பன்வாரிலால் புரோகித் ஓராண்டு நிறைவு: சாதனைகள் என்ன?

நக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா?

அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்? #Nakeeran_Leaks

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறார். கடந்த 2017-அக்டோபர் 6-ஆம் தேதி தமிழக கவர்னராக பதவியேற்ற பன்வாரிலால் புரோகித்தின் பணிகளை வெளிப்படைத் தன்மையுடன் அலசுவதே தமிழக நலன்களுக்கு நலன் பயக்கும். தான் ஊழலுக்கு எதிரானவன், அசுத்தத்திற்கு எதிரானவன் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முழங்கும் பன்வாரிலால் புரோகித் இந்த ஒராண்டில் அப்படி என்னதான் சாதித்தார் என்ற கேள்வி மிக முக்கியமானது.

அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்படுவதற்கு பிரதான காரணமாக கவர்னர் மாளிகை குறிப்பிட்டது. கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்பதுதான். எனவே, இந்த ஓராண்டில் கவர்னர் செய்த பணிகள் என்ன என்பதை தமிழக அரசும், கவர்னர் மாளிகையுமே திறனாய்வு செய்து பார்க்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்ததும் தற்காலிக கவர்னராக தமிழகம் வந்தவர்தான் வித்யாசாகர் ராவ். ஆனால், அவரது பதவிக்காலத்தில்தான் சட்டமன்ற ஜனநாயகம் குழு தோண்டி புதைக்கப்பட்டதாக விமர்சனம் உண்டு. மிகப்பெரிய விமர்சனங்களோடு தமிழகத்தில் இருந்து வித்யாசாகர் ராவ்விடை பெற்ற பின்னர் தற்காலிக ஆளுநராக வந்தவர்தான் பன்வாரிலால் புரோகித்.

பாஜக சொற்படி கேட்டு ஆடும் ஒரு பொம்மை அரசை தமிழகத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு அதை கையாள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்தான் பன்வாரி லால் புரோகித்.ஒரு ஆளுநர் என்பவருக்கே உரிய பிரத்தியேகமான அதிகாரங்களுக்கு அப்பால் ஒரு அரசியல் வேலைத்திட்டத்தோடு பன்வாரிலால் புரோகித் பதவியில் பயணிக்கிறார்.

வழக்கமாக ஆளுநர் என்கிறவர்கள் மாநில அரசு நீட்டும் கோப்புகளில் கையெழுத்து போட்டு விட்டு ரப்பர் ஸ்டாம்புகளாக இருக்கிறவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால், பன்வாரிலால் அப்படி இருக்க மாட்டார் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று இந்த ஓராண்டில் அப்படி தமிழக மக்களின் எண்ணத்தை ஈடேற்றியிருக்கிறாரா ஆளுநர்?

ஸ்வச் பாரத்

பிரதமர் மோடி துவங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டம் இந்தியா முழுக்க பெரிதும் கவனிக்கப்பட்டது. அது மக்களிடம் எடுபட்டதோ இல்லையோ ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நியமிக்கப்பட்ட அத்தனை ஆளுநர்களுமே தூய்மை இந்தியா திட்டத்தை பிடித்துக் கொண்டார்கள். பொதுவாக மக்களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அஞ்சும் அதிகாரிகள் ஊழலுக்கு எதிராகவும், தூய்மை பேசுவதும் நீண்டகால அதிகார வர்க்க அரசியல். அதையே தமிழக ஆளுநரும் செய்தார். ஆனால், அவர் தமிழக அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. ஆளும் கட்சியான அதிமுகவோ ஆளுநர் தலையீட்டை வரவேற்றது. ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கருப்புக் கொடி காட்டியது. ஆளுநரின் தூய்மைப்பணிகளை விட கருப்புக் கொடி காட்டி செய்தியை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது திமுக.
இதே காலக்கட்டத்தில் சுற்றுச் சூழல் தொடர்பாக எத்தனையோ கோரிக்கைகளை மக்கள் முன் வைத்தார்கள். நெடுவாசல், கதிராமங்கலம். காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன், முக்கியமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள். இதில் எந்த ஒன்றையும் கண்டு கொள்ளாத கவர்னர் குப்பைகளை சுத்தம் செய்து தூய்மை பேண வேண்டும் என மக்களுக்கு போதித்துக் கொண்டிருந்தார். அப்படி அவர் போதிக்கும் இதே காலத்தில் தான் பெரும் கார்ப்பரேட்டுகளால் மக்களின் வாழ்க்கை அசுத்தமாவதை அவர் கண்டு கொள்ளவில்லை.

