அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்!

பழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்?

வீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை?

தமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா?

சற்றே நீளமான இந்த தலைப்பைப் பார்த்ததும் சலிப்புதான் ஏற்பட்டது. ஒரு நூலின் உள்ளடக்கத்தை விட தலைப்பே எல்லா காரியங்களையும் சொல்லி விட்டால் நாவலுக்குள் பயணிக்க விரும்பும் வாசகனை அது தடுக்கும் என எண்ணுகிறேன். அப்படி ஒரு மன நிலையில்தான் இந்த நாவலை வாசிக்கத்துவங்கினேன்.

ஆனால், ‘அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்’ நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்த போது ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. ஆவரான் நம்மை உள்ளே இழுத்து விஷுவலாக கதை சொல்கிறான். குமரி மாவட்டத்தில் விட்டேத்தியாக அலையும் ஆட்களை சட்டம்பி, ஊச்சாளி, எரப்பாளி, தொட்டி என இன்னபிற வசவுச் சொற்களால் வைவதுண்டு. அப்படி ஒரு ஊச்சாளிதான் ஆவரான் குடும்பம் அவனை அரேபியாவுக்கு டிரைவல் வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அரேபியாவில் ஒட்டகம் சூழ் வனாந்தரத்தில் சிக்கிக் கொண்ட ஆவரான் எப்படி மீள்கிறான் என்பதே இந்த நாவலின் லைன். அதை ஒரு அட்டகாசமான பயணத்தினூடே சித்திரமாக்கியிருக்கிறார் நாவலாசிரியர் பிரபு தர்மராஜ்.

இந்நாவலின் ஜீவனாக சுமையாட்களாகவும் இருப்பது கதாபாத்திரங்கள்தான். அவைகள்தான் நம்மை அள்ளி எடுத்து அப்படியே அமுக்கின்றது.
கிழவி ஆரோக்கியத்தம்மாள், ஏசுக்குட்டி, அவரது மனைவி புஷ்பத்தம்மாள்,ஆவரானும் அவனது நண்பர்களும், அப்புறம் அந்த பாதிரியாருமாக கதை நாகர்கோவில் மண்மணத்தோடும் அதற்கே உரிய இயல்போடும் நகர்கிறது. கிழவி ஆரோக்கியத்தம்மாளுக்கும், புஷ்பவல்லிக்குமான சம்பாஷணைகள் கனமிக்கது.

ஆவரான் தியேட்டருக்கு தீவைத்து விட்டு பின்னர் வெளிநாட்டுக்குச் சென்று படுகிற பாடுகள் கனதி மிக்கதாய் தோன்றும் ஆனால் கனதியான ஒன்றாக இல்லை. அப்படி ஒரு கதையை கமிட் செய்து கொள்ளாமல் நெய்திருக்கிறார் எழுத்தாளர். அரேபிய பண்ணையில் ஆவரான் படிக்கும் டைரி பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அந்த டைரிக்குப் பின்னால் இருப்பதும் கூட ஒரு ஆவரானைப் போன ஒரு நபரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

எங்கும் பிடிகொடுக்காமல் நழுவிச் செல்லும் மீனைப் போல ஒரு விளையாட்டை நம்மீது நடத்தி மீண்டும் நாகர்கோவிலில் கொண்டு வந்து இறக்கி விடுகிறது இந்நாவல்.ஒரு நாவல் வாசகனை ஈர்த்து பின்னர் வெளியேற்றி விட வேண்டும் அப்படி நகர்கிறது இந்நாவல், இந்நாவலில் உழலும் மனிதர்களும், வட்டார வழக்கும், அராபிய தேசங்களில் அடித்தட்டு வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் நிலையும், அவர்களை தூதரக அதிகாரிகள் நடத்தும் விதமும், தமிழர்களும்,மலையாளிகளும் அரபுநாடுகளில் என்னவிதமான அரசியம் ஓர்மைகளோடு வாழ்கிறார்கள் என்பதையும் கூட ஒரு கேள்வியாக இந்நாவல் முன் வைக்கிறது.

அரபு தேசத்தில் படுகிற அவஸ்தைகள்  தொடர்பாக மலையாளத்தில் சில படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் இதுவரை உருப்படியாக ஒரு படமும் வரவில்லை. தமிழகத்தில் இருந்து அரபு தேசத்திற்கு பல்வேறு வேலைகளுக்காக மக்கள் செல்கிறார்கள். வீட்டு வேலை, கட்டுமான தொழில், உயர் கல்வி பெற்றவர்கள் நல்ல வருவாய் ஈட்டும் தொழில்கள், மீன் பிடித்தொழில் என பல விதமான பணிகள். இதில், நல்ல ஷேக்  ஓனர் அமைந்தால்  உயர் கல்விகள் பெற்றுச் செல்கிறவர்களுக்கும், மீன் பிடித்தொழிலாளர்களுக்கும் நல்ல பணம் கிடைக்கும். ஆனால் ஏமாற்றப்பட்டு அடிமட்ட வேலைகளை செய்யும் படி சிக்குகிறவர்களின் அடையாளம் தான் இந்த ஆவரான்

நல்ல திரைக்கதை வேண்டும் என்கிறவர்கள் இந்நாவலை வாசிக்கலாம். அல்லது பிரபு தர்மராஜ் இதை திரைப்படம் ஆக்கலாம்!

நூலின் பெயர்:- அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்

#தீக்கொளுத்தி_ஆவரான் #பிரபுதர்மராஜ் #ஆவரான் #அரேபியாவுக்குப்_போன_தீக்கொளுத்தி_ஆவரான் #குமரி_வட்டாரவழக்கு #Prabhu_Dharmaraj

நூல் ஆசிரியர்:- பிரபு தர்மராஜ் (9994640002)

விலை:- 100

கிடைக்குமிடம்:- ‘நடுகல்’

வாய்ப்பாடி (அஞ்சல்)

விசயமங்கலம் (வழி)

அஞ்சல் எண் – 638056

தொலைபேசி:- 9865442435

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*