கடலும் மகனும் நூலுக்கான முன்னுரை!

பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்?

பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சரவணன் சந்திரனின் கடலும் மகனும் என்ற தொகுப்பு  இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. அந்நூலுக்கு இளங்கோவன் முத்தையா எழுதியுள்ள முன்னுரை!

ஒரு வாசகனாக, புனைவுகளின் ரசிகன் நான். புனைவு கொடுக்கும் வாசிப்பின்பத்திற்காகவே அவற்றைத் தேடித் தேடிப் படிப்பவர்களில் நானும் ஒருவன். புனைவுகளின் மீதான மயக்கம் இன்னும் முழுவதுமாக வடியாத நிலையில், கால மாற்றத்தில் மெல்ல இடம்பெயர்ந்து கட்டுரைகளின் பக்கமும் வந்து சேர்ந்திருக்கிறேன். ”கட்டுரைகளின் பக்கம் சீக்கிரமா வாங்க சார்” என்று அடிக்கடி எனக்கு அறிவுறுத்தும் மதுரை அருணாசலம் சாரின் வார்த்தைகளை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

கட்டுரைகள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?

புனைவெழுத்து அளிக்கும் ’கட்டற்ற சுதந்திரம்’ என்பது கட்டுரையாளனுக்கு முற்றிலும் மறுக்கப்பட்ட ஒன்று. ஏனெனில், கட்டுரையாளன் தான் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் அவனே பொறுப்பாளி ஆகிறான். சமூக ஊடகங்களும், தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், எல்லாத் தகவல்களும், எல்லோருடைய உள்ளங்கைகளையும் அந்தந்தக் கணமே சென்று சேர்ந்துவிடுவதால், தவறான ஒரு சிறு தகவலையோ, மானுட விழுமியங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையோ போகிற போக்கில் கட்டுரையாளன் எழுதிச் சென்றுவிட முடியாது. உடனடி எதிர்வினைகளையும், கடும் விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும். அதே நேரம், சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் குரலாகவே ஒரு கட்டுரையாளன் எல்லாச் சமயங்களிலும் இருந்துவிட முடியாது. அந்தக் கூட்டு மனசாட்சியின் குரலுக்கு எதிராகவும் நின்று பேச வேண்டிய பொறுப்பும், சிந்தனையாளன் என்கிற வகையிலான கடமையும் ஒரு கட்டுரையாளனுக்கு எப்போதும் உண்டு. எனவே, அதீத கவனமும், பொறுப்புணர்வும், சமூகத்தின் மீதான உண்மையான அக்கறையும், கறார்தன்மையுமே ஒரு நல்ல கட்டுரையின் அடிப்படைப் பண்புகளாக அமைகின்றன..

சரவணன் சந்திரனின் “கடலும் மகனும்” கட்டுரைத் தொகுப்பு, அப்படியான தகுதி படைத்த ஒன்று. அவரது முந்தைய கட்டுரைத் தொகுப்பைத் தொகுத்தவன் என்ற முறையில், எழுதிக் குவிக்கும் சரவணன் சந்திரனின் எழுத்துகளிலிலிருந்து ஐம்பது கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை நான் அறிவேன். அந்த வகையில் ஒரு பதிப்பாளராக தம்பி கார்த்திக் புகழேந்தி தேர்ந்தெடுத்திருக்கும் கட்டுரைகள் மிக முக்கியமானவை.

அதே போல அட்டைப் படத்திற்கு, தமிழக மீனவர்களின் தொன்மத்தைப் பறைசாற்றும் விதமான ஓவியத்தை, நண்பர் வல்லபாய் அருமையான முறையில் வரைந்து கொடுத்ததை அருகிலமர்ந்து பார்த்தது ஒரு பரவசமூட்டும் அனுபவமாக இருந்தது.

காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய சரவணன் சந்திரன், இப்போது ஒரே நேரத்தில் வேளாண்மை, வணிகம், எழுத்து என்று மூன்று இடங்களில் காலூன்றி நிற்கிறார். அவற்றிலிருந்து அவர் பெறுபவை அவரது எழுத்துகளில் பிரதிபலிக்கிறது. அதை நான் இப்படி எடுத்துக்கொள்கிறேன். அதாவது, ஒரு சமூக நிகழ்வின் பின்னுள்ள அரசியலை அவருக்குள் இருக்கும் ஊடகவியலாளன் இனம் கண்டுகொள்கிறான், அந்நிகழ்வின் சாதக பாதகங்களை அவருக்குள் இருக்கும் வணிகன் அலசிப் பார்க்கிறான், எந்த ஒரு நிகழ்விலும் காப்பாற்றப்படும் அல்லது மீறப்படும் அடிப்படை அறங்களை அவருக்குள் இருக்கும் விவசாயி உணர்ந்துகொள்கிறான். அவருக்குள் இருக்கும் எழுத்தாளன் இவற்றைத் தொகுத்து கட்டுரைகளாக்கிவிடுகிறான். எனவேதான் அவரது கட்டுரைகள் இயல்பாகவே பன்முகத்தன்மை பெற்றுவிடுகின்றன என்பது எனது எண்ணம். இத்தோடு அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனிமை, அவரது கட்டுரைகளின் அடிநாதமான, நிகழ்வுகளை, மனிதர்களைத் தத்துவார்த்த அடிப்படையில் அணுகும் மனநிலையை அவருக்குத் தந்துவிடுகிறது என நினைக்கிறேன். இதை இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகளில் நம்மால் நன்கு உணரமுடியும்.

அரசியல், வணிகம் மற்றும் சமூக நிகழ்வுகள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு, அவற்றைக் குறுக்குவெட்டுப் பார்வையில் அணுகுபவை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள். தலைப்புக்கு ஏற்ற வகையில் கடல் சார் தொழில்கள், உயிருக்கு எந்தவித உத்திரவாதமுமில்லாத தொழிலில் தினமும் ஈடுபடும் மீனவர்களின் வாழ்க்கை, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் கடல் சார் மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம், அரசு, மீனவ சமுதாயத்தை நடத்தும் விதம், சமவெளி மக்களிடம் இருக்கும் மீனவர்களின் பாடுகள் குறித்த அறியாமை, மீன் பிடித்தல், மீன்களின் வகைகள், மீன் வளர்ப்பு, மீன் வியாபாரம், அதில் ஏற்படும் சிக்கல்கள் சார்ந்த சுவாரசியமான தகவல்கள் கொண்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

வணிகத்தில் சரவணன் சந்திரனுக்கு இருக்கும் ஈடுபாடு உலகறிந்தது. முதல் தலைமுறை வணிகர்களிடம் அல்லது புதிதாக எந்த ஒரு தொழிலையும் முயன்று பார்ப்பவர்களின் மீது அவர் காட்டும் ஆர்வமும், கரிசனமும் அலாதியானது. அவர்களுக்கான வாய்ப்புகள், தடைகள் மற்றும் சந்தை நிலவரம் ஆகியவை குறித்துப் பேச ஆரம்பித்தால் ஆர்வமாகிவிடும் அவரது குணம் அவரது கட்டுரைகளிலும் தெரிகிறது. வணிகத்தில் ஏற்படும் சிக்கல்கள், ஒரு வணிகன் நடைமுறையில் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள், தடைகள், ஏமாற்றங்கள், அரசின் கொள்கை முடிவுகள் வணிகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய முறைகள் மட்டுமல்லாது, ஒரு வணிக மாதிரியை எடுத்துக்கொண்டு அதில் வெற்றி பெற்றவர்களின் வரலாறை மட்டும் சொல்லாமல், தோல்வியிலும், சரிவிலுமிருந்து மீண்ட வணிகர்களின் வாழ்வைக் கூறுவதன் மூலமாகவும், இவை எல்லாவற்றிலும் ஒரு வணிகன் கைக்கொள்ள வேண்டிய சமூக நலன் சார்ந்த அறம் குறித்தும் உரையாடுபவை இவரது கட்டுரைகள் எனவே, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்குப் பெரும் ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கவல்லவை இவரது வணிகம் குறித்த கட்டுரைகள். சில்லறை வணிகத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பேசும் அதே நேரம், பெரு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடும்போது சந்திக்க நேரிடும் பிரச்சனைகளையும், அவர்களால் வரும் பிரச்சனைகளையும் சேர்த்தே பேசுகிறார்.

