ஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு!

வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி!!

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

மேற்குலக நாடுகளைப் போல இந்தியா ஊடகச்சுதந்திரம் பேணப்படும் நாடு அல்ல, யுத்த காலங்களிலும், போர்க்களங்களிலும் கூட ஊடகவியலாளர்களின் உரிமையை பேணுவதில் மேற்கத்திய தேசங்களில் கடைபிடிக்கப்படும் உயர்ந்த மதிப்பீடுகள் எதுவும் நம்மிடம் இல்லை. காரணம் அரசியல் செல்வாக்கு, ஊழல், சாதி, என பல்வேறு சிக்கல்களைக் கொண்ட இந்திய சமுகங்களில் கருத்துச் சுதந்திரமும், எழுத்துச்சுதந்திரமும் இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. “கடவுளை விட உயர்வானது கருத்துச்சுதந்திரம்” என்றால் ஆன்மீக வாதிகளுக்கு அல்ல, மத வெறியர்களுக்கு கோபம் வந்து விடுகிறது. அரசியல்வாதிகளும் ,அதிகாரிகளும் கூட “ஊடகங்கள் என்ன எங்களை விட பெரிய ஆட்களா?” என்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 90% பேர் மாநில மொழிகளில் எழுதக் கூடியவர்கள். ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர்களுக்கு ஒரு விதமான சமூகப் பாதுகாப்பும் பணிப் பாதுகாப்புச் சூழலும் இருக்கிறது. ஆனால், மாநில மொழிகளில் எழுதுகிறவர்களுக்கு இது இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் வெளிவரும் செய்திகளை விட மாநில மொழிகளில் வெளிவரும் செய்திகளே மக்களிடம் நேரடியாகச் சென்று சேர்கின்றன. மாநில மொழி எழுத்துக்களே ஆளும் வர்க்கங்களுக்கும் அதிகார பீடங்களுக்கும் சவாலாகவும் இருக்கிறது. கவுரி லங்கேஷ் கொலை வரை இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஆனால், செய்தி தொலைக்காட்சிகள் பெருகி விட்ட இந்த காலத்திலும் அச்சு ஊடகங்களின் மவுசு இன்னும் குறையவில்லை என்பதையே நக்கீரன் கோபால் கைது எடுத்துக்காட்டுகிறது. தொலைக்காட்சி நிறுவனங்களை ஆளும் கட்சிகள் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்வது போல அச்சு ஊடகங்களை அத்தனை எளிதில் வளைக்க முடியவில்லை. அதே நேரம் சமூக வலைத்தளங்களின் பெருக்கமும் ஆளும் வர்க்கங்களுக்கு பெரும் சவாலான ஒன்றாக மாறி உள்ளது. கடைக்கோடி மனிதனின் கையில் இருக்கும் மொபைலும் அவனை ஒரு சுயமான ஊடகனாக மாற்றி விடும் போது அரசின் அடக்குமுறைகள் பொதுவெளியில் பேசப்படுகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பெரும்பாலான ஊடகங்களை கட்டுப்படுத்துகிறது. தனக்கு அரசியல் ரீதியாக பயன்படும் செய்திகளை ஊதிப்பெரிதாக்கவும், மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் அல்லது திசை திருப்பும் வகையில் செய்தி வெளியிடச் சொல்லி நிர்பந்திக்கிறது. தமிழகத்தின் பல தொலைக்காட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் போது அவர்களின் பிளக்கை அரசு கேபிளில் இருந்து பிடுங்கி விடுகிறார்கள். பின்னர் ஊடக அதிபர்கள் சென்று அரசோடு பேசி மீண்டும் பீஸ் கட்டையை போடச் சொல்கிறார்கள். இதுவே தமிழக தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு.
இந்த பின்னணியில் இருந்துதான் அதிமுக அரசுக்கு மூன்று முக்கிய நிகழ்வுகளில் கருத்துச் சுதந்திரம் தொடர்பாகவும் ஊடகச் சுதந்திரம் தொடர்பாகவும் நீதிமன்றங்கள் தலையில் கொடுத்த குட்டை பார்க்க வேண்டும்.

 

1987- விகடன் ஆசிரியர் கைதும் எம்.ஜி.ஆர் அரசும்!

29-03-1987 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான கார்டூன் ஒன்றுக்காக அப்போதைய சபாநாயகர் பி.எச். பாண்டியனால் மிரட்டப்பட்டார் ஆனந்தவிகடன் ஆசிரியர் எம். பாலசுப்பிரமணியன். அரசியவாதி பற்றி போட்ட ஜோக்கிற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் சட்டமன்றத்தைக் கூட்டு தண்டனை அறிவிப்பேன் என்றார். “இது ஒரு ஜோக் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்றார் ஆ.வி ஆசிரியர். “தனக்கு வானாளவிய அதிகாரம் உள்ளது” என பொங்கிய பி.எச். பாண்டியன் ஆனந்த விகடன் ஆசிரியருக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதித்து சிறையில் தள்ளினார். உலகம் முழுக்க கருத்துச்சுதந்திர அளவில் அதிர்வலைகளை உருவாக்கியதை அடுத்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் தானாகவே முன் வந்து கோரிக்கை வைத்து தண்டனையை ரத்து செய்தது அப்போதைய அதிமுக அரசு.
ஆனால் விடுதலையான ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். ஏழு ஆண்டுகள் நடந்த அந்த தீர்ப்பில் தமிழக அரசு ஆனந்த விகடன் ஆசிரியருக்கு ஆயிரம் ரூபாய் நட்ட ஈடு வழங்கச் சொல்லி உத்தரவிட்டது. அது வெறும் ஆயிரம் ரூபாய்தான் என்றாலும் உலக ஊடகச் சுதந்திர வரலாற்றில் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அந்த ஆயிரம் ரூபாய்க்கு ஈடாகாது.

