இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

ரிசன் (Risen) என்ற திரைப்படம் ஸ்டார் மூவீஸ் செலக்ட்-ல் நேற்று ஒளிபரப்பப்பட்டது. இயேசு மரித்த பின்பான 40 நாட்களில் நடந்தவை படத்தின் கதை. பிலாத்துவிடம் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்த க்ளாவியஸ் அடைந்த மனமாற்றம் படத்தின் முக்கிய அம்சம். இந்த படம் கிறிஸ்தவ மத நம்பிக்கையில் தோய்ந்து எடுக்கப்பட்டிருந்தாலும், இயேசு உண்மையிலே உயிர்த்தெழுந்தாரா அல்லது இயேசுவின் உடல் அவரது ஆதரவாளர்களால் களவாடப்பட்டதா என்ற பிரச்சினையை முக்கியமாக விவாதிக்கிறது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை உற்று நோக்குகிறான் க்ளாவியஸ். அவர் மரணத்தை உறுதி செய்த பிறகு உடல் இறக்கப்பட்டு எரியூட்ட எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கே வருகின்ற யூத மதவாதிகள் டைபீரியசின் ஆணையை காட்டித் தடுக்கிறார்கள். இயேசுவின் உடல் கல்லறையில் வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் இயேசு உயிர்த்தெழுந்ததாக அவரது ஆதரவாளர்கள் மக்களை மனமாற்றி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். எனவே கல்லறையில் கிடத்தி மூன்று நாள் கழித்து இயேசுவின் உடல் எங்கும் செல்லவில்லை; அவர் சாதாரண மனிதர் தான் என்ற செய்தியை உரத்து சொல்ல ஒரு வசதியை எதிர்பார்த்து க்ளாவியஸை நெருக்குகிறார்கள்.

அதன் படியே இயேசுவின் உடல் துணிகளால் சுற்றப்பட்டு ஒரு கற்குகையில் கிடத்தப்படுகிறது. அதன் வாயில் பெரிய கல்லுருளையால் சாத்தப்பட்டு பின்னர் வடம் வேயப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. இவை அனைத்தையும் க்ளாவியஸ் முன்னின்று செய்கிறான். இரண்டு காவலர்களுக்கு கடுமையான ஆணை பிறப்பித்து விட்டு கடைசியாக செல்கிறான் க்ளாவியஸ். அவர்கள் அவனிடம் உணவு வழங்குமாறு கேட்கிறார்கள். ஏற்பாடு செய்வதாக கூறுகிறான் க்ளாவியஸ். தூரத்தில் மேரி மகேதனா மற்றும் இயேசுவின் தாயார் உட்பட சில பெண்கள் தங்கள் தலையை சுற்றிய கருப்பு அங்கிகளுடன் தென்படுகிறார்கள்.

இரண்டாம் நாள் முடிவில் இயேசுவின் உடல் காணவில்லை என்ற செய்தி வருகிறது. பிலாத்து மற்றும் க்ளாவியஸ் ஆகியோர் அதிர்ச்சி அடைகிறார்கள். மதவாதிகள் பிலாத்துவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். ரோமப் பேரரசன் டைபீரியஸ் தன் மீது ஆத்திரம் கொண்டு விடுவான் என்று அஞ்சுகிறான், பிலாத்து. இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி கேள்விப்பட்டு மக்கள் அவரை பின்பற்ற தொடங்கி விடுவார்களோ என்று ஆட்சியாளர்களும், மதவாதிகளும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆம்! கிறிஸ்தவம் ஐரோப்பாவை ஆட்டுவித்த அப்போதைய கம்யூனிசம்.

கற்குகையை ஆய்வு செய்கிறான் க்ளாவியஸ். காவலுக்கு நின்ற காவலர்களில் ஒருவனை விசாரிக்கிறான். எட்டிலிருந்து பத்து பேர் வரையிலானவர்கள் அவர்கள் இருவரையும் கட்டிப்போட்டு விட்டு இயேசுவின் உடலை எடுத்து சென்றதாக கூறுகிறான். க்ளாவியசால் இதனை நம்ப முடியவில்லை. தான் நட்டுவித்த கல்லுருளையை அகற்ற குறைந்தது 50 அல்லது 100 பேரின் வலிமை வேண்டும் என்று எண்ணுகிறான். இயேசுவின் உயிர்த்தெழுதல் மக்களிடம் செல்வதை தடுக்க மதவாதிகளிடமிருந்து அந்த காவலன் கையூட்டு பெற்றிருப்பானோ என்று ஐயுறுகிறான். இரண்டாவது காவலன் தப்பி விடுகிறான். பின்னர் அவனை ஒரு மது விடுதியில் க்ளாவியஸ் கண்டுபிடிக்கிறான். அவன் கூறிய செய்தி தான் கிறிஸ்தவத்தின் ஆதார சக்தி எனலாம்.

