கலைஞர் இல்லாமல் திமுக  சந்திக்கும் முதல் தேர்தல்!

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை துவங்கிய 1949 முதல் அவர் 2018-ம் ஆண்டு கலைஞர் மறையும் வரை திமுக என்றாலே அது கலைஞர் மு.கருணாநிதிதான்.
திமுக என்ற மூன்றெழுத்தில் திராவிட என்ற முதல் எழுத்தை விட்டால் மு.கருணாநிதி என்று கூட பொருள் கொள்ளும் வகையில் திமுகவின் இதயநாடியாக அந்த இயக்கத்தில் கலந்தவர் கலைஞர். லட்சோப லட்சம் தொண்டர்களை தன் விரல் நுனியில் வைத்து இந்திய அரசியலையே ஆட்டிப்படைத்த கலைஞர் இல்லாமல் அவரது மகன் ஸ்டாலின் சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல்.
கலைஞர் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் தலைவரான பின்னர் சந்திக்கும் தேர்தல் மட்டுமல்ல, அதிமுக என்னும் வலிமையான கட்சி அதன் தலைவரை இழந்து பாஜக என்னும் அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் களமிரங்குகிறது.
மத்தியில் மோடி மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி என்று இரு பெரும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக கலைஞரின் மகன் திமுக என்னும் கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்தும் தலைவர் என்ற அந்தஸ்துடனும், 89 உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் என்ற அந்தஸ்துடனும் இந்த தேர்தலை முதன் முதலாக எதிர்கொள்கிறார்.
இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்னர் கலைஞரின் சமாதிக்குச் சென்ற ஸ்டாலின் வேட்பாளர் பெயர் பட்டியலை அங்கு வைத்து அமைதியாக நின்று வணக்கம் செலுத்திய பின்னர்தான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
திமுகவின் 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் சிக்கலானதும், சவால் நிறைந்ததுமான ஒரு தேர்தலை கலைஞர் இல்லாமல் ஸ்டாலின் எதிர்கொள்கிறார். திமுகவைப் பொறுத்தவரை இது தேர்தல் அல்ல போர். இந்த போரில் வென்றே ஆக வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு உள்ளது.
#திமுக_வேட்பாளர்கள் #கலைஞர்_இல்லாத_தேர்தல் #திமுக #2019_நாடாளுமன்றதேர்தல்

நெருப்பாற்றில் நீந்தும் தினகரன் -முடக்கிப் போட பாஜக அதிமுக சதி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*