#

ஓக்கி புயல் மரணங்கள்

2017 நவம்பரில் ஓக்கி புயல் வீசிய போது பல நூறு மீனவர்கள் தங்களை காப்பாற்றக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்கள். தமிழக அரசு செயலற்று இருந்தது. மீட்கப்படாமல் கடலில் மிதந்தே 194 மீனவர்கள் இறந்தார்கள். ஒரு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இதை வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

#

மாணவிகளை பாலியல் அடிமைகளாக்கிய புரோக்கர்கள்

தமிழக பல்கலைக்கழகங்களின் தலைவர் ஆளுநர்தான். அப்படி அவர் தலைவராக இருக்கும் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளை உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்யும் பாலியல் அடிமைகளாக மாற்றும் புரோக்கர் என்று பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். ஆளுநரின் பெயரில் அதில் அடிபட அவசரமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தார். தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் விசாரணையை ராஜபக்சேவுக்குப் பிறகு கையாண்டவர் என்ற பெருமை பன்வாரிலால் புரோகித்திற்கு உண்டு.ஆனால் இலங்கை அரசின் விசாரணை அறிக்கை பொது மக்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் தனக்குத் தானே விசாரித்துக் கொண்ட சந்தானம் அறிக்கை இன்னும் மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில்தான் இது பற்றி எழுதிய நக்கீரன் ஆசிரியர் கோபாலை தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் படி கவர்னர் மாளிகை புகார் கொடுத்து கைதும் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் நிர்மலா தேவி கவர்னர் மீதும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு எந்த வெளிப்படையான பதில்களும் இல்லை.

#

குட்கா முதல் நெடுஞ்சாலை டெண்டர் வரை ஊழல்

தமிழக அரசு ஊழலில் மிதக்கிறது.இந்தியாவிலேயே அதிக ஊழல் நடக்கும் மாநிலம் தமிழகம். இதைச் சொன்னது பாஜக தலைவர் அமித்ஷா. கவர்னரும் கூட இது போன்ற எண்ணம் தமிழக அரசு மீது இருக்கிறது என்பதால் தன்னை நேர்மையாளராக காட்டிக் கொண்டார். அவர் காலத்தில்தான் குட்கா ஊழல் பேசப்பட்டது. அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டது. நெடுஞ்சாலை டெண்டரில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று நடவடிக்கை கோரி திமுக கவர்னரிடம் புகார் கூறியது.ஆனால், ஊழலில் முழ்கிக் கிடக்கும் இந்த அரசை பாதுகாக்கும் அரணாக ஆளுநர் இருக்கிறாரே தவிற ஊழலுக்கு எதிராக இந்த அரசுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலை வேடிக்கை பார்க்கிறார். ஊழலை அனுமதிக்கிறார் காரணம் தனியாக ஒரு அரசியல் திட்டத்தோடு செயல்படும் ஆளுநர் தன் அரசியல் திட்டங்களை செயல்படுத்த ஆளும் கட்சியை மிரட்டியும், அதட்டியும் வைக்க ஆளும் கட்சியினர் அதிக அளவில் ஊழலில் ஈடுபட வேண்டும் என கவர்னர் எதிர்பார்க்கிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் நிலவுகிறது.

#

துணைவேந்தர் நியமனங்கள்

துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்திருக்கிறது என்றார். ஊழல் செய்தவர்களை வெளிப்படுத்துங்கள் என்ற கோரிக்கை எழுந்த போது இல்லை இல்லை யார் மீதும் புகார் கூறவில்லை. பேசிக் கொண்டார்கள் அதை வைத்து ஆளுநர் அப்படி பேசுகிறார் என்றதோடு நிற்காமல் தான் நியமித்த 9 துணைவேந்தர் பதவிகளும் நேர்மையானவை வெளிப்படைத் தன்மை உள்ளவை என்றார். அப்படி என்றால் அதற்கு முந்தைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமித்த நியமனங்களில்தான் ஊழல் நடந்திருக்கிறது என்று மறைமுகமாகச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 58 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்ரமித்து நீதிமன்றமும் நிலத்தை அரசு கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்த பின்னர். வருவார் ஆணையர் அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்து விட்டார். அந்த நோட்டீஸை புறங்கையால் குப்பையில் வீசி விட்டது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். அரசு நிலத்தை திருடிய சாஸ்த்ரா பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

ஒரு மாநில அரசையே துச்சமென கருதும் அளவுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. அவர்களின் பின்னால் அதிகாரமிக்க சக்திகள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையோடும் இருப்பதாக கூறும் ஆளுநர் அந்த இடத்தை அரசுக்கு மீட்டுக் கொடுத்திருக்க வேண்டாமா?

ஆளுநரின் இந்த ஓராண்டில் இப்படி அவர் செய்த செய்து கொண்டிருக்கும் பணிகளை பட்டியலிடலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த ஸ்ரீ சனாதனா தர்மா வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில், கலந்து கொண்ட ஆளுநர் “தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, பொது வாழ்க்கையிலும், பூரண வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும்” என மக்களைக் கேட்டுக்கொண்டார். அத்தோடு விடாமல் “அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்பது என்பது மனித தன்மை என்றும், ஆனால், நம்மிடையே அத்தகைய மனித தன்மை குறைந்து வருவதாக” வருத்தப்பட்டார்.
தமிழகத்தில் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது தட்டிக் கேட்கும் மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தட்டிக் கேட்கும் இடத்தில் இருப்பதாக கருதப்படும் ஆளுநர் முதலில் அநியாயம் செய்யும் இந்த ஆட்சியாளர்களைத் தட்டிக் கேட்க வேண்டும். அல்லது காலம் உங்களையும் விடுதலை செய்யாது.

இங்கு நடக்கும் ஊழல் உள்ளிட்ட அத்தனை அக்கிரங்களுக்கும் நீங்களும் நேரடி சாட்சி என்பதை வரலாறு குறித்துக் கொள்ளும்.

#Banwarila_ Purohit #பன்வாரிலால்_புரோகித் #தமிழக_ஆளுநர்_ஓராண்டு_நிறைவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*