்பளத் தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பல தொழிலாளர்கள் 24 மணி நேர போராட்டத்தை அனுசரித்தார்கள். நகரில் வழக்கமான நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன.

மார்ச் 24, 2018 அன்று போராட்டம்

மாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தின் அருகில் கூடினார்கள். தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சுமார் நான்கு கிமீ பரப்பளவிற்குக் கூடியிருந்த போராளிகள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பற்றியச் செய்தி பரவியது முதல் மாவட்டம் முழுவதும் மக்கள் கொதிப்படைந்து உள்ளனர். குமரெட்டியார்புரம் மற்றும் ஆலையை சுற்றி உள்ள பிற கிராமங்களில் வாழும் மக்கள் நாற்பது நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 13, 2018 இல் அமைதியான முறையில் காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடத்திய 250 – 270 பேரை போலீசார் கைது செய்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டித் தூத்துக்குடி போலீசாரால் திரும்பிப் பெறப்பட்டப் போராட்டத்திற்கான அனுமதியை போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையை அணுகிப் போராட்டத்திற்கு சம்மதம் பெறவேண்டி இருந்தது.

மார்ச் 25ஆம் தேதி கூட்டத்திற்கும் போராட்டத்திற்கும் தூத்துக்குடி நகர வணிகர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் மற்றும் உயிர் கொல்லி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் உறுப்பினர் பாத்திமா பாபு அழைப்பு விடுத்திருந்தனர். கூட்டத்தில் பேசியவர்கள் போலீசாரின் கைது நடவடிக்கை மற்றும் சிலரின் மேல் நடத்திய மிரட்டல், வன்முறையை கண்டித்தனர். பல பேச்சாளர்கள், பொதுமக்களின் கொதிப்பையும் அவர்களின் போராட்ட உணர்வையும் புரிந்து கொண்டு செயல் படாத மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரை சுட்டிக்காட்டி, அவர்கள் மக்களுக்கு சேவை செய்கிறார்களா அல்லது ராட்சச வேதாந்தா நிறுவனத்திற்கு சேவை செய்கிறார்களா என்று கேள்வி எழுப்பினர்.

மக்களின் கோபத்தை உணர முடிந்தது. ஆலையைப் பற்றிய உணர்வு, மக்களின் உறுதிப்பாடு வெளிப்பட்டது. தங்களின் சுய நலத்திற்காக, நகரின் சுற்று சூழலை பாழ் படுத்தியும் மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவித்தும், செயல் படுவதாக ஸ்டெர்லைட் ஆலையைக் கண்டித்துப் பதாகைகள் காணப்பட்டன. முக்கியமாக, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை தடை செய்வதை விட, நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையே ஒருமனதாக முன் வைக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய விதம் அவர்களின் உறுதியைக் காட்டுவதாக இருந்தது.

கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டம் தான் மிகப் பெரிய அளவிலானது என்ற போதிலும் 1994 முதல், ஆலை உற்பத்தி துவங்குவதற்கு முன்னரே ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. 1997இல் 1.4 கிலோ டன் தாமிர காத்தோடுகள் உற்பத்தியுடன் துவங்கிய வேதாந்தா குழுமத்துடன் இணைந்த ஸ்டெர்லைட் நிறுவனம் அவர்களுடைய உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்திருக்கின்றது. சமீபத்திய விரிவாக்க முயற்சி முழுமை அடையும்போது 2016இல் 4 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயரும். மாவட்ட நிர்வாகம் ஆலை விரிவாக்கம் பற்றிய ஆவணங்களை சரிபார்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறியதாக செய்தி சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் வெளியானது.

