உத்தமரா உர்ஜித்படேல்?

நாளை திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி?

ஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன?

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது!

உர்ஜித்படேல் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தும் இரண்டு ஆண்டுகள்  ஆகிறது. இந்திய வரலாற்றில் இருண்ட காலங்கள் என்று  கடந்த இரண்டு ஆண்டுகளையும் குறிப்பிடுகிறார்கள் பொருளாதார அறிஞர்களும் அரசியல் ஆய்வாளர்களும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பனிப்போர் நிலவி வந்த நிலையில் அந்த பனிப்போரின் திரையை விலக்கியது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவின் வார்த்தைகள் .மும்பை நிகழ்ச்சியொன்றில் பேசிய விரால் ஆச்சார்யா “ரிசர்வ் வங்கியை  மத்திய அரசு கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்”என்றார். ஆச்சாரியாவின் இந்த உரைக்குப் பின்னர் அடுத்தடுத்து நடந்த மோதலின் விளையாக வருகிற 19-ஆம் தேதி அன்று தன் கவர்னர் பதவியை உஜித் படேல் ராஜிநாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்படி ஒரு ராஜிநாமா நடந்தால் மனக்கசப்போடு ரிசர்வ்வங்கியை விட்டு வெளியேறும் இரண்டாவது ஆளுநராக உர்ஜித்படேல் இருப்பார். உண்மையில் உர்ஜித் படேல் மனக்கசப்போடு வெளியேறுகிறாரா அல்லது கடந்த இரண்டு ஆண்டுகள் தேவைகள் முடிந்த பின்னர் அவர் வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வியும் பலராலும் முன் வைக்கப்படுகிறது.

இந்தியாவில்  இருக்கும் உயர்பதவிகளில் ஒன்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி. அந்தவகையில் இப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அளவுக்கு இதற்கு முன்னர் விமர்சிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை. அவர் பதவியேற்ற இரு ஆண்டுகள் கழிந்து இப்போதுபதவி விலகி இருக்கிறார் உர்ஜித் படேல்

ஆனால், 2016 செப்டம்பரில் உர்ஜித் படேல் பதவியேற்ற போது பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் அந்த பதவியில் அமர்ந்தார் படேல். உர்ஜித் படேல் பதவியேற்ற இரண்டே  மாதங்களில் நவம்பர் 8-ஆம் தேதி இரவு பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மக்கள்  இடி விழுந்தது போல  அதிர்ச்சியடைந்தனர். ஐநூறு ஆயிரம்  ரூபாய் நோட்டுகள் என்பது  பெரும்பலான இந்திய மக்களின் புழக்கத்தில் இருந்த நோட்டுகள். பெரும்பலான அன்றாடக் கூலிகளுக்கு ஒரு நாள் கூலி என்பதே 500 ரூபாய்  நோட்டு சார்ந்தது என்பதால் இந்த நடவடிக்கை இந்திய குடிமக்களின் அடித்தட்டு மக்களை மிக மோசமாக பாதித்தது.

ஆனால், 2000 ரூபாய் தாளில் மேஜிக்கல் சிப் உள்ளது. அதை எங்கு புதைத்தால் அலாரம் ஆர்.பி.ஐயில் அடிக்கும் என்று பாஜகவினர் அளந்து கொண்டிருந்தார்கள். ஆனால், மக்கள் தங்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் நிலைகுலைந்து ஏ.டி.எம்.  வாசல்களிலும் வங்கி வாசல்களிலும் தங்கள் வீட்டு கடுகு டப்பாவில் சேமித்து வைத்திருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற  அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முராஜ்ஜி  தேசாய் காலத்திலும் நடந்தது என்று உஷ்ணத்தைக் குறைக்க தேசாயை வம்புக்கிழுத்தார்கள். ஆனால், அந்த பழுத்த அரசியல் தலைவர் முராஜ்ஜி தேசாய் பிரதமராக  இருந்த போது  1978 ஆம் ஆண்டு   பண ஒழிப்பு நடவடிக்கையாக  1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். அவர் செல்லாது என அறிவித்த  நோட்டுகள் உயர்மதிப்பு மிக்க  நோட்டுகள். அவைகள் இந்த சமூகத்தின் மேல்தட்டு மக்களிடமே அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தன. தவிறவும்  ரிசர்வ் வங்கிக்கு  அறிவுறுத்தி 48 மணி நேரத்திற்குள் முராஜ்ஜி  தேசாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்க வில்லை. முன்கூட்டியே தெளிவாக திட்டமிட்டு அதைச் செய்தார் . அதனால் அது இந்திய ஏழைகளை பாதிக்கவில்லை. ஆனால், மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள்  என்பது ஏழைகளை இடியென தாக்கியது. காரணம் 99% இந்திய மக்களின் ஒரு நாள் கூலியே 500 ரூபாய்க்குள்தான்.

