கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்

#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு!

இயேசுவின் உடல் களவாடப்பட்டதா? #Risen -ராஜ்தேவ்

நேற்று சின்மயி கர்நாடக சங்கீத உலகில் பெண்களிடம் வரம்பு மீறியவர்களென்று ஒரு பெயர் பட்டியல் வெளியிடத் தொடங்கியுள்ளார்.இந்த விஷயத்தில், எது வரம்பு? பாதிக்கப்பட்டது உண்மையா? அவதூறாக இருக்க முடியாதா? பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியில் தெரியாத போது, யாரைப் பற்றி வெண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிடாதா?
என்றெல்லாம் பல கேள்விகள்…
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை சுலபமாக கண்டடைய முடியாது. இதற்கெல்லாம் பதில் தெரிந்த பின்தான் நாம் வரம்பு மீறலைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மௌனமாகத்தான் இருக்கமுடியும்.

கர்நாடக இசையின் தீவிர ரசிகனாக பல ஆண்டுகளாய் இருப்பவன் என்கிற வகையில் பல கலைஞர்களுடனும், மாணவர்களுடனும் பழக வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. பரிவாதினியைத் தொடங்கிய பின் பல சபாகள், அதன் நிர்வாகிகள் , நிர்வாகிகளாக இல்லாத போதும் அதிகாரம் செலுத்தும் நிழல் மனிதர்கள் என்று பல நாவல்களுக்கு உரிய மனிதர்களுடன் பழக நேர்ந்தது.

அந்த அனுபவத்தில், பெண்களிடம் வரம்பு மீறி நடப்பதில் இந்தத் துறை எந்தத் துறைக்கும் குறைந்ததல்ல என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இசையைப் பொருத்தவரை (மற்ற துறையிலும் இது பொருந்தலாம்) கலை காட்டும் உயரத்தில் கலைஞனையும் வைத்துப் பார்ப்பது நமது பிழையே. தூரத்தில் அமர்ந்து போலி வெளிச்சத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞனைக் காணும்போது இசையின் உன்னதம் கலைஞனையும் கலையையும் இரண்டரக் காட்டும் மாயவித்தை இயற்கையானதே. ஆனால் தோற்றமயக்கங்கள் என்றைக்கு நிதர்சனங்களாயிருக்கின்றன. மேடை இறங்கயதும் அரிதாரம் கலைந்துதானே தீரவேண்டும்?

கலைஞர்கள் மட்டும்தானா இதில் அடக்கம்?

குரு ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் போது, ”சிஷ்யையை அனுப்பு, உனக்காக ஸ்பெஷல் சீரக வெந்நீர் போட்டு வைத்திருக்கிறேன்”, என்று அறைக்குள் அழைத்துப் போகும் காரியதரிசிக்கு பயந்து சங்கீதமே வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்ணை எனக்குத் தெரியும்.

“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னதான் திறமை வாய்த்தாலும், இசையை மட்டும் தொழிலாக வைத்துக் கொள்ள ஒரு கலைஞன் என்னென்னமோ சமரசங்களை செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஐந்து வருடங்களாக மட்டுமே, அதுவும் மிகச் சிறிய அளவில் கச்சேரிகள் ஒருங்கிணைத்து வரும் பரிவாதினிக்கே வாரம் தவறாமல் வாய்ப்புகள் கேட்டு எங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வந்தபடியிருக்கின்றன. அந்த அழைப்புகளில் பலநேரம் “எத்தைத் தின்றால் பித்த தெளியும்” என்கிற பதட்டமும் சேர்ந்து ஒலிக்கும்.

“வேற எதாவது பண்ணனுமா ஸார்…”, என்று ஒரு இளைஞனின் அப்பா இழுக்கும்போது தொடங்குகிறது இந்த அழுக்காட்டம். ”கச்சேரி நடத்தறது என்ன சுலபமாவா இருக்கு? கொஞ்சம் அழுக்கும் சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு”, என்றுதான் பின்னால் நிறைய அழுக்கையும் சேர்த்துக்கொள்ளும் அனைவரும் தொடங்குகின்றனர். எது கொஞ்சம், எது நிறையவென யார் வரையறுப்பது?

அவரவருக்குத் தக்கபடிதான்.

இந்த நிலையில் அறவுணர்வை மட்டும் நம்பி எல்லோரையும் பாதுகாத்துவிடலாம் என்று நம்புவது அப்பாவித்தனத்தின் உச்சம். என்னதான் பிரசாரம் செய்தாலும், ஹெல்மெட் போடாவிட்டால் நூறு ரூபாய் அபராதம் என்கிற விதியைக் கண்டு பயந்து தலைக்கவசம் அணிபவர்கள்தான் அதிகம். அந்த வகையில், எல்லை மீறினால் தன் பெயர் வெளியிடப்படும் என்கிற பயம் இன்றைய அவசியம் என்றே நினைக்கிறேன்.

இதனால் சிலர் மேல் அபாண்டமாய் பழிசுமத்தக்கூடும்தான். சூழலின் பெருநலன் கருதி இந்த விஷயத்தை சிறு சங்கடமாய் கடக்க வேண்டியதுதான் சரியென்றுபடுகிறது.

வெளியிடப்பட்டிருக்கும் பெயர்களும், அதன் நம்பகத்தன்மையும், அதையொட்டிக் கிடைக்கும் வம்புகளும் என்று விவாதங்களின் மையம் செல்லாமல், சங்கீதத்துறையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு நேர்மையாய் நமக்கு நாமே பதிலளித்துக் கொள்ளும் தருணமாய் இதை மாற்றிக்கொள்வதுதான் நாம் இப்போது செய்யக்கூடிய குறைந்தபட்ச பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும்.

இதை நான் யாருக்கும் சொல்லவில்லை. எனக்கு நானே ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்…

#metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து

நன்றி

வேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி!!

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*