முக்கியமாக 5 ஆண்டுகளுக்கு முன்னால் மார்ச் 23, 2013இல்தொழிற்சாலையிலிருந்து நச்சு வாயு கசிந்து நூற்றுக்கணக்கானோர்பாதிக்கப்பட்டதும், போராட்டங்கள், கண்டனங்கள் எழக் காரணங்கள் ஆயின. பொது மக்கள் தந்த அழுத்தம் காரணமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மார்ச் 29ஆம் தேதி ஆலையை மூட ஆணை பிறப்பித்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ஸ்டெர்லைட் ஆலை, ஆலையிலிருந்து வெளிப்படும் கசிவு வரையறுக்கப்பட்ட அளவுக்குள் இருந்ததாகவும், மக்களுக்கு உடல் நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் உண்மைக்கு மாறாக வாதிட்டது. உண்மையில் ஆலைத் தொழிலாளர்களும், 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் மற்றும் வேறு சங்கடங்களை அனுபவித்தனர். 1997இல் இதேபோல் மற்றொரு சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் குறைந்தபட்சம் 90 பேர் அனுமதிக்கப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்டெர்லைட் ஆலை அருகிலிருந்த மற்றொரு பூத் தொழிற்சாலையிலிருந்து ஏற்பட்ட கசிவே காரணம் என்று கூறி உண்மையை மறைக்க முயற்சித்தது. அப்பூத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சிலரும் இந்தக் கசிவால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

1998, 2010, 2013 ஆகிய வருடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது சென்னை உயர் நீதி மன்றம் ஆகியவைகளால் பலமுறை மூடப்பட்டு வேதாந்தா குழுமம் நஷ்டத்தையும் பங்குகளில் வீழ்ச்சியையும் சந்தித்தது. 2 ஏப்ரல் 2013இல் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் சென்னை உயர் நீதி மன்றம் வழங்கிய ஆலையை மூடும் ஆணையை ரத்து செய்தது. மேலும் காற்று, நீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தியது மற்றும் 1997 முதல் 2012 வரை உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டது ஆகிய குற்றங்களுக்காக ருபாய் 100 கோடி சொற்பத்தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆணையிட்டது.

2010-11 நிதி ஆண்டில் மட்டும் ஸ்டெர்லைட் நிறுவனம் 1043 கோடி இதர லாபமும் (வரிபிடித்ததிற்கு முன்னதாக), 2009-10 நிதி ஆண்டில் ருபாய் 744 கோடி லாபமும் ஈட்டியுள்ளது. 15 ஆண்டுகளாக தன்னுடைய பேரழிவு நடவடிக்கைகளை தொடர்ந்து வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு வருட லாபத்தில் 10% இழப்பீடு வழங்க ஆணையிட்டது இந்த மாதிரி செயல்களைத் தடுக்கப் போதுமானது என்று கருத முடியாது. மாறாக பாதிப்பு ஏற்படுத்திய பின் வருந்துவதாக நடிப்பதற்கு வெகுமதி அளிப்பது போல் உள்ளது.

உச்ச நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப் பட்ட சில காலத்திலேயே தேசிய பசுமை தீர்ப்பாயம் மே 31, 2013இல் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் ஆலை கடும் குற்றச்சாட்டுக்களை அரசியல் தலையீடு, லஞ்சம் போன்ற வழிகளால் மீண்டு வருவதாகப் பிரபலம் அடைந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கனன்று கொண்டிருக்கும் இந்த பிரச்சனை பற்றி ம.தி.மு.க.வைத் தவிர்த்து எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இது வரை நடந்த எல்லா போராட்டங்களும் உள்ளூர் மக்களாலேயே நடத்தப்பட்டன. முன்னாள் இந்நாள் தி.மு.க., அ .தி.மு.க எம்.எல்.ஏக்கள், திருமதி. கீதா ஜீவன், திரு. S.T. செல்ல பாண்டியன் ஆகியோர் ஆர்பாட்டக்காரர்களால் பேரணியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். அதே நாள் பெருந்துறையில் நடந்த தி.மு.க மண்டல மாநாட்டில் பேசியவர்களோ, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களோ ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் பற்றி குறிப்பிடவில்லை. அதற்குப் பிறகு அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக திரு. மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மக்களிடையே எல்லாக் கட்சித் தலைவர்களும் வேதாந்தா குழுமத்திற்கு விலை போய்விட்டதாகவும், அதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உடந்தை என்று பரவலான அபிப்பிராயம் நிலவுகிறது.

