அமைச்சர் ஜெயக்குமார் ராஜிநாமா?

 

#Metoo கல்லூரிமாணவியை ஏன் மிரட்டுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்? Audio

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது.

சிந்து என்ற பெண் விவகாரம் தொடர்பாக வெளியான ஆடியோ உரையாடல் அதிர்வலைகளை உருவாக்கி நிலையில், சிந்து என்ற பெண்ணின் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தினகரன் அணியினர் ஏராளமான ஆவணங்களை ஜெயக்குமாருக்கு எதிராக பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுகிறோம் என்று போய் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஜெயக்குமாருக்கு எதிரான துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் தினகரன் அணியினரின் செயல்களை அறிந்த அந்த பெண் இப்போது சென்னைக்கு வெளியில் சென்று  தொடர்பெல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்றும் ஒரு தகவல் கசிகிறது.

இந்நிலையில், ஏற்கனவே ஆளும் கட்சி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் தமிழக மக்கள் கொதிப்பில் உள்ள நிலையில், சிந்து விவகாரம் ஆளும் கட்சி மீது மேலும் முகச்சுளிப்பை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், ஆளுநர்  டெல்லி செல்கிறார். இரண்டு முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்க டெல்லிக்கு விரைந்துள்ளாராம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18  பேரின் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கும் நிலையில், தீர்ப்பு  அரசுக்கு பாதகமாக வந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும்.  தினகரன் தரப்புக்கு சாதகமாக வந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற இரு விஷயங்களோடு கூட அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் சர்ச்சை தொடர்பாகவும் மத்தியில் பேச இருக்கிறாராம்.

18 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் எடுத்த தகுதி நீக்க நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தால் அரசும் சரி நீதித்துறையும் சரி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகும். அது மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் தமிழகத்தில் அவப்பெயரை உருவாக்கிக் கொடுக்கும். தினகரன் அணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் ஆட்சி கவிழும். ஆனால் தினகரனை சமாதானம் செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடாமல் முந்தைய ஆளுநர் காலம் கடத்தியது போல கடத்தி அதற்குள் தினகரன் அணியினருடன் சமரசம் பேசி அரசை இப்போதைக்கு தக்க வைத்துக் கொள்ளலாம்.ஆனால், அதற்கு தினகரனை சமாதானப்படுத்தும் நோக்கில் அந்த அணியினர் குறி வைக்கும்  ஜெயக்குமாரை ராஜிநாமா செய்யச் சொல்லலாம்.

அப்படி ஜெயக்குமார் ராஜிநாமா  செய்யும் பட்சத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் அணியினருடன் பாஜக மத்தியஸ்தம் செய்ய அதில் தினகரன் அணியினர் இறங்கிப் போக வாய்ப்பு உள்ளது. தினகரனின் பிரதான எதிரிகள்  ஒபிஎஸ்- இபிஎஸ் அணியினர்தான். சமாதானமாகி அதிமுக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்று அமைச்சர் பதவிகள் வேண்டாம் என்ற நிபந்தனைகளோடு கட்சியில் சில முக்கிய பொறுப்புகளைக்  கேட்டு வாங்கும் தினகரன் அணியினர்.கூடுதல் பலத்தோடு  அதிமுக கட்சியை கைப்பற்றலாம் என நினைக்கிறார்கள்.

தினகரன் அணி உறுப்பினர்கள் 18 பேரும் குற்றாலம் சென்றிருக்கும் நிலையில், பாஜகவோடு சில நிபந்தனைகளுடன் பேச தினகரன் சம்மதம் பெறவே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைப் போய் சந்தித்தார்.

அடுத்து வரவிருக்கும் சில நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

#ஓபிஎஸ்_இபிஎஸ் #தினகரன்_அணி #ஆளுநர்_பன்வாரிலால்புரோகித்

சபரிமலை பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடிய நான்கு பெண்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*