#பேரன்பு –ஷர்மிளா செய்யத்!

மூளை முடக்குவாதம் பாதித்த பெண்ணின் அவளது தந்தையின் உள் உணர்வுப் போராட்டங்களை, சமூக அழுத்தங்களைத் தொட்டிருக்கும்பேரன்புதிரைப்படத்தை பார்த்தவர்கள், “மார்கிரேடா வித் ஸ்ட்ரோ” (Margarita With A Straw) என்ற திரைப்படத்தையும் பார்த்துவிடுவது நல்லது.

மார்கிரேடா வித் ஸ்ட்ரோ” (Margarita With A Straw) ஒன்றும் உலக சினிமாவெல்லாம் இல்லை. இந்தியப்படம் தான். உலகத்தரமானது. மனித உணர்வுகள் ஒன்றும் கண்டத்திற்கு கண்டம், நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. மனித நடத்தைகள் வேறுபடலாம். என்றாலும் பேரன்பு படத்திற்கு ஈடாகச் சொல்லத்தக்க ஒரு படம் அதற்கு முன்பே இந்தியாவில் வந்துவிட்டதென்பது கூடுதல் ஆறுதல்.

2014 இல் வெளியானமார்கிரேடா வித் ஸ்ட்ரோ” (Margarita With A Straw) மூளை முடக்குவாதம் பாதித்த கல்லூரி மாணவி லைலாவின் உணர்வுகளை வெளிச்சமிடுகின்ற கதை. சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி தனது பாலுணர்வுத் துண்டல்களினால் உண்டாகும் கொண்டாட்டங்கள், மனக் கிளர்ச்சிகள், பாலினக் கவர்ச்சியினால் அவள் அடையும் பேரானந்தங்களையும், பாலின்பத் தேவையை அடைந்து கொள்வதற்கான வடிகாலையும்தேடும் அவளின் கண்டு பிடிப்புகள்ஒழுக்கம்என்ற ஒற்றை வார்த்தைக்குள் சமூகம் ஒளித்துவைத்துள்ள அத்தனை உள்ளார்ந்த அந்தரங்க உணர்வுகளின் மீதும் படிந்துள்ள இறுக்கத்தைத் தளர்த்தி இருளை விலக்குகிறது.

பாலிவூட்டில் முன்னொருபோதும் ஆய்வு செய்யாத ஒரு பேசு பொருளை இத்திரைப்படம் அலசிப் பேசியது.

ஓர்பாலின உறவினளான பார்வைக் குறைபாடுடையவளான கானும் என்ற பெண்தோழியிடம் லைலா நெருங்குவது அவர்களது உறவின் வெளிப்படைத் தன்மை என்று அந்தரங்கமான உணர்வுகளை மட்டுமல்ல, மூளை முடக்குவாதம் பாதித்த லைலாவின் சுய முடிவுகள், தீர்மானங்கள் அவள் ஒரு சுயம் நிரம்பிய பெண்ணென்றும் உயர்த்திக் காட்டியது. மூளை முடக்குவாதத்தினால் பெண்மையும் சுயகௌரவமும் முடங்கிப் போக அனுமதியாத உறுதியான பெண்ணாக இருந்தாள் லைலா. அதற்கு அவளுக்கு வாய்த்த ஒத்துழைப்பான புரிந்துணர்வான பெற்றோரும், கல்வியும் காரணம் என்கின்ற தளம் முக்கியமாகின்றது.

தமிழில் பேரன்பாக வந்திருக்கும் இதே மூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தமிழ் கலாசாரத்திற்குள்ளும், ஆண்மைய சிந்தனை ஓட்டத்தின், புரையோடிப்போன சமூக முடிவுகளுக்குள் இயக்குநர் குறுக்கிவிட்டிருப்பதைப் புரிந்து கொள்வதென்றால்மார்கிரேடா வித் ஸ்ட்ரோ” (Margarita With A Straw) வை ஒரு முறை பார்த்துத்தான் ஆகவேண்டும்.