கார்டூனிஸ்ட் பாலா கைது!

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கிய இசக்கிமுத்துவின் குடும்பமே தங்களை தீவைத்துக் கொண்டது. இது தமிழகத்தையே உலுக்கியது காரணம் நின்று எரிந்த தீயில் கருகிக் கொண்டிருவர்கள் இரு குழந்தைகளும், ஒரு பெண்ணும், ஆணும். அனைவருமே இறந்து போனார்கள். இது தமிழகத்தில் உள்ள அனைவரையுமே பாதிக்க கார்டூனிஸ்ட் பாலா அதை மையாக வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களை மையமாக வைத்து ஒரு கார்டூன் போடுகிறார். அந்த கார்டூன் போட்டு பல மாதம் கழித்து, ஒரு வேனில் வந்த மர்ம நபர்கள் பாலாவை தரதரவென இழுத்துச் சென்றார்கள். அவர்கள் போலீசார் என்பதை அவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
பாலாவை சில வாரங்களாகவது சிறையில் வைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். திருநெல்வேலி நீதிமன்றத்தில் திரண்ட வழக்கறிஞர்களும், ஊடகவியலாளர்களும் கடும் எதிர்ப்பை அவரது கைதுக்கு பதிவு செய்தார்கள். அவருக்காக ஆஜராகிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர் மீது புனையப்பட்டுள்ள வழக்கின் கோளாறுகளைச் சுட்டிக்காட்டினார். நீதிபதி போலீசார் போட்ட சட்டப்பிரிவுகளை ரத்து செய்ததோடு பலாவை நிபந்தனையே இல்லாத ஜாமீனில் விடுதலை செய்தார்.

ஒரு அரசுக்கும், போலீசுக்கும் நீதிமன்றத்தில் ஏற்படும் சொல்லொண்ணா சோகம் நிபந்தனை இல்லாத ஜாமீனில் கைது செய்யப்படுகிறவர்கள் விடுதலை ஆவதுதான். ஆனால், கார்டூனிஸ்ட் பாலாவுக்கு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை போலீஸ் ஒரு பொருட்டாக கருதவில்லை. அவரை நீதிமன்றத்திற்குள்ளேயே இழுத்துச் சென்று இன்னொரு வழக்கில் கைது செய்ய முயன்றார்கள். ஆனால், அதை வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் ஏனைய வழக்கறிஞர்களும் சாதுர்யமாக தடுத்து கருத்துரிமை காத்தார்கள்.

விகடன் ஆசிரியரைக் கைது செய்து அவமானப்பட்ட அதே அதிமுக அரசு. ஆனால் அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர் , இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நக்கீரன் கோபால்

முந்தைய இரு கைதுகளிலும் பார்க்க மிக ஆபத்தானதும், ஜனநாயகத்தை நசுக்கி நாசமாக்குவதுமான கைது முயற்ச்சிதான் நக்கீரன் கோபால் கைது. கவர்னரை அவதூறு செய்து வெளியிட்டதாக அவர் மீது புனையப்பட்ட வழக்கிற்கு 124 தேசத்துரோக வழக்கை தமிழக அரசு புனைந்தது.
இந்திய வரலாற்றில் பத்திரிகையாளர் ஒருவர் ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் 124 சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதன் முறை. ஒரு வேளை இந்த கைது நடவடிக்கையில் நீதிமன்றம் தன் கடமையையில் இருந்து வழுவியிருந்தால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஊடகச்சுதந்திரம் கேள்விக்குள்ளாகி இருக்கும். இந்த கைதை முன்மாதிரியாகக் கொண்டே இந்தியா முழுக்க நரவேட்டை நடத்தப்பட்டிருக்கும். அர்பன் நக்சல் பட்டியலில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்களும் சேர்க்கப்பட்டிருப்பார்கள். அந்த வகையில் தான் நக்கீரன் கோபால் அவர்களின் கைது நடவடிக்கை முயற்ச்சி முந்தைய கைதுகளைக் காட்டிலும் வேறு படுகிறது.

தேசத்துரோக வழக்கில் ஒரு பத்திரிகை ஆசிரியரை கைது செய்யும் துணிச்சல் மாநில அரசுக்கு வருமா என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. மாநிலத்தில் ஆள்வது பலவீனமான ஒரு அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பாஜகவின் முகவர்களைப் போல தமிழகத்தை ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசில் செல்வாக்கு மிக்க நபர்களாக பாஜக பிரமுகர்கள் இருக்கிறார்கள். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் சில பாஜக பிரமுகர்களுமே கவர்னருக்காக முதல்வரைச் சந்தித்து நக்கீரன் மீது நடவடிக்கை பற்றி பேசியிருக்கிறார்கள்.ஆக, மாநில அரசு கவர்னருக்காக இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. சில பல அரசியல் வேலைத்திட்டங்களுடன் தொழிற்படும் ஆளுநர் இந்த கைதை ஒரு அழுத்தமாக பிரயோகித்திருக்கிறார்.
ஆனால், ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்று பட்டு இந்த அடக்குமுறையை நொறுக்கியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கருத்துரிமையில் கழுத்து நெறிக்கப்படலாம்.

#NakkeeranGopal #shamelessmodi #MyCMisAThief#MyGovernorisaPervert #press_freedom

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*