#Say_No_to_war ”நமது அறிவு நம்மை கருணையற்றவர்களாக்கி விட்டது” – சாப்ளின்

பிடிபட்ட இந்திய இராணுவ பைலட்டின் விடியோவை வெளியிட்டது பாகிஸ்தான்!

எல்லையில் போர் பதட்டம்!

”என்னை மன்னிக்கவும், நான் ஒரு பேரரசனாக இருக்க விரும்பவில்லை. அது எனது தொழிலுமல்ல. நான் எவரையும் ஆட்சி செய்யவோ அல்லது வெற்றிகொள்ளவோ விரும்ப வில்லை. என்னால் முடிந்தால் யூதர், ஜெண்டில், கறுப்பர், வெள்ளையர் என்று ஒவ்வொருவருக்கும் நான் உதவியாக இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் உதவிடவே விரும்புகிறோம். மனிதர்கள் அவ்வாறே இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் மற்றவரின் துன்பங்களிலிருந்தல்ல மாறாக மற்றவரின் மகிழ்விலேயே வாழ விரும்புகிறோம். நாம் எவரையும் புறக் கணிக்கவோ அல்லது தாழ்வாகவோ நினைக்க விரும்பவில்லை. இந்த உலகத்தில் அனைவரும் வாழ இடமிருக்கின் றது. இந்த உலகம் அனைவருக்குமான வளங்களை வைத்திருக்கின்றது. வாழ்வின் வழியானது சுதந்திரத்துடனும் அழகுடனும் திகழ வேண்டும், ஆனால் நாம் அந்த வழியை இழந்து விட்டோம்.

பேராசை மனிதரது ஆன்மாவை விஷமாக்கியுள்ளது. அது மனித இனத்துக்கு மாபெரும் நிராகரிப்புடன் கூட தடையாகிவிட்டது. அது மனித குலத்தைத் துன்பத்திலும் இரத்த வெள்ளத்திலும் உந்தித்தள்ளியுள்ளது. நாம் நமது வேகத்தை அதிகப் படுத்தியுள்ளோம். ஆனால் நம்மை நாமே மூடிக் கொண்டுள்ளோம். நிறையனவற்றைக் கொண்டு வந்து தந்த மாபெரும் இயந்திரங்கள் நம்மைப் போதாமையை நோக்கித் தள்ளியுள்ளன. நமது அறிவுகள் நம்மை வக்கிரமானவர்களாக மாற்றியுள்ளன. நமது புத்திசாலித்தனங்கள் கடுமையானவையாகவும், கருணையற்றவையாகவும் உள்ளன. நாம் நிறைய யோசிக்கின்றோம். ஆனால் குறைவாக உணர்கின்றோம். நமக்கு இயந்திரங்களை விட மனிதத்துவம் மிகத்தேவை. புத்தி சாலித்தனங்களை விடக் கருணையும் செறிவான செயல்களும் தேவை. இத்தகைய தன்மைகள் இல்லையெனில் வாழ்க்கை வன் முறைக்களமாகிவிடும். இழந்து போகக் கூடியதாகிவிடும்.

வானூர்திகளும், வானொலிகளும் நம்மை நெருங்கி வரச் செய்துள்ளன. இத்தகைய கண்டுபிடிப்புகள் இயற்கையாகவே நல்லவற்றிற்காக ஏங்குகின்ற உலக சகோதரத்துவத்துக்காக ஏங்குகின்ற மனித குலத்தை ஒன்றிணைக்க வேண்டும். இப்போது கூட என்னுடைய குரலானது உலகிலுள்ள, இன்றைக்கு நிலவும் இந்த அமைப்பு முறைகளால் சித்ரவதைக்காளான, சிறைப்பட்ட நம்பிக்கையோடிருக்கும் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. எனது குரலைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கையை இழக்காதீர்கள். நமது துயரம் என்னவென்றால் தற்போதைய துன்பமாகக் கடந்து கொண்டிருக்கும் பேராசை. மனித குலத்தின் முன்னேற்றம் குறித்து அக்கறை கொள்வோரிடம் கசப்பான அனுபவமாகியுள்ளதுதான். மனித நிராகரிப்புக்கள் சென்றொழியும், சர்வாதிகாரிகள் இறந்து போவார்கள், மனித குலத்திடமிருந்து பறித்த அவர்களின் அதிகாரம் மனித குலத்திடமே திரும்ப வரும். மனிதர் என்றும் மரித்துப்போக மாட்டார், சுதந்திரமும் என்றும் மறைந்து போவதில்லை…