அரசியல் குறித்த கட்டுரைகளின் சரவணன் சந்திரன் காட்டும் முகம் முற்றிலும் வேறானது. விழிப்பு நிலையில் என்னேரமும் தன்னை வைத்திருக்கும் ஒரு செய்தியாளன் அங்கே வந்துவிடுகிறான். எந்த ஒரு சமூக நிகழ்வும் யாரால், எதற்காக முன்னெடுக்கப்படுகிறது, அதன் அரசியல் பெறுமதி என்ன? அந்நிகழ்வு சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதாகவே இவரது அரசியல் கட்டுரைகள் இருக்கின்றன. உதாரணமாக எடப்பாடி அரசில் திமுகவினருக்கு அளிக்கப்படும் டெண்டர்களைக் குறித்த கட்டுரை. ஐந்து நிமிடத்தில் வாசித்துவிடக்கூடிய இந்தக் கட்டுரை கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் உண்மையான கள நிலவரம் என்ன? நாம் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறோம், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி வேறுபாடுகளெல்லாம் எப்படி ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன என்பதெற்கெல்லாம் அந்த ஒரு கட்டுரையே பதம். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம், பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் கைகொள்ளும் அணுகுமுறையிலுள்ள குறைப்பாடுகள், அதை எதிர்கொள்ளும் திராவிட இயக்கங்கள் செய்ய மறந்தவை குறித்து எழுதப்பட்டவை மிக முக்கியமானவை. குறிப்பாக தாமிரபரணி புஷ்கரணியை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் திராவிட இயக்கங்கள் குல தெய்வ, சிறு தெய்வ அல்லது நாட்டார் தெய்வ வழிபாடுகளுக்கு கொடுக்க வேண்டிய கவனத்தைக் குறிப்பிடுகிறார். பண்பாட்டு வகைமையில் திராவிட இயக்கங்கள் தவறவிடும் முக்கியமான கண்ணி இது.

கல்வி மற்றும் மருத்துவத்திற்கு ஆகும் செலவினங்கள் நடுத்தரவர்க்கத்தின் வாழ்வை எவ்வாறு சிதைக்கிறது என்பதை ஒரு கட்டுரையில் எழுதும் அதே நேரம், வாடகைத்தாய் விவகாரங்களில் எழும் உளவியல் சிக்கல்களையும், உடலுறுப்பு வணிகம் எப்படி சமூகத்தின் நலிந்த பிரிவினரை வஞ்சிக்கிறது என்பதையும் எழுதுகிறார். மாற்று மருத்துவம் என்கிற பெயரில் ’அறிவாளிகளின் அறியாமை’ யை வைத்து நடத்தப்படும் மிகப்பெரிய வணிக சூதாட்டத்தை முன் வைத்து, இந்தத் தொகுப்பில் சித்த மருத்துவத்தில் உலவும் போலிகள் குறித்தான நெடிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. Investigative journalism என்கிற ஒன்று வழக்கொழிந்து போய்விட்ட இன்றைய நிலையில் இந்தக் கட்டுரையை நான் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன்.

இந்தக் கட்டுரையை எழுத அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையை தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிவேன். நவீன மருத்துவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவர்கள், பாரம்பரிய சித்த மருத்துவர்கள், மருந்து தயாரிப்பவர்கள், இத்துறையிலேயே உலவும் போலிகள், என்று அவர் இதற்கான தகவல்களைத் திரட்ட சந்தித்த, பேசிய நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மொத்தமாக அவற்றைத் தொகுத்து, போலிகளை அடையாளம் காட்டும் அதே நேரம், உண்மையான சித்த மருத்துவர்கள் பாதிக்கப்படாதபடி மிக்க கவனத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அது. சமீபத்தில் வெளியான கட்டுரைகளில் ஆகச் சிறப்பானது மட்டுமல்ல, ஆகத் தேவையான கட்டுரையும் அதுதான் என்பேன்.

