பிரபஞ்சன் – வாழ்வும் மரணமும்- 1945 -2018

தமிழகத்தில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருக்கும் இளம் பெண்கள்!

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?- ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

“என் கதைகள் வீட்டுக்கு வெளியே தொடங்குகின்றன. வீட்டில் நுழையும் முன் முடிகின்றன.அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துகொண்டு, விரும்பும்போது சந்திக்கிற வாழ்க்கைமுறையையே நான் விரும்புகிறேன்” என்பார் எழுத்தாளர் பிரபஞ்சன்.
#
ஒரு கள்ளுக்கடை ஊழியருக்கு மகனாகப்பிறந்த சாரங்கபாணி வைத்தியலிங்கம் முதல் தலைமுறையாக கல்வி கற்று, கல்லூரிகாலத்தில் இசை கற்று, கல்வியும், காதலும், படைப்புமாய் வாழ்ந்து வானப்பாடி கவிக்கூட்டத்தோடு கலந்த போது சாரங்கபாணி வைத்தியலிங்கம் பிரபஞ்சன் ஆனார்.
#
தமிழக கல்லூரி மாணவர்களிடையே நக்சல்பாரி அரசியல் கொள்கை ஈர்ப்பை ஏற்படுத்திய போது அது வானம்பாடி இலக்கிய இயக்கத்தினரையும் பாதித்தது. சாதி, மத அடையாளங்களை பெயரில் இருந்து துறந்து விட வேண்டும் என்ற தீர்மானத்தில் பெயர் துறந்த பல கவிஞர்களில் முதன் முதலாக தன் பெயரை “பிரபஞ்சன்” என்ற பெருவெளிக்கு ஒப்புவித்தார்.
#
நிலமற்ற ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரபஞ்சன் தன் வாழ்வு பற்றி “எனக்கு தினமும் இரண்டு வேளை சாப்பாட்டுக்கு மட்டும் முழு உத்திரவாதம் இருந்திருந்தால், இன்னும் சிறப்பான கதைகளை, நாவல்களைத் தமிழுக்குத் தந்திருப்பேன். ஆனாலும் என் எழுத்து வாழ்க்கையை நிறைவாகவே உணர்கிறேன். ஏனெனில், பாரதியைவிட, புதுமைப்பித்தனைவிட நான் சிரமப்பட்டு விடவில்லை. வசதியாகவே வாழ்கிறேன். ஓர் எழுத்தாளனாக எனக்கு சக மனிதர்கள் மீது எந்தவிதமான பொல்லாப்பும் இல்லை. வாழ்க்கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போனேன் என்றாலும், ஒருபோதும் என் எழுத்துகளை அது பாதித்ததில்லை. சென்னையில் நான் தங்கியிருக்காத வீதிகளே இல்லை. அதன் எல்லா பேட்டைகளும் எனக்குத் தெரியும். அத்தனை பேட்டைகளும் என்னை அறியும்; நான் அதில் வாழ்ந்த மனிதர்களை அறிவேன்.” என்பார்.
#
ஏழமை சூழ் உலகில் ஒரு வேளை சுடு சோறுக்காக அலைந்த பிரபஞ்சனின் பிற்கால எழுத்துக்கள் அவரது வாழ்வைப் போல சோகம் கப்பியதில்லை. அவர் மனிதர்களை வாசித்தார். எள்ளல் நடையோடும், நளினத்தோடும், பெண்களுக்காக, குழந்தைகளுக்காக, மனிதர்களுக்காக இடைவிடாது இலக்கிய மொழியில் உரையாடினார்.
#
துவக்கத்தில் கவிஞராக தன்னை அடையாளம் காட்டிய பிரபஞ்சன் பின்னாட்களில் சிறுகதைகள் எழுதத்துவங்கினார். 1961 –ஆம் ஆண்டு “என்ன உலகமடா?” என்ற சிறுகதை பரணி என்ற இதழில் வெளியானது. ஆனால், ஒரு கவிஞனாக தன்னை கற்பனை செய்து கொண்டிருந்த பிரபஞ்சன் பின்னாளில் சிறுகதை உலகில் சிகரம் தொடுவார் என்பதை அறிந்திருக்கவில்லை. ஆனால், நாவல், சிறுகதை என பயணித்த அவரது எழுத்துப் பயணத்தின் உச்சத்தில் இருக்கும் போது தன்னடக்கத்துடன் தன் எழுத்து பற்றி இப்படிச் சொன்னார் பிரபஞ்சன்.
#
“நான் சிறுகதைகள் எழுதுவதில் பெரிய வெற்றி பெற்றுவிட்டேன் என்று சொல்வதற்கு இல்லை. என்றாலும், கவனிக்கத்தக்கக் கதைகளை நான் எழுதியிருப்பதாக நம்புகிறேன்.” என்றார்.
#
பத்திரிகையாளர் பிரபஞ்சன்

