என்ன ஆனது கேரளப் பெண்களுக்கு?

பெண்களுக்கு எதிர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கை கோர்த்த காங்கிரஸ்!

‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்? -சுபகுணராஜன்

கனமழை -7-ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு வணிக வளாகங்களில் 12 மணி நேரம் வரை நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். மாதவிடாய் காலங்களில் கூட முறுக்கி எடுக்கும் இடுப்பு வலியைப் பொறுத்துக் கொண்டுதான் அவர்கள் நின்றே வேலை பார்க்க வேண்டும். மயங்கி விடுகிறவர்களும் உண்டு. குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளுக்கு மத்தியில் வெளித்தெரியாமல் கசிந்து அழும் பெண்களும் உண்டு.சென்னை சரவணா ஸ்டோர் கடைக்குச் சென்றால் அன்றாடம் இப்படி இரண்டு மூன்று இளம் பெண்களையாவது நமது ஓரக்கண்ணால் பார்க்க முடியும்.

இம்மாதிரி நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களுக்கு சிறுநீரக் கல், வயிற்று வலி, வெரிகோஸ் வெய்ன் போன்ற பல நோய்ப் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். அப்படி நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களை உடனடியாக பணியில் இருந்து இரக்கமின்றி துரத்தி விடுகிறது நிறுவனங்கள்.

12 மணி நேர வேலை, மிகக்குறைவான ஊதியம் என ஆகக்கொடுமையான சுரண்டல் வடிவத்தின் அடையாளமாக வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் உள்ளார்கள். கேரளத்திலும் இதே நிலைதான். 5 நிமிடம் தாமதமாக வந்தால் கூட அரை நாள் ஊதியம் பிடித்தம். கடையில் சிறிது நேரம் ஓய்வு என்பதே கிடையாது. என்னும் நிலையில்தான் வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு அமரும் உரிமை வேண்டும் என்ற கோஷம் கேரளத்தில் முன் வைக்கப்பட்டது.

’பெண் கூட்டு’ என்ற அமைப்பும், அமைப்புசாரா தொழிலாளர் சங்கமான ‘ஆசங்காதித மேகல தொழிலாளர் யூனியன்’ அமைப்பும் அமரும் உரிமை கோரி போராட்டங்களை துவங்கினார்கள். கோழிக்கோடு, திருச்சூர் போன்ற நகரங்களில் துணிக்கடைகளில் வேலை செய்யும் பெண்கள் இருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டம் வெற்றி பெற்றது கேரள அரசு வணிக நிறுவனங்களில் பணி செய்யும் பெண்களுக்கு அமரும் உரிமையை சட்டமாக்கியது.பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்ற வசதிகளைச் செய்து கொடுக்கவும் சட்டமியற்றியது.

இது 2018-ல் சாத்தியமான உரிமை. ஆனால் கேரளப்பெண்களின் உரிமைப் போராட்டத்திற்கு நீண்ட மரபு உள்ளது. இன்று அய்யப்பன் கோவிலுக்குள் பெண் நுழைய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நாயர் சாதி தலைமை மேல்முறையீடு செய்திருக்கிறது. ஒரு நாயர் சாதிப்பெண் மீதான முதல் உரிமை நம்பூதிரிக்கே உரியது. அவர்கள் நம்பூதிரிகளின் பாலியல் அடிமைகளாக நீண்ட காலமாக வைக்கப்பட்டிருந்தனர். இதனால் தாய் யார் என்றும் தந்தை யார் என்றும் அறியாத பல குழந்தைகள் கேரளத்தில் இந்த அடிமைப்பழக்கம் ஒழியும் வரை இருந்தது. நம்பூதிரி ஒருவர் நடந்து வரும் போது மேலாடை இன்றி நிற்க வேண்டும் என்பது சமஸ்தான விதி. பின்னர் அதிலிருந்தும் போராடி மேலாடை அணியும் உரிமையை வென்றார்கள் நாயர் சாதிப்பெண்கள்.

இப்படி போராடிப் பெற்ற உரிமையின் தொடர்ச்சிதான் சபரிமலையில் வழிபடும் உரிமை. கேரளத்தில் உள்ள அனைத்து சாதிப்பெண்களும் சட்டரீதியாக போராடிப் பெற்ற பெண் வழிபாட்டு உரிமை அது. உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், சாதி வெறியர்களும், மத வெறியர்களும் பெண்களைத் திரட்டி பெருந்திரள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடக்கூடாது என பெண்களே போராடுகிறார்கள்.

குடும்பம் என்னும் நிறுவனத்தைத் தாண்டி துரத்தும் பொருளாதார நெருக்கடிகள் பெண்ணையும் உழைக்கும் படி துரத்தியும் கூட அது எந்த எல்லைகளையும் கடந்து விடவில்லை என்பதை இன்றைய கேரள அரசியல் நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
மேலாடை அணியும் உரிமைக்காக, கடைகளில் அமரும் உரிமைக்காக போராடி வென்ற கேரள பெண்கள் இன்று போராடிப் பெற்ற வழிபாட்டு உரிமைகளை சாதி, மதவெறியர்களிடம் தொலைத்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*