திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம்?

திமுகவோடு தொடர்ந்து பயணித்து வரும் திருமாவளவன் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதை திமுக உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைகின்றன என்பது தொடர்பான எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டுகள் என தொடர்ந்து பல தரப்பினரும் திமுகவோடு தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசத்துவங்கியிருக்கும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி வருகிறது. ஆனால், இது தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு எதனையும் அறிவிக்கவில்லை. மக்கள் நலக்கூட்டணியை அமைத்து அது திமுகவுக்கு ஒரு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் மீண்டும் திமுகவுடன் இணைய விரும்புகின்றன.
எதிர்க்கட்சிகள் என்ற அளவில் திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டங்களில் இந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தேர்தல் கூட்டணி என்ற வடிவத்தை அது எட்டவில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் திமுக யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரியவரும் நிலையில்,
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் இந்த இரு தேர்தல்களிலுமே அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது திமுக.கடந்த காலங்களில் கலைஞர் தொகுதி பங்கீட்டின் பெயரால் காங்கிரஸ் கட்சியின் சக்தியை மீறி தொகுதிகளை அள்ளிக் கொடுத்து அவர்களும் வெல்லாமல் திமுக கூட்டணிக்கும் பயனில்லாமல் தோல்வியைத் தழுவியது போல இம்முறை நடந்து விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. எனவே வெல்லும் தொகுதிகளை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கும்.எண்ணிக்கைக்காக கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக வழங்காது என்ற முடிவை திமுக எடுத்திருக்கிறது.
இந்நிலையில்தான் வேலூர் பொய்கையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “ திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்குத்தான் உண்டு” என்றார்.
திருமாவளவன் மீது திமுகவுக்கு எப்போதுமே மரியாதையும் அன்பும் உண்டு. கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக பெரும் கவனத்துடன் இந்த தேர்தலை அணுகியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உரிய இடங்களை திமுக தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒதுக்கலாம் என்கிறார்கள் திமுகவினர்.

#thirumavalavan #dmk #bjp #rajinikanth #Dmk_Viduthalai_siruthaigal

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*