பாசிஸம் 2.0: ஆனந்த் டெல்டும்டே கைது..!

ஆனந்த் டெல்டும்டேவை கைது செய்வதற்கான நான்கு வார கால உச்சநீதிமன்ற தடை இன்னும் முடியவில்லை. அதற்குள் இன்று அதிகாலை 3.00 மணிக்கு அவரை கைது செய்திருக்கிறது காவல்துறை.கடந்த ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோராகானில் நடைபெற்ற மாநாடு, எல்கார் பரிசத் இசை நிகழ்ச்சி… அதன்பிறகான வன்முறைகள் தொடர்பாகவே இந்த கைது.

2018 ஜூன் மாதத்தில் சோமா சென், சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவத், ரோனா வில்சன், சுதிர் தவாலே ஆகிய ஐந்து பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். பிறகு ஆகஸ்ட் மாதத்தில் சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா, வெர்னன் கன்சால்வேஸ், கவ்தம் நவ்லகா, வரவர ராவ் ஆகிய மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பத்து பேருமே இந்தியாவின் முக்கியமான சமூக செயற்பாட்டாளர்கள். அரச அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வருபவர்கள். இவர்கள் அத்தனை பேரையும், ‘Urban Naxals’ என்ற முத்திரையுடன் சிறையில் தள்ளியிருக்கிறது பாரதிய ஜனதா அரசு.

கார்ப்பரேட் பாசிஸசமும், இந்து பாசிஸமும் இணைந்து கலவையாக இன்று பாரதிய ஜனதா கட்சி எழுந்து நிற்கிறது. ரிசர்வ் வங்கி, உயர் கல்வி நிறுவனங்கள், நீதித்துறை, ஊடகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளிலும் தனக்கு இசைவான நபர்களை அமர வைத்துவிட்டு இதோ அடுத்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக வருகிறது பா.ஜ.க.

பெரும்பான்மை மக்களின் நலன் கருதாத; ஒரு சிறு கூட்டத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் தன்மையில் இந்து பாசிஸம் என்பது கார்ப்பரேட் பாசிஸத்தின் முன்னோடி. பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி கொழுத்து அக்ரஹார உப்பரிகைகளில் உயிர்வாழும் பார்ப்பன பாசிஸம், கார்ப்பரேட் பாசிஸத்தின் இந்திய நகல். சமத்துவ மறுப்பு, ஜனநாயக மறுப்பு, கருத்துரிமை மறுப்பு, உழைப்புச் சுரண்டல் என அனைத்து அம்சங்களிலும் இரண்டும் ஒத்த தன்மைகளை கொண்டிருக்கின்றன.
கார்ப்பரேட் பாசிஸம், ‘அனைத்தையும் சந்தை தீர்மானிக்கும்’ என்கிறது. இந்து பாசிஸம், அனைத்தும் பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக சொல்கிறது. இவ்வாறாக, எல்லா வகையிலும் ஒத்த தன்மை கொண்டிருக்கும் இவ்விரண்டு பாசிஸ நிகழ்ச்சிநிரல்களையும் தமது இரு கைகளில் ஏந்தி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. இதை அம்பலப்படுத்தி; சூழலின் அபாயத்தை விளக்கி மக்களிடம் தொடர்ந்து இயங்கி வரும் ஆனந்த் டெல்டும்டே போன்ற கருத்துருவாக்க அறிவுஜீவிகளை முடக்கிப் போடும் முயற்சிதான் இந்த கைதுகள்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இந்த 10 பேர் மற்றும் டெல்டும்டேவையும் சேர்த்து இந்த 11 பேர் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பது மிக வெளிப்படையானது. சொல்லப்போனால், பீமா கோரேகான் நிகழ்ச்சி குறித்து ஆனந்த் டெல்டும்டே அரசியல் ரீதியான மாற்றுப் பார்வைகளையே கொண்டிருந்தார். அந்நிகழ்வு தலித் மக்களை அடையாள அரசியலின் கீழ் தள்ளிவிடும் அபாயம் கொண்டிருப்பதாக கருதினார். இதை வெளிப்படையாக எழுதியும் இருக்கிறார். இவ்வாறான இவர்களின் முந்தைய செயல்பாடுகள், அவற்றின் தன்மை, வரம்பு குறித்து எந்த கவலையும் இல்லாமல் மூர்க்கமான கைதுகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

உண்மையில், மோடி இப்போது நிகழ்த்திக்கொண்டிருப்பது ஒரு திட்டவட்டமான பாசிஸம். பார்ப்பனியத்தின் செயல்பாடுகள் காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றம் பெற்றிருப்பதைப் போல, நடப்பில் உள்ள ஜனநாயகம் என்ற எல்லைக்கோட்டின் உள்ளே நின்றுகொண்டு, இதன் ஒவ்வொரு துணுக்கையும் பாசிஸத்தின் புதிய வரையறைப்படி மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இது பாசிஸம் 2.0

Barathi Thambi

 

#Anand_Teltumbde_Arest

ஐந்தே ஆண்டுகளில் மோடியின் அபார சாதனை இதுதான்!

 

 

 

இளையராஜா ‘75’ பிரமாண்ட ஏற்பாடுகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*