பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்?

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் , முடிவு தெரிந்தவுடன் அறிவிப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், நேரடியாக  அதிமுக, பாமக கூட்டணி அமைப்பதற்காக மீடியேட்டர் வேலைகளை பாஜக ஒருங்கிணைத்து வரும் நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்கள்.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேகத்துடன் காங்கிரஸ் இருக்கிறது.பாஜகவை பொறுத்தவரை வட மாநிலங்கள் மீண்டும் கை கொடுக்குமா என்று சந்தேகப்படுவதால் தென் மாநிலங்களை குறிவைக்கிறது, ஆந்திரம்,கர்நாடகம், கேரளம், தமிழகம், அதிலும் குறிப்பாக  தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கோடு அதிமுகவுடன் கட்டாய கூட்டணி  அமைக்கிறது பாஜக.

அதிமுக நிலைப்பாடு

அதிமுகவைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி பற்றி வெளிப்படையாக பேச தயங்குகிறது. ஆனால், கிட்டத்தட்ட  ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவே மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கூட்டணி வைத்தே ஆக வேண்டிய நிர்பந்தம்.  சசிகலா மற்றும் தினகரனை பகைத்துக் கொண்ட பாஜக, ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுக தன்  கட்டுக்குள் வந்த பிறகு தினகரனின் செல்வாக்கைக் கண்டு ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அடைந்தது. சசிகலா சிறை சென்றால் அந்த கூடாரமே காலியாகி விடும் என்று பாஜக நினைத்த நிலையில், தினகரன் தாக்குப்பிடித்து நிற்கிறார். அதிமுகவில் ஒபிஎஸ்-இபிஎஸ் தரப்பை விட செல்வாக்குள்ள தலைவர் நானே என்பதை அதிமுக தொண்டர்கள் நம்பும் விதமாக அவரது செயல்பாடுகள் உள்ள நிலையில், அவரையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தியது. ஒன்றிலோ அதிமுகவுடன் இணையலாம் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற பாஜகவின் கோரிக்கைக்கு தினகரன் விட்டுக் கொடுக்கவில்லை. அதிமுகவில் இணைவேன் ஆனால், தலைமைப்பதவி எங்களுக்கு வேண்டும். பாஜக மூலமாக கூட்டணிக்குள் நுழைய விரும்பவில்லை என்று கூற பாஜக தினகரனை தங்கள் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியை இன்னும் தொடர்கிறது.

இது ஒரு புறமிருக்க புதிய தமிழகம், தேமுதிக, பாட்டாளிமக்கள் கட்சி இவர்களை இணைத்து அதிமுகவை பிரதானமாக வைத்து ஒரு கூட்டணியை உருவாக்கி முடித்து விட்டது பாஜக. கிருஷ்ணசாமி நீண்ட காலமாகவே பாஜக நிழலில் நின்று அரசியல் செய்து வருவதால் பாஜக கூட்டணியில் இணைவது அவருக்கு நெருடலாக இல்லை. ஆனால், “கிழக்கே உதிக்கும் சூரியம் மேற்கில் உதித்தாலும் இரு திராவிடக் கட்சிகளுடனும் இனி கூட்டணி இல்லை” என்றார் ராமதாஸ். இதை அவர் சொன்னது ஒருமுறை அல்ல பல முறை சொன்னார்.

ஆனால்,  திராவிடக் கட்சிகளுள் ஒன்று என நம்பப்படும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது பாமக. ஆனால், பாமகவும் நேரடியாக பாஜவுடன் கூட்டணி என்று சொல்ல தயக்கம் காட்டுகிறது. காரணம் பாஜக மீது மக்களுக்கு உள்ள  அதிருப்தி  பாஜகவுடன் சேர்ந்து வாக்குக் கேட்டால் வன்னியர்களே ஓட்டுப் போட மாட்டார்கள். அந்த அளவுக்கு பாஜக வெறுப்பு மக்களிடம் உள்ளது. அதற்கு வன்னியர்கள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அதே போல, மாமல்லபுரம் சித்திரை  திருவிழாவையொட்டி டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோரை சிறையில் அடைத்து துன்புறுத்தியவர் ஜெயலலிதா. அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இபிஎஸ்-ஒபிஎஸ் ஆகியோருடன் கூட்டணி வைத்து இதே முகங்களோடு வன்னிய மக்களிடம் ஓட்டுக் கேட்பதிலும் சிக்கல் இருக்கிறது. என்றாலும் அதிமுகவுடன் கூட்டு என்றால் ஓரளவு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பாஜகவுடன் கூட்டு என்றால் மக்கள் நம்மையும் வெறுப்பார்கள் என்பதால். நேரடியாக பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி என்று சொல்ல வேண்டாம். அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி ஆனால், பிரதமர் வேட்பாளர் மோடி என்று மூக்கை  நேரடியாக தொடாமல் கழுத்தைச் சுற்றி தொட விரும்புகிறது பாமக. அது வெற்றி பெறுமா என்பதை  காடு வெட்டி குருவின் ஆன்மாதான் சொல்ல வேண்டும்.

#அன்புமணிராமதாஸ் #டாக்டர்ராமதாஸ் #வன்னியர்சங்கம் #காடுவெட்டிகுரு #Anpumani_Ramdas #pmk_admk_bjp #பாமக_அதிமுக_கூட்டு #பாமக_பாஜக_கூட்டு #2019_நாடாளுமன்றதேர்தல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*