‘பரியேறும் பெருமாள்’ -இந்த உண்மைதான் தமிழ்ச் சமூகத்தின் முகமும்-கே. என். சிவராமன்

போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் விமான ஊழல் – சிவசேனா விமர்சனம்!

சர்வாதிகார சபாநாயகர் தனபால்:கருணாஸை தகுதி நீக்கம் செய்ய முடிவு!

ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு ஆளும் அதிமுக ஆதரவு!

1. 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘அட்ட கத்தி’ படத்தை தயாரித்தது ‘திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை சேர்ந்த சி.வி.குமார்தான். என்றாலும் வெங்கட்பிரபு சொல்லி அப்படத்தைப் பார்த்த ‘ஸ்டூடியோ க்ரின்’ நிறுவனத்தை சேர்ந்த ஞானவேல் ராஜா, ‘அட்ட கத்தி’யை தமிழகம் முழுக்க விநியோகம் செய்தார்.

‘அட்ட கத்தி’யை எழுதி இயக்கிய பா.இரஞ்சித், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்ட ஞானவேல் ராஜா, கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்.

2. 2014ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ்’ படத்தை எழுதி, இயக்கியவர் பா.இரஞ்சித். தயாரித்து விநியோகித்தவர் ஞானவேல்ராஜா.

3. 2016ம் ஆண்டு வெளியான ‘கபாலி’யை தயாரித்தது கலைப்புலி தாணு. எழுதி, இயக்கியவர் பா.இரஞ்சித். இப்பட வாய்ப்பு ரஜினியின் மகள் சவுந்தர்யா வழியாக தனக்குக் கிடைத்ததாக இரஞ்சித்தே பலப் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சவுந்தர்யா, அம்மா வழியில் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்.

4. 2018ம் ஆண்டு வெளியான ‘காலா’வை தயாரித்தவர் தனுஷ். ஃபைனான்ஸ் செய்தது ‘லைக்கா’. இப்படத்தை எழுதி, இயக்கியவர் பா.இரஞ்சித்.

5. 2018ம் ஆண்டு பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்துக்கு ஃபைனான்ஸ் செய்திருப்பது ‘லைக்கா’ நிறுவனம்.

இந்தப் பட்டியலை இங்கு நினைவுப்படுத்த காரணம், பா.இரஞ்சித்தின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்கள் ஒடுக்கும் சமூகமாக அறியப்படுவதில் பிறந்தவர்கள்தான் என்பதைக் குறிப்பிடவே.

இந்த உண்மைதான் தமிழ்ச் சமூகத்தின் முகமும்.

மறுக்கவே முடியாது. திரையுலகில் – அதுவும் தமிழ்ச் சினிமாவில் – சாதி ஆதிக்கம் பெருமளவு இருக்கின்றன. ஜாதகம் பார்த்து பட வாய்ப்புத் தருபவர்களின் எண்ணிக்கையும் வலுவும் அதிகம்.

பொது சமூகம் எப்படி இயங்குகிறதோ அப்படித்தான் திரையுலகமும் இயங்குகிறது. சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் வேற்றுக்கிரகத்தை சேர்ந்தவர்களா என்ன… எனவே திரைத்துறையிலும் சாதி வெறியும் தீண்டாமையும் கண்ணுக்குத் தெரியாமல் ஆட்சி செலுத்துகின்றன; ஒடுக்குகின்றன.

என்றாலும் சுய சாதி விமர்சனத்துடனும் சமூகப் பார்வையுடனும் இயங்கும் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்களும், பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்களும் இத்துறையில் இயங்கவே செய்கிறார்கள்.

போலவே ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதாலேயே நடிக்கவும், பா.இரஞ்சித் போல் படம் இயக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் இன்னமும் கோடம்பாகத்தில் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பார்ப்பன சமூகத்தை சேர்ந்த – சுயசாதி விமர்சனம் கொண்டவர்களை நட்பு சக்தியாக ஏற்கும்போதே மாற்றங்கள் நிகழும்.

பொது சமூகத்தில் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கின்றன; நிகழ்கின்றன; நிகழவும் போகின்றன.

இதற்கு உதாரணமாக பாப்பாபட்டி நிகழ்வைக் குறிப்பிடலாம்.

பாப்பாபட்டி பஞ்சாயத்து தேர்தலில் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையை அனைவரும் அறிவோம். அறியாதது அதன் பின் அங்கு நிகழ்ந்தவை.

பலத்தரப்பட்ட முயற்சிகளுக்குப் பின் தலித், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட… உயர் ஜாதியினர் அவரை தோளில் சுமந்து கொண்டாடினர்.

https://www.frontline.in/…/fl…/stories/20061103003813200.htm

திரையுலக எடுத்துக்காட்டு பா.இரஞ்சித்.

இவரது திறமையைப் போற்றி பட வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் முன்பே குறிப்பிட்டபடி சுயசாதியை சேர்ந்தவர்கள் அல்ல. சுயசாதி விமர்சனம் கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த உண்மைதான் தமிழ்ச் சமூகத்தின் முகமும்.

இயற்கை உட்பட புவியிலுள்ள அனைத்தும் எல்லா மக்களுக்கும் உரியவை. யாரும் யாருக்கும் எதையும் ‘கொடுக்க’ வேண்டியதில்லை. எல்லோருக்கும் இருக்கும் ‘உரிமை’யை எல்லா தருணங்களிலும் நிலைநாட்டுவதே அவசியம்.

இதற்கு மாறாக சாதி வெறிப் பிடித்து திரிபவர்களுக்கு எதிராக பொது சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் கைகோர்ப்பதே முக்கியமே தவிர –

சாதி ரீதியாக அணி திரள்வதல்ல.

ஒரு சாதி வெறிக்குத் தீர்வு இன்னொரு சாதி வெறியாக இருக்க முடியாது.

இத்தனை வருடங்களாக தமிழ்த் திரையுலகில் சாதி ரீதியாக கலைஞர்கள் அணிவகுத்து நிற்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இனியும் அப்படி நிகழாமல் பார்ப்பதே எதிர்கால சமூகத்துக்கு நல்லது.

ஏனெனில் சினிமா / திரையரங்கம் என்ற ஊடகம்தான் தமிழகத்தில் எல்லா சாதியை சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து ஒரு கலையை ரசிக்கும் நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது.

அதற்கு முன் சமூகத்துக்கு ஒரு கலை… அந்தக் கலையை குறிப்பிட்ட அந்த சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே ரசிப்பது… என்ற போக்குதான் நிலவியது.

இதை மனதில் கொள்வது நல்லது. இல்லையெனில் சாதி சங்கம் போல் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே குறிப்பிட்ட படத்தை திரையரங்குக்கு சென்று காணும் நிலை ஏற்படும். தீண்டாமை பண்பு மாற்றம் அடைந்திருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*