புதிய தாமிர உருக்கும் ஆலையால் மிகுந்த பாதிப்பு அடையக்கூடிய கிராமங்களான குமரெட்டியார்புரத்த்திலிருந்தும் நைனார்புரத்திலிருந்தும் மாநகருக்குப் போராட வந்திருந்த மக்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் எல்லோரும் ஒரே உணர்ச்சியை வெளிப்படுத்தினர். அதாவது அவர்களின் உடல் நிலையும், வாழ்வாதாரங்களும் அழிக்கப்படும் தருவாயில் உள்ளது என்றும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கண்துடைக்கும் நலவாழ்வு திட்டங்களால் விரக்தி அடைந்த மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடுமையாகக் கோரினர். அவர்களின் நீண்ட கால துன்பத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற தீர்மானம் அவர்களின் நடத்தையிலும் வார்த்தைகளிலும் தெளிவாகத் தெரிந்தது.

தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் கூடியிருந்த, நைனார்புரத்தை சேர்ந்த சில பெண்களை அணுகினோம். அவர்கள் எங்களிடம் சொன்னது, “ஸ்டெர்லைட் வர்றதுக்கு முன்னால எங்களுக்கு நெறய விளைப்பு இருந்துச்சு. நான் கத்திரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் வித்துட்டு இருந்தேன். இப்போ விளைப்பு இல்ல, மழை இல்ல, குடிக்க ஒழுங்கா தண்ணி இல்ல. குச்சி பொறுக்கி சம்பாதிக்கிறேன். எங்க எல்லாருக்குமே உடல் நல பாதிப்பு அதிகமா இருக்கு. நாங்க டாக்டர் கிட்ட போனா அவங்க ஏம்மா நீங்க ஸ்டெர்லைட் பக்கத்தில இருந்தா இப்படித்தான் நோய் வரும்னு சொல்றாங்க. மூட்டு வலி, கை கால் வலி எல்லாம் எங்க எல்லாருக்குமே உண்டு. கருக்கலைப்பு ரொம்ப பரவலா நடக்குது. மூணு நாலு மாசத்துல நிறைய கர்பிணிப் பெண்களுக்குக் கருக்கலைப்பு ஆகுது. பிறக்கிற குழந்தைகளும் ஊனமுற்று பிறக்குறாங்க. இல்லன்னா வேற பிரச்சனைகளோடு பிறக்குறாங்க. நாங்க சுவாசிக்கிற காத்து நாறுது. தண்ணி வாய்ல வைக்க முடியாது. நீங்க வந்து பாருங்க எங்க ஊர்ல தண்ணி என்ன கலர்ல இருக்குன்னு. எங்களுக்கு மருந்து கொடுக்குறேன், பிள்ளைங்களுக்கு புஸ்தகம் கொடுக்குறேன்னு லஞ்சம் கொடுக்குறாங்க. ஆனா எங்களுக்கு இந்த ஏமாத்து வேலை எல்லாம் வேண்டாம். எங்களுக்கு ஸ்டெர்லைட்ட கண்டிப்பா மூடணும். வேற ஒண்ணுமே வேண்டாம்.”

போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட இருவரின் தாயாரிடம் பேசினோம். ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் அவர்கள் வாரந்தோறும் காவல் நிலையத்தில் தோன்றி கையெழுத்து இட வேண்டியிருக்கின்ற கட்டாயத்தால் உள்ள அவலத்தைப் பற்றி அவர் எங்களிடம் பகிர்ந்தார். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள பல குடும்பங்கள் இதே நிலையை பல வருடங்களாக எதிர்க்கொண்டுள்ளனர். தூத்துக்குடி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஸ்டெர்லைட்டிலிருந்து வெளியேறும் சல்பர் டைஆக்சைட் வாயுவினால் ஏற்பட்ட அமில மழையில் தனது வாகனத்தின் கூரை சேதம் அடைந்ததைப் பற்றி கூறினார். ஸ்டெர்லைட் வெளியேற்றும் நச்சு வாயு கழிவுகள் ஏற்படுத்தும் அமில மழைகளைப் பற்றி பல வருடங்களாக இந்த கிராமங்களில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஸ்டெர்லைட் நிறுவனம் இலவச மருந்துகளை விநியோகிக்கும் பேருந்துகளை கிராமங்களுக்கு அனுப்புவதாக கிராமத்தினர் கூறினர். வெளி உலகத்திடம் தங்கள் நடவடிக்கைகளால் சுற்றி இருக்கும் மக்களின் உடல்நிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று உறுதியிடும் ஸ்டெர்லைட் நிறுவனம், தங்கள் ஆலைக் கழிவினால் மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு இலவச மருந்துகளை விநியோகித்து வருகின்றது.

ஊர் மக்கள் ஸ்டெர்லைட் அனுப்பும் இந்த மருந்து விநியோகம் செய்யும் பேருந்துகளை அவர்களின் வீதிகளில் உள்ளே வருவதைத் தடுக்க முடிவு செய்துள்ளனர். எங்களிடம் பேசிய சிலர், அவர்களின் கிராமங்களில் வசிக்கும் எவரும் ஸ்டெர்லைட் ஆலையில் பணி செய்யவில்லை என்றும், அப்பணியை அவர்கள் விரும்பவில்லை என்றும் கூறினர். அவர்களின் எதிர்ப்பு வலுவானதாகவும் ஒன்றிணைந்ததாகவும் உள்ளது.

சிலர் ஸ்டெர்லைட் நிறுவனம் அதிகமாக வட மாநிலங்களில் இருந்து பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதாக குற்றம் சாட்டினர். பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள், உள்ளூர் மக்களைப்போல் அல்லாமல், சுற்றுச் சூழலை மாசு படுத்தும் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு, ஆட்சேபனைகள் இல்லாமலும் அப்பகுதி மக்களின் பிரச்சனைகளை பற்றி அனுதாபம் இல்லாமலும் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் கிராம மக்களுக்கும் வேறு மாநில தொழிலாளிகளுக்கும் இடையே மொழி ஒரு தடங்கலாக உள்ளது.

தங்களின் பிள்ளைகளின் எதிர்கால நலம், பெரியவர்களுக்கு போராட்டக் களத்தில் இறங்க ஒரு உந்து சக்தியாக விளங்கியது. சுற்றுப்புற மக்களையும், நிலம் காற்று நீர் ஆகியவற்றை மாசு படுத்தவில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்கள் ஊரைவிட்டு வெளியேற ஸ்டெர்லைட் நிர்வாகம் குடும்பத்திற்கு ருபாய் 5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்க முயல்வதாக பலர் குற்றம் சாட்டினர்.

சமூக அக்கறை என்ற போர்வை:

அவ்வப்போது சமூக நலத் திட்டங்களை ஏற்றெடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிறுவனம் என்ற போர்வையில் அதன் பேரழிவு ஏற்படுத்தும் செயல்களைத் தொடர்கிறது. தூத்துக்குடியில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டை எதிர்க்கும் போராட்டங்களை பல ஆண்டுகளாக பல்வேறு சூழ்ச்சிகளை உபயோகித்து நசுக்க முயன்றுள்ளது. உள்ளூர் கல்லூரிகளில் மேற்கொள்ளும் சிறு ஆட்சேர்ப்புத் திட்டங்களை பரவலாக விளம்பரம் செய்வதோடு “சமூகத் தலைவர்களுக்கு” பெருந்தொகைகள் வழங்குவதை ஆணவத்தோடு ட்விட்டரில் அறிவிப்பதை இங்கு காணலாம். அதோடு சேர்ந்து மாவட்டத்தில் ஆங்காங்கே அழகு படுத்துவது என்ற பெயரில் பொதுச்சுவறுகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் வண்ணம் பூசி தனது நிறுவனத்தின் பெயரை பிரசுரம் செய்கிறது. இது மக்களுக்கு அவர்கள் மேல் இழைக்கப்பட்ட அநீதியின் இடையறாத நினைவாகத் தெரிகிறது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்களை கீழிறக்க, தனது தொழிலாளர்களை எதிர்ப்போராட்டங்களில்ஈடுபடுத்துவது ஸ்டெர்லைட் பயன்படுத்தும் மற்றொரு உத்தி. ஆனால் பெரும்பாலான மக்கள் ஆலை அங்கமைந்திருப்பதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துள்ளனர். இதை தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் வளர்ந்த முறையிலும், அரசியல் கட்சிகள் எதுவும் சம்மந்தப்படாமல் மக்களிடையே இப்போராட்டம் பெற்ற பெரும் ஆதரவிலும் காணலாம்.
மார்ச் 25ஆம் தேதி நடை பெற்ற பெரும் ஊர்வலத்திற்கு மறுநாள் ஸ்டெர்லைட் தொழிலாளர்களிடமிருந்து என்று கூறி ஒரு செய்தித் தாளில் வந்த விளம்பரத்தை இங்கே காணவும்.

விளம்பரத்தை அளித்தவர்கள் யார் என்று உறுதி படுத்த முடியாவிட்டாலும், இதுவும் ஸ்டெர்லைட் நிறுவனம், அதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்களின் வலிமையைக் குறைக்கும் முயற்ச்சிகளில் ஒன்று என்று தெளிவாகத் தெரிகிறது.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்டெர்லைட் காப்பரின் நிதியில் கட்டப்பட்ட குழந்தை நலப்பிரிவு உள்ள ஒரு கட்டடமும் ஒப்பந்த முறையில் பணிபுரியும் சில துப்புரவு பணியாளர்களும் உள்ளனர். எங்களிடம் ஒரு துப்புரவு பணியாளர், தனது குறைந்த ஊதியம் தரும் பணியை இழந்தாலும் ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று சொன்னார்.

நாங்கள் தூத்துக்குடி மக்களிடம் (ஸ்டெர்லைட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகள் உட்பட) பேசியதிலும், போராட்டத்தில் தென்பட்ட பல பதாகைகளிலிருந்தும் பொது மக்கள் வேதாந்தா மேற்கொள்ளும் விளம்பர உத்திகள் தங்களைக் கேவலப்படுத்துவதாக உணர்கின்றனர் என்று தெளிவானது.

நைனார்புரத்தைச்சேர்ந்த லட்சுமி அவர்களிடம் ஸ்டெர்லைட் தனது விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்தினால் என்னவாகும் என்று கேட்டபோது, “அரசியல்வாதிகளோ மேலதிகாரிகளோ ஒண்ணும் செய்யலைன்னா ஏழை எளிய மக்கள் நம்ம தான் போய் ஸ்டெர்லைட்ட மூடணும். அவங்க கொன்னா கொல்லட்டும். பத்து வருஷத்துக்கு அப்புறம் சாகுறத விட இப்பவே சாகலாம். அவங்க விரிவாக்கினா தூத்துகுடியும், 30 மைல் சுத்தி உள்ள கிராமமும் அழிஞ்சிரும். அதுக்கு இப்பவே சாகலாம்” என்று அங்கு கூடிய பெரும்பாலானவர்களின் எண்ணத்தைப் பற்றி சுருக்கமாக கூறி முடித்தார்.

சோஃபியா ,அஞ்சலி முன்னாள் மற்றும் தற்போதைய நகரவாசிகள் ஆவர்

#Tamilisai_Soundararajan #DrTamilisaiBJP#தமிழிசை_சௌந்தரராஜன் #தமிழக_பாஜக#மோடி_அரசின்_வீழ்ச்சி#yougogirlsofia#isupportsofia#JusticeForSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*