‘பரியேறும் பெருமாள்’ -பரியனும் ஜோ வும் யார்? -சுபகுணராஜன்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்தியா மீது பொருளாதாரத்தடை: என்ன செய்யப்போகிறார் மோடி?

“காங்கிரசும் எங்களை அழிக்கப்பார்க்கிறது” -மாயாவதி

சாதிய வன்கொடுமை அரசியல் திரை மொழிதலில் ஒரு நுட்பமான ‘குரலை’ பதிவு செய்திருக்கும் திரைப்படம் . ஆதிக்கசாதி திரை மொழிதல்களை வன்மையாக அதேதளத்தில் எதிர்கொண்ட படங்களிலிருந்து ( அவற்றின் நியாயங்கள் ஒரு போதும் மறுக்க முடியாதவை என்பது வேறு ) இந்தப் படம் பெரிய தாவலை சாதித்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதையும் காலத்தால் பின்நகர்ந்து சொல்ல முனைந்திருப்பது கவனத்திற்குரியது.

இதற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் தேர்வு செய்திருக்கும் பாத்திரப் படைப்புகள் குறியீட்டுத் தன்மை கொண்டவையாக உள்ளன என்பதே என் பார்வை.

பரியன் நூற்றாண்டுகளின் ஆதிக்க சாதிகளின் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ‘தலித்’ உடல் . அவன் மீது மனரீதியான, உடல்ரீதியான அத்தனை வன்முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அவனோவெனில் அதனை எதிர்வன்முறையால் சாய்த்துவிட முடியுமென்பதில் முனைப்பற்றவனாய் இருக்கின்றான். வன்முறையின் வலியைத் தாங்க முடியாத நிலையை சில வேளைகளில் அடைந்து பதில் தாக்குதலை நிகழ்த்தும் போதும், அது தற்பாதுகாப்பு தொடர்பில் மட்டுமே . காலங் காலமாக கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளின் வலியோடு ‘ உரையாட ‘ ‘ அறிவுறுத்த ‘ ‘ நேர்படுத்த ‘ விழைகிறான் .

கிழவன் , சாதிவன்முறையின் அசல் வடிவம். அவன் எந்தவிதமான நேர் தொடர்புமற்று சாதி வெறியாட்டக் கொலைகளைச் செய்பவனாக இருக்கிறான் . அதாவது ‘ ஆதிக்க , ஆணவ சாதிகளின் ‘ ஒட்டு மொத்த உரு அவன். சாதீய வன்முறையின் குறியீட்டு வடிவம் . வன்செயல்களை அவன் எந்தவிதமான ‘ உணர்ச்சித் தொடர்பற்று ‘ இயல்பு போல் அல்லது அவனது ‘ கர்மவினை ‘ போல் செய்கிறான் என்பது மிகுந்த கவனத்திற்குரியது . ‘ கர்ம வினைகளிற்கான ‘ முடிவு சுயமாக அழிந்து போவதுதான் . அந்த முடிவின் குறியீட்டுத் தன்மை முன் வைக்கும் கருத்தமைவு ஆழமானது .

ஜோ என்ற பெண்ணுரு ‘ சாதியமற்ற இருப்பின் பேரெழில் ‘ . அவள் மட்டுமல்ல அவனது தேவதைகள் எல்லோரும் அப்படியானவர்களே. சாதியக் கறை பீடிக்காத அன்பு மட்டுமே அவ்வளவு கள்ளமின்மையின் மெய்யுருவாக கூடும்.

ஆனந்த் , சாதியம் கடந்த நட்பு , அன்பின் ஆண் தோழமை உரு . ஜோ வின் அப்பா ‘ உரையாடலை ‘ நோக்கி நகர ஆலோசிக்கும் /எத்தனிக்கும் இடைச்சாதிகளின் சாத்தியமான வடிவம் . ஆம் , ‘உரையாடல் ‘ தொடர்வதற்கான சமீக்கைகள் தெரிகின்றன.

நீலமான கருப்பி மானுடத்தின் முகத்தை நக்கி உயிரூட்டுகிறாள். பால் டீ, கருப்பு டீ மிச்சம் கொண்ட கண்ணாடிகளுக்கு நடுவே ‘ மலரொன்று ‘ அமர்ந்திருக்கிறது .

உரையாடல் தொடர்வது சமூக இருப்பின் காலாதீதமான அழுக்கை நீக்கும்.

வாழ்த்துக்கள் தோழர்கள் மாரி செல்வராஜ் மற்றும் பா . ரஞ்சித் ஆகியோருக்கு . உங்கள் ‘அழைப்பு ‘ திசையெங்கும் பரவட்டும்.

#பரியேறும்பெருமாள் #மாரிசெல்வராஜ் #நீலம் #பரியன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*