வீரர்களே, உங்களை அதிகாரத்துக்குட்படுத்துபவரும், அடிமைப்படுத்துபவரும், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன யோசிக்க வேண்டும், என்ன உணரவேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கும் கொடுங்கோலர்களிடம், உங்களை ஒப்புக்கொடுக்காதீர்கள். உங்களைப் பயிற்றுவிக்கும், உங்கள் உணவைத் தீர்மானிக்கும், உங்களை மந்தைகளைப் போல நடத்தும், பீரங்கிகளில் குண்டுகளாகப் பயன்படுத்தும் சர்வாதிகாரிகளிடம் உங்களை ஒப்புக் கொடுக்காதீர்கள். இயந்திர மனிதர்களிடம் உங்களை ஒப்புக் கொடுக்காதீர்கள்! நீங்கள் இயந்திரங்களல்ல! நீங்கள் மந்தைகளல்ல! நீங்கள் மனிதர்கள்! நீங்கள் மனிதகுலத்தின் மீதான அன்பை உங்கள் இதயங்களில் வைத்திருங்கள்! நீங்கள் எவரையும் புறந்தள்ளாதீர்கள்! அன்பற்றவர்களையும் மனித இயல்பு மறந்தவர்களையும் நிராகரியுங்கள் வீரர்களே! அடிமைப்படுத்துவதற்காகப் போராடாதீர்கள் சுதந்திரத்திற்காகப் போராடுங்கள்!

லூக்கா 17வது அதிகாரத்தில் எழுதியுள்ளார். “கடவுள் ராஜ்ஜியம் மனிதரிடத்திலே” அவர் ஒரு மனிதரை மட்டும் சொல்லவில்லை. ஒரு குழுவைச் சார்ந்த மனிதரை மட்டும் சொல்லவில்லை. அனைத்து மனிதர்களிடமும் என்றே குறிப்பிட்டுள்ளார். நீங்கள், மக்களாகிய நீங்கள் அதிகாரமுள்ளவர்கள். இயந்திரங்களை உருவாக்கும் திறனுள்ளவர்கள். மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுள்ளவர்கள்! மக்களாகிய உங்களிடம் இந்த வாழ்க்கையைச் சுதந்திரமாகவும், அழகியதாகவும், அற்புதமான பயணமாகவும் மாற்றிக்கொள்ளும் சக்தியுள்ளது!.

மேலும், ஜனநாயகத்தின் பெயரால், நாம் நமது சக்தியைப் பயன்படுத்துவோம், எல்லோரும் ஒன்றிணைவோம். நாம் ஒரு புதிய உலகத்திற்காகப் போராடுவோம். மனிதருக்கெல்லாம் உழைப்பதற்கு வாய்ப்புத் தருகின்ற, இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும், முதியவர்களுக்குப் பாதுகாப்பையும் தருகின்ற ஒரு நாகரிகமான உலகத்திற்காகப் போராடுவோம். ஆனால் இத்தகைய வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம், கொடுங்கோலர்கள் அதிகாரத்துக்கு வருகின்றார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைக்கிறார்கள்! அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றப் போவதில்லை! அதற்கான மன உறுதியும் விருப்பமும் அவர்களிடம் இல்லை!

சர்வாதிகாரிகள் தங்களைச் சுதந்திரமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை அடிமைப்படுத்துகிறார்கள். ஆனால் நாம் அத்தகைய வாக்குறுதிகளை உண்மையிலேயே நிறைவேற்றப் போராடுவோம்! தேசங்களின் தடைகளைக் கடந்தும், பேராசைகளைக் கடந்தும், நிராகரிப்பு, சகிப்பின்மையைக் கடந்த சுதந்திர உலகத்துக்காகப் போராடுவோம். நாம் பகுத்தறிவு நிறைந்த உலகத்துக்காகப் போராடுவோம். அறிவியல் மனிதகுலத்தின் மகிழ்வுக்காகப் பயன் படும் உலகத்துக்காகப் போராடுவோம்! வீரர்களே! ஜனநாயகத்தின் பேரால் நாம் ஒன்றிணைவோம்!

உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளினின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சாப்ளின் உரையின் எழுத்து வடிவம்.

பாமகவிலிருந்து விலகினார் துணை தலைவர் நடிகர் ரஞ்சித்!

புதியதமிழகம் கிருஷ்ணசாமியை கைவிட்டது பாஜக?

தலித் துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் மோடி!

அதிருப்தி அதிக தொகுதிகளைக் கேட்கும் பாஜக!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*