ஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன?

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது!

வளர்ச்சி. வளர்ச்சியின் நாயகன். விகாஷ் புருஷ்… – இப்படித்தான் நரேந்திர மோடி என்கிற பிம்பம் ஊதிப்பெருக்கப்பட்டு வட, மத்திய இந்திய மாநிலங்களில் வெற்றிகரமாக விற்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக கட்சி சாராத மக்கள்கூட மோடி மந்திரத்துக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள். மோடி வந்தால் வாழ்க்கை முன்னேறும் என்று நம்பினார்கள்.

இன்று உடைத்தெறியப்பட்டிருப்பது அந்த பிம்பம்தான். அநேகமாக 2019 தேர்தலில் பாஜகவின் மிகப்பெரிய ‘சுமையாக’ மோடி ஆகிவிடுவார்.உண்மையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம். சத்தீஸ்கரில் பாஜகவின் அடித்தளமாக இருக்கும் நெடுங்கால வாக்குவங்கிகளில் இப்போது எந்த அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது என்று தெரியவில்லை. குறிப்பாக சாதி வாக்குகளில் பெரிய மாற்றம் வந்திருக்குமா? இருக்காது. ஒருவேளை இருந்தாலும், அநேகமாக அது பெரிய அளவுக்கான உடைப்பாக இருக்காது.பாஜகவின் பாரம்பரிய வாக்குவங்கிகளுக்கு வெளியே இருந்த, 2014 இல் மோடி வித்தையால் மயங்கிப்போயிருந்த மக்கள்தான் இப்போது விழித்துக்கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது.

இந்த மாநிலங்களில் மிகப்பெரிய வாக்கு மாற்றம் நடந்திருப்பது ஊரக-நகரப் பகுதி (Rurban) மக்கள் மத்தியில்தான் இருக்கவேண்டும். அதாவது வட, மத்திய மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு நகரங்களில்தான் மோடியின் மீதான பிம்பம் முன்பு மிகப்பெரியதாக வளர்க்கப்பட்டிருந்தது. பாஜகவின் பெரிய வளர்ச்சி இந்த ஊரக-நகர அல்லது சிறுநகர இளைஞர் வாக்கு வங்கியை வென்றதன் ஊடாகவே சாத்தியப்பட்டிருந்தது.

வளர்ச்சித் தாகமும் இந்துத்துவ மோகமும் இணைந்து உருவான இந்த வாக்காளப் படை கடந்த பத்தாண்டு காலமாக பாஜகவின் பலமான அஸ்திவாரமாக இருந்து வந்தது. ஆனால் இந்தப் பலம் நிலவியதற்கு ஒரே காரணம் – வளர்ச்சி மீதான நம்பிக்கைதான்.

இந்த நம்பிக்கைதான் இப்போது தகர்ந்திருக்கிறது. காங்கிரசால் வளர்ச்சியைத் தரமுடியவில்லை, பாரதிய ஜனதா கட்சியால்தரமுடியும் என்கிற நம்பிக்கை அந்த மக்களிடம் இருந்தது. அது இன்று பொய்த்துப்போனது.

வட, மத்திய இந்தியாவில் சராசரி மனிதர்கள் தங்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காகவே போராடிக்கொண்டிருக்கிற நிலையில், ‘குஜராத் மாடல்’ அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. 2014 நாடாளுமன்றத்தேர்தலில் ஒட்டுமொத்த வட, மத்திய இந்தியா மோடிக்கு வாக்களித்த போது, அந்த ஏக்கம் தெரிந்தது.

 

இவ்வளவு பெரிய ஆதரவைப் பெற்ற மோடி அரசு என்ன செய்தது?