மேலும் யாரும் அதிகம் தொடாத, அல்லது தங்களது கண்ணில் படாதது போலப் பாவனையில் கடந்துவிடும் பிரச்சனைகளையும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. ஈழ அகதிகள் முகாம்களின் இன்றைய நிலை, கிராம மக்கள் வெள்ளந்தியானவர்கள் என்கிற பொதுக்கருத்துக்கு எதிர்நிலையில் எளிய மக்கள் செய்யும் தகிடு தத்தங்களை நகைச்சுவையாக விவரித்திருப்பது, நாய்க்குட்டிகளின் வழியே பெண் குழந்தைகள் கிராமத்தில் நடத்தப்படும் விதம் குறித்து எழுதியிருப்பது, வெளிதேசத்து மீன்கள் இங்குள்ள நீர்நிலைகளில் தாக்குப்பிடித்து வளர்வதைச் சொல்வது போல நமக்கு வடக்கிலிருந்தும், வடகிழக்கிலிருந்தும் தமிழகம் வந்து சேரும் கூலித் தொழிலாளர்களை நினைவுபடுத்துவது, ஜக்கி வாசுதேவ் குறித்த கட்டுரை, ரஜினி காந்தின் வாடகைப் பிரச்சனை, பாலியல் தொழிலுக்குள் உள்ளிழுக்கப்படும் குடும்பப் பெண்கள் குறித்தான கட்டுரை, செம்மரக்கட்டை விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தான ஒரு கட்டுரை, மாற்று மணலான எம்-சாண்ட், காடு, காட்டு விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள், ட்ரெக்கிங் விபத்து, சென்னையைக் குறித்து நமக்கு வேறு ஒரு சித்திரத்தை அளிக்கும் கட்டுரை, பெருகி வரும் காதல் தற்கொலைகள் குறித்த ஒரு கட்டுரை ஆகியவை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பிற முக்கியமான பேசு பொருள்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள்.

வார்த்தைகளைக் கோர்ப்பதில் சரவணன் சந்திரன் வல்லவர். ஜக்கி வாசுதேவ் குறித்த கட்டுரையில் ”அவரோடு கைகுலுக்கி உரையாடுவேன், ஆனால் கும்பிடத் தயங்குவேன்”, ”ராயலாகக் காரில் அழைத்துப்போவது வேறு, அப்பன் கழுத்தில் மருத்துவமனை வயர்கள் தொங்கும்போது அழைத்துப்போவது வேறு”, “விதையாக இருந்தாலும், சாணியடி வாங்கிய விதையாக இருக்க வேண்டும்”, “கிராமங்களில் பெண் குழந்தைகளை நடத்துவது போலத்தான் நாய்களையும் நடத்துகிறார்கள்”, ”எங்களுக்கு சுப்ரபாதமும் வேண்டும், அதே நேரம் சுக்கா வறுவலும் வேண்டும்” என்று இயல்பான வார்த்தைகளில் அழுத்தமான கருத்துகளை எழுதிச்செல்லும் சரவணனின் வார்த்தைகளில் இந்தத் தொகுப்பு நம்மை ரசிக்க வைக்கிறது.

கஜா புயலை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் “இந்தப் புயலை உருவாக்கியவர்கள் யார், அதன் முதுகில் அவர்கள் பெயர் எழுதியிருக்கக் கூடும்” என்று எழுதி முடிக்கிறார்.

சாதாரணப் பார்வைக்கு கிண்டலான ஒரு கேள்வியாகத் தெரிந்தாலும், காவிரிப் பிரச்சனை, டெல்டாவில் விவசாயம் பொய்த்தது, சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கூட கடைமடைகளுக்குத் தண்ணீர் போகாமல் பார்த்துக் கொண்ட அரசின் சாமர்த்தியம், மணல் கொள்ளை, கொள்ளையடிக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்கள் என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் ஒன்றுடன் ஒன்று சங்கிலிபோல் பிணைந்திருப்பதை நமக்கு உணர்த்தும் கேள்வி இது.

அந்த வகையில் மிக ஆழமாக நம்மை யோசிக்கவும் வைக்கும் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது.

இளங்கோவன் முத்தையா
மதுரை.

#கடலும்_மகனும் #சரவணன்_சந்திரன் #kadalum_maganum #saravanan_chandran #fish

முத்தலாக் மசோதா- அதிமுக நிலைப்பாடும் அன்வர்ராஜாவும்!

’ஜெ;  மரணம் – சந்தேகம் மரணம்? -ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்!

#Petta டீசர் வெளியானது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*