“நீட் அநீதி” -மாநில மொழியுரிமை பறிபோகும்-ஸ்டாலின்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்தியா மீது பொருளாதாரத்தடை: என்ன செய்யப்போகிறார் மோடி?

“காங்கிரசும் எங்களை அழிக்கப்பார்க்கிறது” -மாயாவதி

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் “நீட் தேர்வு” எழுதலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பதில் பெரும் குளறுபடிகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி, ஆர்வத்துடன் மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையையும், மாநில மொழிகளின் முக்கியத்துவத்தையும் படிப்படியாகக் குறைத்து விடும் சதித்திட்ட மனப்பான்மையுடன் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

“நீட்” தேர்வினை தமிழில் எழுதியோர் எண்ணிக்கை மட்டுமின்றி, மற்ற மாநில மொழிகளில் எழுதியோர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து வரும் மாநில மொழிகளுக்கு எதிரான அபாயகரமான நிலை தொடருகிறது. ஏற்கனவே, 2018 ஆம் ஆண்டிற்கான நீட் கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் 49 பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

அதனால் பல மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்கள் நிகழ்ந்து சோகத்தைப் பரவவிட்டது. கேள்வித்தாள் குளறுபடி தொடர்பாக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திரு டி.கே ரங்கராஜன் அவர்கள், பொது நல வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் சி.டி. செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆனால், அந்த தீர்ப்பிற்கும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்று, தமிழக மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் அளித்த நீதியையும் மறுத்து விட்டது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு. இதுபோன்ற கேள்வித்தாள் மொழி பெயர்ப்பு குழப்பங்களால், தங்களது மாநில மொழியில் நீட் தேர்வு எழுதவே மாணவர்கள் தயங்கி ஒதுங்கும் சூழ்நிலையும், மாநில மொழிகளில் எழுதினால் மருத்துவர் கனவு பறிபோகும் என்ற பதற்றமும் மாணவ – மாணவியர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் “மருத்துவக் கனவை” நீட் தேர்வின் மூலம் சிதைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு, அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றிருக்கும் மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதை ஊக்குவித்திடவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யாமல், ஒருதலைப்பட்சமான அணுகுமுறையுடன் வஞ்சித்ததன் விளைவாக, மாநில மொழிகளில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்து “மாயமாகி” வருகிறது.

உதாரணமாக “நீட் – 2017” என்ற 2017-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தேர்வு எழுதியவர்கள் 90.75 சதவீதம் பேர். அதே போல் “நீட் – 2018” எனப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தேர்வு எழுதியோர் 91.02 சதவீதம். ஆனால் தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 9.25 சதவீதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு 8.98 சதவீதமாகக் குறைந்து விட்டது.

மத்திய பா.ஜ.க. அரசு மாநில மொழிகளிடம் காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையால், நீட் தேர்வினை தங்கள் மாநில மொழியில் மாணவர்களால் எழுத முடியவில்லை; ஏற்படுத்தப்பட்டு வரும் இடையூறுகளால் எழுதவும் ஆர்வமாக இல்லை. இந்த நிலை நீடித்தால் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே நீட் தேர்வில் நிலையான இடத்தைப்பெற்று, மாநில மொழிகள் எல்லாம் அடியோடு புறக்கணிக்கப்படும் – மாநில மொழிகளுக்குள்ள உரிமை பறிக்கப்படும் மிக ஆபத்தான போக்கு உருவாகி விடும்.

அது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்து விடும். ஆகவே, அனைத்து வகையிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு உதவிகரமாக இல்லாத இந்த “நீட் தேர்வை” ரத்து செய்வதே மாணவர்களுக்குச் சம உரிமை வழங்கவும், சமமான வாய்ப்பு ஏற்படவும், சமத்துவம் மிக்க சமூக நீதி தழைத்திடவும் ஒரே வழி என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட் தேர்வுக்கு” விலக்கு கேட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாவிற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய பா.ஜ.க. அரசு உடனே பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுவதற்குள் இந்த மசோதாவிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழகத்தில் ஏற்கனவே இருந்த ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற சூழலை உருவாக்க அ.தி.மு.க அரசும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

#நீட்_அநீதி #அனிதா_தற்கொலை #திமுகதலைவர்_ஸ்டாலின்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*