மிகப்பெரிய நம்பிக்கைத்துரோகத்தைச் செய்தது.அந்த மக்கள் எதிர்ப்பார்த்த வளர்ச்சியில் ஒரு சதவீதத்தைக் கூட மோடியின் ஆட்சியும் பாஜக மாநில ஆட்சிகளும் அளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த நாள் முதலாக மோடி அரசு தன் குரோனி கேபிடலிஸ்ட்களுக்கு நாட்டை பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு, நம்மையெல்லாம் பசு பாதுகாப்பு குறித்து பேசும்படி செய்துவிட்டது. உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதன் திமிர் உச்சத்துக்குச் சென்றது.

‘மபி, சத்தீஸ்கரில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை வேலைசெய்திருக்கும் இல்லையா? இதை எப்படி மோடிக்கு எதிரான வாக்கு என பார்ப்பது’ என்று ஒரு கேள்வி எழும். ராஜஸ்தானில், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் தோல்வி மிகப்பெரிய தோல்வி அல்ல. பாஜகவை நம்புகிற பாரம்பரிய வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றும் கூறமுடியாது. ஆனால் நிச்சயமாக மோடியின் வளர்ச்சி வாக்குறுதியை நம்பி வந்த கட்சிசாரா வாக்காளர்கள் இப்போது பாஜகவை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று கூறமுடியும்.

இந்த மாநிலங்களில் எந்த வேலைவாய்ப்பும் அதிகரிக்கவில்லை. மாறாக வட, மத்திய மாநில மக்கள் பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்கிற அவலம்தான் நடக்கிறது. அசாமிலும் கர்நாடகத்திலும் மகாராஷ்ட்டிராவிலும் அடிவாங்கிய இந்திக்காரர்கள் கடைசியில் குஜராத்திலும் அடிவாங்கும்படி நேர்ந்தது.

வட இந்தியாவின் நகர்ப்புற-உயர்சாதி இந்துகள் பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் மிகவேகமாக வளர்ந்தார்கள். ஆனால் பெரும்பாலான எஸ்சி, பிஸி மக்களைப் பொறுத்தவரை எந்த வளர்ச்சியும் இல்லை. விவசாயிகளைப் பொறுத்தவரை நிலைமை மோசமாக ஆனது. பழங்குடி மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய நிலைமையும் மோசமாகவே தொடர்ந்தது. வருடக்கணக்கில் ஆதிவாசிகள் மத்தியில் வேலைசெய்து அவர்களை பாஜகவின் வாக்குவங்கிகளாக மாற்றியதில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால் அதனால் அந்த மக்களுக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. இன்று அவர்களிடம் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் தெரிகிறது.

மோடிக்கு ஏற்கனவே தெற்கிலும் கிழக்கிலும் செல்வாக்கு இல்லை. இப்போது வடக்கிலும் மத்தியிலும் செல்வாக்கு சரிகிறது. கடந்த குஜராத் மாநிலத் தேர்தலிலேயே பாஜக போராடித்தான் வெற்றி பெறமுடிந்தது என்பதை நினைவில்கொண்டால், மோடியின் அலை இந்தியாவில் ஓய்ந்துவிட்டது என்று நிச்சயமாகக் கூறலாம். உபியில் ஏற்கனவே பாஜக யோகியைத்தான் நம்புகிறது.அரசியலில் எதுவுமே நிரந்தமில்லை! பாஜக அதிபுத்திசாலிகள் நிறைந்த ஒரு கட்சி என்றார்கள். ஆனால் ஓர் ஐந்தாண்டு காலத்துக்குக்கூட தங்கள் செல்வாக்கை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை அவர்களால்!

நாடாளுமன்ற ஜனநாயகம், அதுவும் இந்தியாவில், எப்போதுமே அதிசயமான ஒன்று. நேற்று வரை “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்கிற பாஜகவின் முழக்கம் கிட்டத்தட்ட உண்மைதான் என்று தோன்றியது. இன்று மபி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் என மூன்று மாநிலங்களில் அக்கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கிறது (இன்னும் குதிரை பேர ஆட்டங்கள் பாக்கி என்பதால் எதையும் உத்தரவாதமாகச் சொல்வதற்கில்லை!). திடீரென இந்தி வட்டாரம் முழுக்க பாஜகவின் எதிர்காலம்தான் ஆடிப்போயிருக்கிறது!

