தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் ஸ்டாலின்!

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கியத்துவம் பெறுகிறார். ஆளும் பாஜக அடுத்த நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுத்த வட மாநிலங்கள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக்கடன் தள்ளுபடி போன்ற விஷயங்களில் வட மாநில விவசாயிகள் பாஜக மீது கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கமும் பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும்.

இன்னொரு பக்கம் விஜய்மல்லையா, நீரவ்மோடி, முகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்கள் பொதுத்துறை வங்கிகளை சூறையாடி விட்டு நாட்டை விட்டு தப்பியோடியது மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இவைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பாஜக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாமல் தனித்தனியாக போட்டியிடுவதால் பாஜக எளிதாக வென்று வந்தது. இப்போது மாநிலங்களில் செல்வாக்காக உள்ள பெரும்பலான கட்சிகள் தனித்து போட்டியிடுவதை தவிர்த்து வருகிறது.

உதாரணத்திற்கு அகிலேஷ்யாதவும், மாயாவதியும் இணைந்து எதிர்கொண்ட தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால், இதே அகிலேஷ் யாதவும், மாயாவதியும் காங்கிரஸ் கட்சியுடன் இணைய தயங்குகிறார்கள். என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் முழுமையான வெற்றியடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. அது போல, இடதுசாரிகள் பாஜகவையும், காங்கிரஸ் கட்சியையும் ஒரே அளவில் வைத்து பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மம்தா பானர்ஜியும் காங்கிரஸ் கூட்டணியோடு இணையவில்லை.
அதனால், பாஜகவின் கவனம் தெற்கில் குவிந்திருக்கும் இதே காலக்கட்டத்தில் ராகுல்காந்தியும் தென் மாநிலங்களை குறி வைக்கிறார். ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், கேரளம் இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் தனித்தும் கூட்டணி அமைத்தும் பெரும்பான்மை தொகுதிகளில் வென்றால் பாஜகவை அப்புறப்படுத்தி விட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என ராகுல் நம்புகிறார்.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய தெலுங்குதேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ராகுல்காந்தியை சந்தித்திருக்கிறார். இந்திய அரசியலில் திருப்புமுனையான சந்திப்பு என அரசியல் பார்வையாளர்களால் இது பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஆகியோரைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு ராகுல்காந்தியையும் சந்தித்திருக்கிறார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபுநாயுடு:-

“பாஜகவை வீழ்த்துவதே எங்களின் நோக்கம். அதற்கான சந்திப்பாகத்தான் இது நடந்தது. பாஜகவுக்கு எதிராக கட்சிகளை இணைத்து பொது தளத்தை உருவாக்க இருக்கிறோம். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் இணைய வேண்டும், எங்களுடன் இணையுமாறு ஸ்டாலினிடமும் வலியுறுத்த உள்ளேன்” என்றார் சந்திரபாபு நாயுடு.

இதற்கு நேற்று பதிலளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் பச்சைக் கம்பளம் விரித்திருக்கிறார். அவர் தனது முகநூல் பதிவில்:-

“காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு அவர்கள் சந்தித்துப் பேசியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது.

“தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்” என்று சந்திரபாபு நாயுடு சொன்னதை நான் வழிமொழிகிறேன். மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும்! “என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.

ராகுல் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு அரசியல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருகும் நிலையில் திமுகவை இந்த கூட்டணிக்குள் கொண்டு வர நினைக்கிறார் சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ்- திமுக கூட்டணியைப் பொருத்தவரை கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய தகப்பன் போல அரசியலில் நடந்து கொண்டார். அதனால் திமுக சந்தித்த துயரங்களும் இழப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், ஸ்பெக்ட்ரம் என்ற அபாண்ட பழி திமுக மீது விழுந்த போது அதை அமைதியாக வேடிக்கை பார்த்த காங்கிரஸ் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல திமுகவை தனித்து கைவிட்டது. இவைகள் ஒரு பக்கம் என்றாலும். இன்னொரு பக்கம் தமிழகத்தில் காங்கிரஸ் தன் சக்தியை மீறி தொகுதிகளை வாங்கி தானும் தோற்று திமுகவையும் தோற்கடிக்க வைக்கும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பிரதான காரணம் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அள்ளிக் கொடுத்த தொகுதிகள் திமுக வெற்றி பெற வேண்டிய பல தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு தோற்றது. குமரி மாவட்ட தொகுதிகளில் திமுக துணையோடு காங்கிரஸ் வென்றது. எனவே திமுக- காங்கிரஸ் கூட்டணி தேவைதான் ஆனால், அது நீடித்திருக்கவும், பரஸ்பரம் நம்பிக்கையோடு அரசியலில் பயணிக்கவும் தொகுதி பங்கீடு முக்கியம்.

தன் பலமறிந்து காங்கிரஸ் தொகுதிகளைக் கேட்டு அதில் தானும் வென்று திமுகவின் வெற்றிக்கும் துணை நிற்க வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டால் கடின உழைப்பை திமுக கொடுத்தால் அத்தனை தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்பதே கள நிலவரம்.
அப்படி நிலவும் அரசியல் சூழலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள நல்ல முகமும் அடையாளமும் தேசிய அரசியலை அவர் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கிறது. இன்னொரு பக்கம் பொதுவாக தேசிய அளவில் அரசியல் முற்சிகளை முன்னெடுக்கும் லாலுபிரசாத் யாதவை பாஜக அரசி முடக்கி விட்டது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதியும் இல்லை.

கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்கு லட்சோபலட்சம் இளைஞர்கள் திரண்ட நிகழ்வு இந்தியாவுக்கு புதிய செய்தியை அறிவித்தது. இன்னமும் தமிழர்களின் ரத்தத்தோடு கலந்த கட்சியாக திமுக இருக்கிறது.

மாணவி சோஃபியா கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் “பாசிச பாஜக ஒழிக” என்று ஸ்டாலின் சொன்னது சோஃபியாவுக்கு மட்டுமல்ல அன்று தமிழகத்தில் ஒலித்த  ஜனநாயகக் குரல்களை வலுப்படுத்தியது. காட்டம் காட்ட  வேண்டிய இடத்தில் காட்டமும்,  விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்தும் செல்கிறார் ஸ்டாலின்.

அது போல, ஸ்டாலினின் நிதானமான அணுகுமுறையும் தேசிய தலைவர்களை கவர்ந்திருக்க தமிழகம், புதுச்சேரியின் நாற்பது தொகுதிகளையும் வெல்வதோடு அதை தேசிய அளவில் மாற்றத்திற்கு பயன்படுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஸ்டாலின் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள்.

#DMK_National_Politics #mk_stalin #Anna_arivalayam #DMK_CONGRESS_Alliance

மோடியை மன்னித்து விடக்கூடாது -யஷ்வந்த் சின்ஹா!

ராமர்கோவில் – உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்!

எழுவர் விடுதலை முடிவெடுக்காமல் தள்ளிப்போடும் ஆளுநர்?

நிர்மலா தேவி வாக்குமூலம் -மறைக்கப்பட்ட உண்மைகள்?

#ஸ்டேட்டுக்கே_ஒப்பி_யூனிட்டி நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் ராமர்கோவிலை முன்னிறுத்தும் பாஜக?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*