50 நாட்களில் நிலமை சகஜமாகும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால், 50 நாளில் 150 பேர் ஏ.டி.எம். வாசல்களிலும், சிகிச்சைக்குப் பணம் கொடுக்க முடியாமல் மருத்துவமனைகளிலும் மரணித்தார்கள். சிறு தொழில்கள் நசிவுக்கு உள்ளாகின. வட மாநில விவசாயிகள் பணமதிப்பிழப்பு நவடிக்கைக்கு கண்டனம்   தெரிவித்து விளை பொருட்களை சாலையில் கொட்டி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இரண்டு ஆண்டுகள் ஆனபின்னரும் கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து மக்கள் மீளவில்லை. இருண்ட மேகத்தை கொண்டு வந்த அந்த  பேரிடியான நடவடிக்கை இன்னும் நீங்கவில்லை. சுமார்  ஒரு கோடி பேர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையிழந்துள்ளதாக அலறுகிறார்கள் தொழிற்சங்கவாதிகள்.

இப்படியாக துயரமிகு நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு உர்ஜித்பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டுச் செல்கிறார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பிரதமர் மோடி ஒரு பங்காளி என்றால் அதன் இன்னொரு பங்களாகியாக செயல்பட்டவர்தான் உர்ஜித் படேலும்.

2016 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்கிறார் உர்ஜித் படேல்

2016 நவம்பரில் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கிறார் மோடி.

2016 -நவம்பர் 8-ஆம் தேதி மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பதற்கு முந்தைய நாள் 7-ஆம் தேதி ரிசர்வ்வங்கிக்கு மத்திய அரசு ஒரு அறிவுரை வழங்குகிறது அதில், தீவிரவாதத்திற்கு நிதி உதவி, கறுப்புப்பணம், கள்ளநோட்டு இந்த மூன்று பிரதான சிக்கலகளையும்  தீர்க்க புழக்கத்தில் இருக்கும் 500- 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசிக்க வேண்டும் என்று அதில் அறிவுரை வழங்கியது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த அறிவுரை பற்றி மறு நாள் 8-ஆம் தேதி  ஆழ்ந்து ஆலோசித்து ஒப்புதல் வழங்கியது ரிசர்வங்கி. நாட்டின் தலைவிதியை  தீர்மானிக்கும் இந்த விவகாரத்தில் உர்ஜித்படேல் தலைமையிலான ரிசர்வ்வங்கி 24 மணிநேரத்திற்குள் ஆலோசித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு க்ரீன் சிக்னல் காட்டுகிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்த அடுத்த சில மணி நேரத்தில் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறார்.ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கு ஆளுநராக இருந்த போது 2014-ஆம் ஆண்டில்  ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது தொடர்பான அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் 2000 ரூபாய் நோட்டை அச்சடித்து 2016 மே -18 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என்று அரசு ரிசர்வ் வங்கிக்கு கூறியது.

பின்னர் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்  வழங்கியது. அச்சடிக்க மட்டும் ஒப்புதல் வழங்கிய ரிசர்வ் வங்கிக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி எதுவும்  தெரியாது. அதன் பின்னர் ரகுராம் ராஜன் சென்று உர்ஜித் படேல் வந்த பின்னர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுரை கூறி   48 மணி நேரத்திற்குள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்தார் மோடி. ஆனால், செல்லாது என அறிவிக்கப்பட்ட  நோட்டுகளை ஈடு கட்டும் அளவுக்கு புதிய  2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை.

அச்சடித்த நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம் மிஷின்களில் பொருந்தவில்லை. இரவோடு இரவாக நோட்டீஸ் அடிப்பது போல 2000, 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துத்  தள்ள இணையவாசிகள் புதிய நோட்டுகளை  வைத்து மீம்ஸ் போட்டார்கள்.

மொத்தத்தில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என மோடி அரசின் ஒவ்வொரு பொருளாதார நடவடிக்கையிலும் துணையாக நின்றவர்தான் உர்ஜித் படேல். ஆனால், ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி கடன்  “இது இந்திய சிறுவணிகர்களுக்கு தீபாவளி பரிசு “ என மோடி அறிவித்த போது. வாராக் கடன்களாலும்  சுருட்டிக் கொண்டு ஓடிய நிரவ்மோடி, முகுல் சோக்சி, விஜய் மல்லையா போன்றவர்களாலும்  வராமல் போன கடனை வசூலிக்க முடியாமல், கடன் கேட்டவர்களுக்கு அதிக அளவு நிபந்தனைகளை விதித்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையும் மத்திய அரசின் தீடீர் கவர்ச்சி அறிவிப்புகள் ஒன்றோடு ஒன்று மோதி நிற்கின்றன.

அரசு திட்டங்களில் சில தவறுகள் நடப்பது  மனிதர்களின் பிழைதான். ஆனால், நாட்டின் ஜீவநாடியான பொருளாதாரத்தைக் குலைக்கும் எந்த போரும் நடந்து விடக்கூடாது என்றுதான் ரிசர்வங்கி உருவாக்கப்பட்டது.ஆனால், அந்த உயர்ந்த நோக்கத்தை குலைத்தவர்களில்  பிரதமர் மோடி தான் முதல் மனிதர் என்றாலும் அதில் உர்ஜித் பட்டேலுக்கு பங்கே இல்லை என்று சொல்லி விட முடியாது.

_கரினா

#urjithpatel #உர்ஜித்படேல் #ரிசர்வ்வங்கி #பணமதிப்பிழப்பு #Reserv_bank_of_india #Demonetisation #2016_Demonetisation #Modi_Govt_Demonetisation #2016_Indian_banknote_demonetisation #பணமதிப்பிழப்பு #மோடி_அரசு #வேலைவாய்ப்பின்மை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*