பொருளாதாரம், நிர்வாகம் என அனைத்திலும் தோற்றுவிட்டார் மோடி. ரிசர்வ் வங்கி, சிபிஐ, உச்சநீதிமன்றம் என எல்லா அமைப்புகளையும் சின்னாபின்னமாக்கியிருக்கிறார். பணமதிப்பிழப்பாலும் வேலையின்மையாலும் கிராமப்புற சந்தை கதிகலங்கிக்கிடக்கிறது. அம்பானி, அதானிகளுக்கு மட்டும் மார்க்கெட்டிங் வேலை செய்துவிட்டு ஓய்வுபெறத் தயாராகிவிட்டார் மோடி.வடக்கு-மத்திய மாநிலங்களில் பாஜகவை இப்போது தற்காப்பு நிலைக்கு கொண்டுவந்துவிட்டார் மோடி. காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் இனி அனைத்திந்திய அளவில் உஷாராகிவிடும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி இப்போதே பலமாகிவிட்டது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இதுவரை இருந்துவந்த ஒரே பிரச்சினை ஏதேனும் ஒரு கட்சி அதன் மைய அச்சாக இருக்கவேண்டும் என்பதுதான். இந்த மூன்று மாநிலத்தேர்தலின் மூலம் காங்கிரசும் ராகுல் காந்தியும் அதை உறுதிசெய்துவிட்டார்கள். இப்போது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக்கூட்டணி அமைவது சாத்தியமும் ஆகிவிட்டது.உபியில் எஸ்பி-பிஎஸ்பி கூட்டணியும் பிஹாரில் லாலூ-காங்கிரஸ் கூட்டணியும் பெங்காலில் மமதா தலைமையிலான கூட்டணியும் உறுதியாக இருக்கும்பட்சத்தில் வடக்கு, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பாஜகவின் கதை முடிந்துவிடக்கூடும். கர்நாடகம் தவிர, தெற்கில் அவர்களுக்கு கதையே கிடையாது. கர்நாடகத்திலோ அது சோகக்கதை.ஆனால் சும்மா போகமாட்டார் மோடி. யோகி ஆதித்யநாத்தை நம் தலையில் கட்டிவிட்டுப் போவார் என்று உறுதியாக நம்பலாம். எல்லாம் தெரிந்துகொண்டுதான் அண்மைக்காலமாக பாஜக ராமர் கோயில் விவகாரத்தை எடுக்கிறது என்று புரிந்துகொள்ளலாம் இல்லையா! அத்துடன் ஏற்கனவே யோகி இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது மிகப்பெரிய அளவுக்கு முன்னிறுத்தப்பட்டார் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஆனால் இந்த முறை 2019 இல் வெற்றிபெறுவதற்காக ராமர் கோயில் விவகாரத்தையோ அதைப் போன்ற வேறு விவகாரங்களையோ பாஜக எடுக்குமானால் அது பெரிய அளவுக்கு எதிர்மறை விளைவைத்தான் உருவாக்கும். ஏனென்றால், 2014 இல் ராமர் கோயில் போதாது என்று கருதிதான் வளர்ச்சி அஸ்திரத்தை ஏவினார்கள் பாஜகவினர். இப்போது வளர்ச்சி நாயகன் மோடியும் குப்புறவீழ்ந்துவிட்டார். மறுபடியும் ராமரிடம் போனால், மி்ச்சமீதி இருக்கும் பாஜக வாக்குகளும் இடம்பெயர்ந்துவிடும்.

மோடிகளும் யோகிகளும் வேறு எதையாவது யோசித்தாகவேண்டும். அட, அப்புறம் அந்த ஷாவை மறந்துவிட்டோமே!

#opposition_parties  #Leaders_ of_all_opposition_parties  #எதிர்க்கட்சிகள் #Bjp_Fails #பாஜக_படுதோல்வி #மோடி_அலை

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*