பிரமாண்ட சிலையால் மக்களுக்கு துயரம் –கண்டனம்!

#Triple_Talaq முஸ்லீம் பெண்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்காது ஏன்?
பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

முத்தலாக் மசோதா- அதிமுக நிலைப்பாடும் அன்வர்ராஜாவும்!

பெங்களுருவில் விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைக்கத் தமிழக அரசுக்குச் சொந்தமான பாறையைக் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கண்டன அறிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகிலுள்ள கொரக்கோட்டை கிராமத்திலிருந்து மிகப் பெரும் குன்றுப்பாறையை வெட்டியெடுத்து, கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், பெங்களூருவின் ஈஜிபுராவிலுள்ள கோதண்ட இராமசுவாமி கோவிலில், ஏறத்தாழ 300 டன் எடை கொண்ட விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைப்பதற்கு ஒரு அறக்கட்டளைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தது கடும் கண்டனத்திற்கு உரியது.

இவ்வளவு பிரமாண்டமான சிலையை அமைப்பதற்குத் தேவையான ஒற்றைக் கல் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை எனவும், இச்சிலையை நிறுவத் திட்டமிட்ட பெங்களூருவிலுள்ள கோதண்ட இராமசாமி கோவில் அறக்கட்டளை, அரசினை அணுகியது எனவும் இவர்களின் வேண்டுகோளை ஏற்று தொலைதூரச் செயற்கைக் கோளின் உதவியால், தேவையான கல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அரசு கண்டுபிடித்து, அத்தனியார் அறக்கட்டளைக்குத் தெரிவித்தது எனவும், 2014 ஆம் ஆண்டிலிருந்தே பாறையை வெட்டிச் சிலையமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

108 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட இச்சிலையை உருவாக்குவதற்கு முன், 64 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட பெருமாளின் முகம் மட்டும் முதல் கட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதை 240 டயர்கள் கொண்ட மாபெரும் வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இப்பெரும் பாறையைத் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூருவுக்குக் கொண்டு செல்ல மும்பையைச் சார்ந்த ரேஷம்சிங் குழுமத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.

இப்பெரும் கல்லை எடுத்துச் செல்லும் பொழுது, அதன் எடையைத் தாங்க முடியாமல் டயர்கள் வெடித்துள்ளன. மேலும் அவ்வண்டி சேற்றில் புதைந்து நகர முடியாமல் திணறியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலைக்கான பெரும் கல்லை எடுத்துச் செல்வதற்கு வழியில் இடையூறாக உள்ள ஏழை எளியவர்களின் குடிசைகள் பிய்த்தெறியப் பட்டுள்ளன; கடைகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டம், வெள்ளிமேடு பேட்டையைச் சேர்ந்த கருப்பையா கவுண்டர் மகன் குபேரன் என்பவரது இரண்டு மாடிக் கட்டடம், சிலைக்கான கல்லைக் கொண்டு செல்லும் பொழுது இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு தருவதாக வாக்களித்து விட்டு, இடித்த பிறகு பேசிய தொகையைக் காட்டிலும் பல இலட்ச ரூபாய் குறைவாகக் கொடுத்து விட்டு, வீட்டு உரிமையாளரை அலைக்கழித்துக் கொண்டுள்ளனர். இதே போல ஏழை எளியவர்களின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன. சிலை கொண்டு செல்லப்படும் வழியெல்லாம் இன்னும் எத்தனை இடர்பாடுகளைப் பொதுமக்கள் சந்திக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை.

பொதுமக்களுக்குப் பெரும் நாசத்தை விளைவிக்கக் கூடிய சட்டவிரோதமான இந்த அராஜகத்தை, அந்த ஒப்பந்தத் குழுமத்தின் முகவர்களே முன் நின்று செய்கின்றனர். வருவாய்த் துறையினரோ, காவல் துறையினரோ இவற்றைக் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சிலையை எடுத்துச் செல்வதற்காக வெள்ளிமேடுப் பேட்டை பகுதியில், சாலை விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அந்தப் பாறையில் பெருமாள் முகம் செதுக்கப்பட்டுள்ளதால், அதைக்காட்டி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் ஒப்பந்தக்காரர்களால் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக யார் மீதும் இதுவரை எவ்விதச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும் இக்கல்லை எடுத்துச் செல்வதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு கட்டத்திலும் இவ்வளவு சட்ட மீறல்கள் இருந்தும், சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

’ஜெ;  மரணம் – சந்தேகம் மரணம்? -ரிச்சர்ட் பீலேவுக்கு சம்மன்!

#Petta டீசர் வெளியானது!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*