நானொரு பிரமாதமான சினிமா ரசிகையோ விமர்சகரோ இல்லை. ஆனால் பேரன்பு படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பேசுபொருளைத் தொட்டிருக்கிறது. அவை எனது தனிப்பட்ட ஈடுபாடுகளுடன் சம்பந்தப்பட்டவை. மாற்றுத் திறனாளிகளோடு மட்டுமல்ல மூளை முடக்குவாதம் (Cerebral Palsy (CP) )பாதிக்கப்பட்டவர்களோடும் நேரடியாகப்பணியாற்றியிருக்கிறேன்.வாழ்ந்திருக்கிறேன். சிறியளவில்ஆய்வுகளும் மேற்கொண்டுள்ளேன்.இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் Multiple Sclerosis Society of India (MSSI) நிறுவனத்தில் நேரடியாகப்பணியாற்றிய அனுபவம் மூளை முடக்குவாதம் பாதித்தவர்களை எனக்கு அருகாகக் கொண்டுவந்திருக்கிறது. உடை மாற்றுதல், உணவு உண்ணுதல்,கழிப்பறை பயன்படுத்துதல்,விளையாட்டு, பேச்சு, தொடர்பாடல்போன்ற பல்வேறு பயிற்சிகளை மூளை முடக்குவாதம் பாதித்தவர்களுக்கு அளித்திருக்கிறேன். அத்துடன் Monfort Community Development Society (MCDS) நிறுவனத்தின் சிறப்புக் குழந்தைகளின் சமுதாயம் சார்ந்த மறுவாழ்வுப் பணியில் (Intergrated Child Development ) ஆய்வு மாணவியாக இருந்திருக்கிறேன். இந்தப் பின்னணிகள் தமிழில் முதல் முறையாக வரும் மூளை முடக்குவாதம் பாதித்த ஒரு பெண்ணின் கதையை திரையில் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டின.

மூளை முடக்குவாதத்தில் நான்கு பிரதான பிரிவுகள் உள்ளன.

1) ஸ்பாடிக் மூளை முடக்குவாதம்(SPASTIC CEREBRAL PALSY)

2) டிஸ்கயனெடிக் மூளை முடக்குவாதம்(DYSKINETIC CEREBRAL PALSY)

3) அடாக்ஸிக் மூளை முடக்குவாதம்(ATAXIC CEREBRAL PALSY)

4) மிக்ஸ்ட் மூளை முடக்குவாதம் (MIXED CEREBRAL PALSY)

பேரன்பு திரைப்படத்தில் காட்டப்படும் பாப்பாவுக்கு இருக்கக்கூடிய மூளைமுடக்கு வாதமானது மேலுள்ள நான்கு பிரிவுகளில் முதலாவது. அதாவது ஸ்பாடிக் மூளைமுடக்குவாதம். இதுவே மிகையாகஉள்ள மூளை முடக்குவாதம். ஜெர்க்கிஅசைவுகள் கடினமான தசை கொண்டஇந்த வகை மூளை முடக்குவாதம் 70% – 80% என்பதாக மருத்துவர்களால் கணிக்கப்படுகின்றது. இரு கைகளும் கால்களும் பாதிக்கப்பட்ட (குவாட்ரிப்ளிஜிக்) சிறுமியாக பேரன்பில் வரும் சாதனாவின் நடிப்புமார்கிரேடா வித் ஸ்ட்ரோ” (Margarita With A Straw) கதாநாயகி கொயிச்லின் நடிப்புக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை.

மகளின் பாலுணர்வுத் தேவையை ஓர் ஆண் பாலியல் தொழிலாளியைக் கொண்டாவது தந்துவிடவேண்டும் என்று துணிந்த தந்தை முடிவாக பாலியல் தொழிலாளி மீராவை மனைவியாக்கிக் கொள்கிறார். மகளின் தனிமையை தாயென்ற உறவின் மூலமாக போக்கிவிடுவதான முயற்சியே அது. இது தமிழ் கலாசாரத்திலும் பண்பாட்டிலும் ஊறிப்போன சிந்தனையின் வெளிப்பாடு.

சுய இன்பம், மூளை முடக்குவாதம் பாதித்தவர்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு செயல்பாடாகவேபேரன்புமட்டுப்படுத்துகிறது. அதோடு அதுவொரு தவறான செயலென்றும் காண்பிக்கிறது. சமூகத்தில் புரையோடிப்போன சிந்தனைகளைக் கட்டுடைப்புச் செய்யும் திரைக்கதை திருமணம் என்ற குடும்ப நிறுவனம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வென்று முடிவுறுத்துகிறது.

மம்மூட்டியின் தனிமையும் அவருக்குள்ளிருந்த பாலியல் வேட்கையும்தான் மகளைப் பார்த்துக் கொள்ள பணிப்பெண்ணாக வந்தவளிடம் சடுதியாக ஏமாறவைக்கிறது. மகளின் தனிமைச் சிறையை உடைப்பதென்ற பரிமாணத்துடன் படத்தின் முடிவில் அவரது தேவைகளுக்கு, மன உளைச்சல்களுக்கு, சமூக அழுத்தங்களுக்கு, நடைமுறைச் சிக்கல்களுக்கு தமிழ் கலாசாரம் ஏற்கும் வகையில்தான் தீர்வு காணப்பட்டாக வேண்டும் என்ற அழுத்தம இயக்குநருக்கு இருந்திருக்கிறது. அந்த தீர்வே மகளுக்கும் தீர்வென்றாகிறது.

போதாமைகளும் அறியாமைகளும் முடக்கிவைத்திருக்கும் தமிழ் சமூகத்திற்குபேரன்புவரமாக இருக்கலாம்.

#peranpu #raam #பேரன்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*