அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப  நாடகங்கள்!

எந்த ஒரு லோக்சபா உறுப்பினரும் தன்னிச்சையாக பேசி விட முடியாது. முன்கூட்டி இந்த விஷயம் பற்றி பேசப் போகிறேன் என நோட்டீஸ் கொடுத்து  அவைத்தலைவர் நேரம் ஒதுக்கும் போதுதான் பேச வேண்டும். பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்கள், மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேசப்படும் விஷயங்களுக்கு  பெரும்பாலும் அவைத்தலைவர் அனுமதி கொடுக்காத நிலையில், கடந்த சில தினங்களாக தம்பிதுரைக்கு மட்டும் பாஜக அரசை விமர்சிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. மேலும், தம்பிதுரைக்கு  முறையாக பாஜக தரப்பில் இருந்து பதிலும் சொல்லப்படுகிறது. தோராயமாக தம்பிதுரை “மாநிலங்களை பாஜக வஞ்சிக்கிறது. நிதி கொடுப்பதில்லை” என்பதாகவே உள்ளது. இதைத்தானே கடந்த இரு ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். அப்படியே பேசினாலும் பாஜகவின் தோளோடு தோள் நின்று அரசியல் களத்தில் இவர்கள் பணி செய்யவில்லையா?

#

பாஜக-அதிமுக தேர்தல்  நிர்பந்த உடன்பாட்டை பேசி முடித்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். இந்த கூட்டணி கட்சிக்குள்ளும், பொது மக்களிடமும் வெறுப்பை சம்பாதிக்கும் சூழல், பாஜக என்றால்  தமிழகத்தில் வெறுப்பு நிலவும் பட்சத்தில் அந்த உஷ்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, நாங்கள் பாஜகவுடன்  தேர்தல் கூட்டணி வைக்கிறோமே தவிற இது கொள்கை கூட்டணி அல்ல, நாங்கள் கூட்டணி வைத்தாலும் பாஜகவின் ஆட்டங்களுக்கு பலியாக மாட்டோம் என்று ஒரு மாயத்தோற்றத்தை தமிழகத்தில் உருவாக்கியாக வேண்டிய தேவை அதிமுகவுக்கு உள்ளதால் தம்பிதுரையை நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு நாடகத்தை  அரங்கேற்றுமாறு அதிமுக தலைமையே தூண்டுகிறது. இதுதான் தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோபத்தின் அரசியல்.

#

ஒரு வேளை இது தவறாக இருக்கும் பட்சத்தில் பாஜக- அதிமுக கூட்டணியை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த கூட்டணி வெல்லுமோ வெல்லாதோ ஆனால்,  அதிமுகவின் நலன்களுக்கு மக்கள் விரோத பாஜகவுடன் கூட்டணி வைத்து அவர்களை முதுகில் சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டு தம்பிதுரை வெளியேற வேண்டும். இல்லை என்றால் இவை அனைத்தும் நாடகங்களாகவே பார்க்கப்படும்.

தம்பிதுரையை வைத்து நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*