மூன்றாம் நாளன்று ஒரு ஒளி வீசியதாகவும், அதனால் தனது கண்கள் கூசியதாகவும் அப்போது கயிறுகள் அறுபட்டு மனுஷகுமாரன் கற்குகையிலிருந்து வெளியேறியதாகவும் இரண்டாமவன் கூறினான். க்ளாவியஸ் வாக்களித்த படி உணவு வழங்காததால் நன்றாக அப்போது குடித்திருந்ததாகவும் கூறினான். இந்த காட்சி ஒரு குடிகாரனின் மனப்பிராந்தியாக இருக்குமோ என்று இதனையும் ஐயுற்றான் க்ளாவியஸ். இயேசு சொஸ்தப்படுத்திய மிரியம், இயேசுவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த மேரி மகேதனாள் உட்பட பலரை அழைத்து க்ளாவியஸ் விசாரித்தான். அவர்கள் பதில்கள் பிரமை பிடித்தவர்களின் வார்த்தைகளாக ஒலித்தன. உதாரணத்துக்கு, இயேசுவின் சீடர்களில் ஒருவரான பார்த்தலேமீவ் ‘இயேசு இப்போது எங்கே?’ என்ற கேள்விக்கு ‘எங்குமிருக்கிறார்’ என்று இடக்கரமாக பதில் கூறுவார்.

இயேசுவின் காணாமல் போன உடலை மீட்கும் பணி அதிகாரியான க்ளாவியசும் ஒரு கட்டத்தில் இயேசுவின் மாயத்தோற்றத்தை காணத்தொடங்குவார். இயேசுவின் சீடர்களுடன் இணைந்து படகில் மீன் பிடிக்கையில் இயேசுவை அனைவரும் காண்பர். அந்த இரவை இயேசு அவர்களுடன் கழிப்பார். சீடர்கள் உறங்குகையில் இயேசு சற்று தூரத்தில் தனியாக விழித்திருப்பார். (இயேசு கைது செய்யப்படுவதற்கு முன்பும் கூட இந்த சீடர்கள் தூங்கிக் கொண்டு தான் இருப்பர்.) இயேசுவின் அருகாமையில் செல்லும் க்ளாவியஸ் அவரின் கதகதப்பை உணர்வான். மறுநாள் காலை தனது செய்தியை உலகெங்கும் பரப்புமாறு கூறிவிட்டு இயேசு விடை பெறுவார். மார்ஸ் என்ற தெய்வத்தை வணங்கும் ரோமானியனான க்ளாவியஸ் கிறிஸ்தவனாக மனமாற்றம் அடைவான்.

இந்த படத்தை இயக்கியவர் கெவின் ரெனால்ட்ஸ். க்ளாவியஸ் பாத்திரத்தில் ஜோசப் ஃபியன்ஸ் அளவாக நடித்து நெகிழ செய்கிறார். படங்களில் தோன்றும் ஜீசஸ் பொதுவாக வசீகரிப்பதுண்டு. ஆனால் இந்த படத்தில் வரும் ஜீசஸ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை நினைவுபடுத்துவதால் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கிறிஸ்தவ மத நம்பிக்கை சார்ந்த படம் என்றாலும் இப்படத்தின் நிகழ்கூறு தவிர்க்கவியலாமல் இயேசுவின் உயிர்த்தெழுதல் சார்ந்த சந்தேகத்தை விதைத்து கொண்டே போகிறது. வரலாறு, தொன்ம சமூகம் பற்றிய ஆர்வம் உள்ளவர்கள் இப்படத்தை ரசிக்க முடியும்.

#risen #இயேசு_உயிர்த்தெழுந்தாரா #ஈஸ்டர் #கிறிஸ்து-பிறப்பு #கத்தோலிக்கர்கள்

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*