புதுச்சேரியில் பள்ளிப்படிப்பை முடித்து, கரந்தை கல்லூரியில் தமிழில் புலமை பெற்று தஞ்சையிலேயே ஆசிரியராக பணியைத்துவங்கிய பிரபஞ்சன் குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் வார இதழ்களில் பணி புரிந்தார். முன்னணி எழுத்தாளரான பிரபஞ்சனால் முன்னணி பத்திரிகையாளர் ஆக முடியவில்லை. “எந்த பத்திரிகையிலும் என்னால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி செய்ய முடியவில்லை. 1990-ஆம் ஆண்டோடு என் ஊடக வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இயல்பிலேயே என்னால் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய இயலாது. மற்றபடி, கொடுத்த வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறேன் என்ற திருப்தி இப்போதும் எனக்கு உண்டு. ஒரு பத்திரிகையைவிட்டு வெளியேறி, வேலைக்காக அடுத்த பத்திரிகையின் கதவைத் தட்டும்போதும், கசப்பான கடந்த காலம்தான் இங்கும் நிகழப்போகிறது என்றும் தெரியும். ஆனாலும், லௌகீகப் பிடுங்கலுக்காக அதைப் பொறுத்துக்கொண்டேன்.” என்று அந்த அனுபவம் பற்றிச் சொன்னார் பிரபஞ்சன்.
#
நூற்றுக்கணக்கான கதைகளையும், குறுநாவல்கள், நாவல்கள் என பயணித்த பிரபஞ்சனை உயரத்திற்கு கொண்டு சென்றது “மானுடம் வெல்லுன்’ வானம் வாசப்படும்’ இரண்டு நாவல்களும்தான். சமூகத்தின் அடித்தட்டில் வைக்கப்பட்டிருந்த தாசிகள், நாட்டியக்கலைஞர்கள், மதம் மாறிய தலித்துக்கள், அந்நிய ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தவர்கள் என அந்த இரு நாவல்களிலும் பல விதமான பாத்திரங்களை அடுக்கி மேவியிருப்பார். வானம் வசப்படும் நாவலுக்கு 1995-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி பிரபஞ்சனுக்கு விருது கொடுத்து பெருமை தேடிக் கொண்டது.
#
சென்னை வாழ்வும் – குடும்பமும்

மூன்று மகன்களுக்கு தந்தையான பிரபஞ்சனின் வாழ்வில் மனைவி பிரமிளா ராணியின் மரணம் தனிமையைக் கொண்டு வந்தது. மிக எளிமையான குடும்பப் பின்னணியில் வாழ்ந்த பிரபஞ்சன் எழுத்தாளார் என்ற கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாதவர். யாராவது பாராட்டினால் கூச்சப்படுகிறவர். யாராவது புதியவர்கள் எழுதினால் பாராட்டத் தயங்காதவர். அவரது ஒட்டு மொத்த வாழ்வின் சுமார் 40 ஆண்டுகளை சென்னை எடுத்துக் கொண்டு அவருக்கு தனிமையை மட்டுமே பரிசளித்தது. தனது தனிமையைப் பற்றி அவர்:-

