“என் சாவுக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி”- இளைஞர் தற்கொலை முயற்சி!

"என் சாவுக்கு எடப்பாடி பழனிசாமியும், போலீசும் காரணம்”

"என் சாவுக்கு எடப்பாடி பழனிசாமியும், போலீசும் காரணம்”

Posted by Tamilarasial on Tuesday, December 25, 2018

‘என் சாவுக்கு காரணம் எடப்பாடி அரசும், தமிழக போலீஸும்தான்’ – ’கஜா’ புயலில் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஃபேஸ்புக் வீடியோ வாக்குமூலம்!

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் (தி.மு.க) ராஜேந்திரனின் மகன், இனியவன். இதழியல் படித்த இவர், தலைஞாயிறு பகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்வந்து செயல்படக்கூடியவர்.

கஜா புயலால் தலைஞாயிறு பேரழிவை சந்தித்த அந்த இரவில், அந்தந்தப் பகுதி இளைஞர்கள்தான், துடிப்புடன் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதில் இனியவனும் ஒருவர். புயல் அடித்து பல நாட்களாகியும் உணவின்றி, நீரின்றி, வசிப்பிடமின்றி மக்கள் பரிதவித்து நின்ற வேலையில், நிவாரணம் வழங்காத தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி, தலைஞாயிறு பகுதியிலும் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றதைப் போலவே இனியவனின் பங்கேற்றார்.

ஆனால், அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டி அடித்தப் பிறகு, நிவாரணம் கேட்டு போராடிய அத்தனை மக்களையும் மிக மோசமாக தாக்கியது தமிழக காவல்துறை. அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களை நள்ளிரவில் தேடிப்பிடித்து கைது செய்வது, அவர்களை திருச்சி உள்ளிட்ட நெடுந்தொலைவு சிறைகளில் அடைப்பது… என இன்றுவரை சித்திரவதை தொடர்கிறது. நேற்று கூட தலைஞாயுறு அருகே உள்ள லிங்கத்தடி என்ற ஊரில் ஓர் இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதில் இளைஞர் இனியவனின் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதுடன் தினம்தோறும் அவரைத் தேடிச்சென்று, ‘வந்தால் என்கவுண்டரில் போட்டுவிடுவோம்’ எனவும் போலீஸ் மிரட்டி வருகிறது. ஏற்கெனவே இவரது அப்பா ராஜேந்திரனையும், அண்ணனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவரைத் தேடி வருகின்றனர். இதனால் அவர் ஒரு மாதத்தும் மேலாக தலைமறைவாகவே சுற்றி வருகிறார். இந்நிலையில்தான், டிசம்பர் 24-ம் தேதி, இன்று இரவு 8 மணி அளவில் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தையும், தங்களைப் போன்ற பலரையும் இந்த தமிழக அரசும், காவல்துறையும் தீவிரவாதிகளைப் போல தேடி வருவதாகவும், இந்த வேதனை தாங்காமல் தான் விஷம் குடித்துவிட்டதாகவும் கூறுகிறார். கண்ணீர் மல்க பேசும் அவர், தன் மரணத்தின் மூலமாகவேனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்.

இனியவன் எந்த ஊரில் இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை என்ன என்பது குறித்து உடனடி விவரங்கள் கிடைக்கவில்லை.

#gajaCyclone #whereisCM #policeattrocity

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*