வெட்கப்பட வேண்டியவர்கள் நாம்தான் மனிதி அல்ல!

அய்யப்பனை வழிபடச் சென்ற தமிழ் பெண்களுக்கு என்ன நடந்தது? தொடரும் போராட்டம்!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண் வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதற்காக சபரிமலை சென்று திரும்பியுள்ள மனிதி அமைப்பினர் அங்கு செல்லலாமா?  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அப்படி செல்வது சரியா? என்பது போன்ற கேள்விகள் பொது வெளியில் எழுப்பப்படுகின்றன.

தமிழகம் கேரளம் இரு மாநிலங்களுக்குமே பெண்  விடுதலை, சாதி ஒழிப்பு போராட்டத்தில் நீண்ட கால வரலாறும், மரபும் உள்ளது. தமிழகத்தை விட மிகக் கொடிய சாதிக் கொடுமைகள் நடந்த பகுதிதான் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானம். மன்னர்களுக்கு தீங்கு என்றால் சூத்திரக்குழந்தைகளை பிடித்துச் சென்று  நெஞ்சில் செம்புப் படயத்தால் கீறி நான்கு மூலையிலும் மண்ணில் புதைத்து விடுவார்கள். இது கற்பனை அல்ல, பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறு.

இந்த வரலாற்றுக் கொடுமைகளுக்கு அய்யங்காளியும், வைகுண்டரும், தந்தை பெரியாரும், இடதுசாரிகளுமான குரல் கொடுத்து ஓரளவு கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வந்தாலும், கேரள கோவில் நடைமுறைகள் தமிழகத்தைக் காட்டிலும் வேறாக உள்ளது. தமிழகத்தில் பிறப்படுத்தப்பட்டவர்கள் கோவில் பூசாரிகளாக வர முடியும், ஆனால், கேரளத்தில் தேவசம் போர்ட் என்னும் அரசுக்கு சொந்தமான கோவில்கள் கூட இன்னும் வழி வழியாக நம்பூதிரிகளின் கைகளில்தான் இருக்கிறது. சபரிமலையிலும் நம்பூதிரிகளின் அதிகாரிகள் கைவிட்டுப் போய் விடும் என்ற பதட்டத்தில்தான் பெண் வழிபாட்டை அனைத்து சாதி ஆணாதிக்க வெறியர்களின் உதவியோடு பெண்களை சபரிமலை கோவிலை நெருங்க விடாமல் செய்கிறார்கள்.

நீண்ட சட்டப் போராட்டத்தின் பின்னர் சபரிமலையில் வயது வேறுபாடின்றி பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பல விவகாரங்களில் மிக மோசமான தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் பெண்களுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பையே பலரும் சந்தேகிக்கிறார்கள். உச்சநீதிமன்றம் மீது முன்னெப்போதையும் விட விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், கேரளாவில் பாஜக வலிமையாக காலூன்ற சபரிமலையை முன் வைத்து விரிந்த திட்டம் ஒன்றை பாஜக வகுத்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் அதற்கு ஒரு வாய்ப்பை இந்த  தீர்ப்பின் மூலம் உருவாக்கிக் கொடுக்கிறதோ என்ற சந்தேகத்தை புறந்தள்ளி விட முடியாது. என்றாலும், இதுவரை சபரிமலை சூழல் பாஜக விரும்பியது போல பெருங்கலவரமாக மாறவில்லை. கேரள அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் மத்திய தரவர்க்கத்தை உத்தரபிரதேசத்தில் வதந்திகள் மூலம் கலவரத்திற்கு  தூண்டுவது போல தூண்ட முடியவில்லை. அதற்குரிய நேரமும் காலமும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதைத்தான் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது என்று சந்தேகிப்பவர்களும் உண்டு.

இரண்டாவது, இடதுசாரி  சிபிஎம் அரசின் கொள்கை முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவது என்று நம்பித்தான் பல பெண்கள் சபரிமலை செல்கிறார்கள். ஆனால், கேரள அரசோ பாம்புக்கும் மீனுக்கும் இடையில் நடக்கிறதோ என்ற சந்தேகம் மனிதி பெண்களின் பயணத்தின் பின்னர் உருவாகிறது.

மனிதி பெண்களில் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் முறையாக அய்யப்பனுக்கு விரதமிருந்து சபரிமலை செல்கிறார்கள்.  அய்யப்பனை வழிபட நினைக்கும் 50 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாகவும், அவர்கள் உரிமையை நிலை நாட்டிக் கொடுக்கவுமே கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதி பெண்கள் உடன் செல்கிறார்கள். இதில் என்ன தவறைக் கண்டு விட முடியும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார்தான் கடவுள் நம்பிக்கை உள்ள பல பக்தர்களை அழைத்து கோவிலுக்குள் சென்றார். எனவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், அங்கு செல்லலாமா என்ற கேள்வியே அபத்தமானது.இப்படிக் கேட்கிறவர்கள் அங்குள்ள இடது சாரி அரசுக்கு எதுவும் சிக்கல் வந்து விடக்கூடாது என்றே கேட்கிறார்கள்.

இந்த பிரச்சனை துவங்கி பல மாதங்கள் ஆகி விட்டது. இதுவரை கேரள அரசையும் பினராயி அரசையும் தமிழக முற்போக்காளர்கள் ஆதரித்தே வருகிறார்கள். ஆனால், கேரள அரசு கொள்கை முடிவு எதனையும் எடுக்காத காரணத்தால் பாஜகவை இந்த விவகாரத்தில் எதிர்கொள்வதற்கான மக்கள் பலத்தை கொண்டிருந்தும் அது பொதுவெளியில் அதை வெளிப்படுத்த தயங்கி நிற்கிறது.

இந்த சூழலில் இருந்துதான் மனிதி பெண்களின் சபரிமலை பயணத்தை பார்க்க முடியும். மனிதி அமைப்பினர் பக்தர்கள் என்ற போர்வையில் பொறுக்கிகளால் துரத்தப்பட்டார்கள், பெண்கள் உயிருக்கு அஞ்சி ஓடினார்கள் என்றால் அதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் மனிதி அமைப்பினர் அல்ல, நாம்தான்.  பெண்கள் வழிபட, தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்ல என போராட்டத்தின் அனைத்து முற்போக்கான வடிவங்களையும் ஆதரிப்பதே அரசியல் தீர்க்கமான முடிவாக இருக்க முடியும்.

#Sabarimalai #Sabarimalai_women_issue #Sabarimalai_verdict #Pinaroy_Vijayan #kerala_politics #manithi #மனிதி

மோடியை டென்ஷனாக்கும் ஸ்டாலின்!

வேதானந்தாவுக்காக எடப்பாடி நடத்திய என்கவுன்டர் கொலைகள்!

திருச்சியை உலுக்கிய #கருஞ்சட்டைப்_பேரணி

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*