“ இந்த தனிமையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்மேல் திணிக்கப்பட்டது. தனியாக இருப்பது பயம் தருவதாக இருக்கிறது. உறக்கம் கலைப்பதாக இருக்கிறது. நானும் நானும் மட்டுமே என் வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக இல்லை. ஆனாலும், வாழ்ந்தே தீரணும் வாழ்க்கை. கொடுத்தே தீரணும் கடன்.” என்றார்.

எழுத்தும் வாழ்வும் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையிலான பயணமுமாக கழிந்த வாழ்வின் 2011 –ஆம் ஆண்டு அவரது மனைவி பிரமிளா ராணி காலமானார். தன் மனைவியின் மரணம் பற்றி:-
“என் மனைவி 2011-ம் ஆண்டில் காலமாகும்போது, நான் கனடாவில் இருந்தேன். குழந்தைகள் பிரான்ஸில் இருந்தார்கள். அடக்கம் செய்யவேநாங்கள் ஒன்றுசேர்ந்தோம். 72 ஆண்டுகள் நான் வாழ்ந்தமைக்குக் காரணம், என் மனைவி வாழ்ந்தார் என்பது மட்டும்தான். குடும்பம் எப்படி நடந்தது; குழந்தைகள் எப்படி வளர்ந்தார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. மிகுந்த குற்றவுணர்வில் நான் தள்ளப்பட்டுவிட்டேன்.’’” என்று சொன்ன பிரபஞ்சனுக்கு மூன்று மகன்கள்.
#
தனது மரணம் பற்றி பதிவொன்றில் குறிப்பிட்ட பிரபஞ்சன்:-
“ என்னை, சமூகமும் தோழர்களும் கைவிட்டுவிடவில்லை. நான் சுரண்டப்படும் உலகைச் சேர்ந்தவன். எல்லோரையும் போல நானும் சுரண்டப்படுகிறேன். நல்ல மனங்கள் என்னுடன் கைகுலுக்க உலகமெங்கும் இருக்கிறார்கள். எனக்குக் குறை இல்லை; பிராது இல்லை; ஆனால், ஒரு கவலை எனக்குள் இப்போது உருவாகி இருக்கிறது. மரணம், என்னை ஒரு கணத்தில் வந்து அடைய வேண்டும். நோயில் நொந்து, உடல் வாடி, என் நண்பர்களுக்குத் துன்பம் தராமல், என் வாழ்க்கையை நான் முடித்துக்கொண்டு விடைபெற வேண்டும் என்பதே என் கவலை”ஆனால், அவரது உடல் நலக்குறைபடுகளுக்காக மாதக்கணக்கில் அவஸ்தைகளோடு அவர் விடைபெற்றிருக்கிறார்.
#
2011 –க்குப் பிறகும் எழுதுவதை குறைத்துக் கொள்ளாத பிரபஞ்சன் மரணிக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார். பிரபஞ்சன் இப்போது சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிரபஞ்சனின் நூல்கள் பாடப்புத்தகங்களாக இருக்கின்றன.
#
ஆய்வு மாணவர்கள் பிரபஞ்சன் எழுத்துலகில் பெண் என்று அவரது எழுத்தை ஆய்வு செய்கிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் பிரபஞ்சனின் எழுத்துக்கள் அரிய பொக்கிஷமாக தமிழிலத்தின் ஆன்மாவின் பிரதான இடத்தில் இருக்கும். அது இருக்கும் வரை பிரபஞ்சனும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

#prabanchan #vaanam_vasappadum #maanudam_vellum

ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை!

விஷால் கைது –பின்னணியில் ஆளும்கட்சி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*